சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா வழக்கறிஞர் விஜயதாரணி எம்.எல்.ஏ.
நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு கடந்த திங்கட்கிழமை (18-ந் தேதி) சட்டப்பேரவை மீண்டும் கூடியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்திருந்த தமிழ்ப்புத்தாண்டு தேனீர் விருந்தை ஆளும் கட்சி உள்பட அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் புறக்கணித்திருந்ததால், இது தொடர்பாக பா.ஜ.க. உறுப்பினர்கள் ஏதேனும் பிரச்சனையை கிளப்பக்கூடும் என்கிற சூழல் பேரவையில் இருந்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலினிடம் அதுகுறித்த எந்த பதட்டமும் இல்லை. அதேசமயம், கவர்னரின் தேனீர் விருந்தை நான் ஏன் புறக்கணித்தேன் என்பதை இந்த சபையும் தமிழக மக்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதற்கேற்ப, 110 விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஏழரைக் கோடி தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா கவர்னர் மாளிகையிலேயே 210 நாட்களாக முடங்கிக் கிடைக்கும் நிலையில், அதே கவர்னர் மாளிகையில் வைக்கப்படும் தேனீர் விருந்தில் கலந்து கொள்வது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பேரவையின் மாண்புகளை சிதைப்பதாகவும் அமைந்து விடும் என்பதாலேயே தேனீர் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டார் முதல்வர்.
கேள்வி நேரங்களின் போதும் சரி, மானியக் கோரிக்கை மீதான விவாதங்களின் போதும் சரி…நகைச்சுவைக்கு பஞ்சம் இருப்பதில்லை. அன்றைய தினம் கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் செங்கம் கிரி, தனது தொகுதியில் அரசுக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் சிப்காட் அமைக்க வேண்டும். ஆனா நிலம் எங்கிருக்கிறதென்று தான் தெரியவில்லை. அதனை கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று சொல்ல, இதற்கு பதில் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு, "நான் இருக்கும் வேலையை விட்டுவிட்டு, நிலத்தை கண்டுபிடிப்பதுதான் என் வேலையா? நிலத்தை கண்டுபிடிக்கும் துப்பறியும் வேலையை உறுப்பினரே செய்து நிலத்தை கண்டுபிடித்து தந்தால் சிப்காட் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்''’என்று சொல்ல, சபை முழுக்க சிரிப்பலை.
கோடைகால மின்வெட்டை தடுப்பது குறித்து காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேசினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, கோடைக் கால மின்தேவையைப் பூர்த்தி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்துவிட்டு, ”தமிழகத்தில் மின்வெட்டு எங்குமே கிடையாது” என்றார்.
வருவாய்த்துறையின் மானியக் கோரிக்கைகள் மீது உறுப்பினர்கள் பலரும் பேசினர். இதற்கு பதிலளித்த துறையின் அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். பட்டா வழங்கலில் உள்ள பிரச்சனைகளை சரிசெய்வது தொடங்கி துறையை முழுமையாக கணினிமயமாக்குவது வரை பல்வேறு நடவடிக்கைகளை விவரித்தார். பேச்சின் துவக்கத்தில் உதயநிதியை மிகவும் புகழ்ந்து பேசினார். புகழுரைகள் வேண்டாம் என பலமுறை முதல்வர் வலியுறுத்தியும் பேரவையில் இது நின்றபாடில்லை.
19-ந்தேதி நடந்த தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடந்தது. அப்போது, தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு உதவும் புதிய தொழிற்பூங்காக்கள், தொழிலக வீட்டுவசதித்திட்டம், சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கான வட்டி மானியத்தை நீட்டித்து வழங்குதல் உள்பட பல்வேறு அறிவிப்புகளை செய்தார் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு.
தமிழ் வளர்ச்சித்துறையின் மானியத்தில் பேசிய பா.ஜ.க. உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழ் சினிமாக்களில் இடம்பெற்ற "ஊ சொல்றியா மாமா, ஊ ஊ சொல்றியா?' பாடலையும், "ஆலுமா டோலுமா' பாடலையும் சொல்லி, இது நம் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றும், நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் இதுதான் நம் கலாச்சாரமா? என்று கேட்கக்கூடிய சூழல் வரும். தொன்மையான பண்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும். அதேபோல, பாடல் வரிகள் இந்தியில் வருகிறது. இதனை புரிந்துகொள்ள இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும்? என்று கேள்வி எழுப்ப, சபையே அவரை உற்று நோக்கியது. ஏனெனில், இந்தியை எப்படியாவது தமிழகத்தில் திணிக்க வேண்டும் என முயற்சிக்கிறது பா.ஜ.க. ஆனால் அக்கட்சியின் உறுப்பினர் இந்திக்கு எதிராகப் பேசுகிறாரே என எல்லோரும் உற்று நோக்கினார்கள். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தி வேண்டாம் என நீங்கள் சொல்வது மகிழ்ச்சி'' என்றபோது மேஜையை தட்டி ஆர்ப்பரித்தார்கள் தி.மு.க. உறுப்பினர்கள்.
பெண்களின் உடைகளுக்காக காஸ்ட்லியாக செலவு செய்ய வேண்டி யிருக்கிறது என்பதை சொன்ன நயினார் நாகேந்திரன், "என் மனைவிக்கு ப்ளவுஸ் தைக்க 1350 ரூபாய் கொடுத்துவிட்டு வந்தேன்'' என சொன்ன போது, உறுப்பினர்கள் சைடில் இருந்து "தையல் கூலி 5,000 வரை கொடுக்க வேண்டியிருக்குதுங்க...' என குரல் வர, சபையில் ஒரே குதூகலம். நெல்லை பாஷையில், ஜாக்கெட்டை ஜம்பர் என சொல்ல, உடனே நான், "ஜம்பர்னா பலருக்கும் புரியாது. ப்ளவுஸ்னு சொல்லுங்க'' என சொன்னதும், "ப்ளவுஸ்'னு சொன்னார் நயினார். அப்போது பாயிண்ட் ஆஃப் ஆர்டர் எடுத்த பொள்ளாச்சி ஜெயராமன், "ஜாக் கெட்டுக்கு இவ்வளவு கரெக்டா விலை சொல்றீங் களே எப்படி?' என நக்கலடிக்க, "டைலருக்கு 1350 ரூபான்னு என் மனைவி சொன்னாங்க. ஜாக்கெட் தைக்க இவ்வளவான்னு எனக்கு அதிர்ச்சியா இருந் தது'' என்றார் ரொம்பவும் அப்பாவியாக. இந்த ஜாக்கெட் விவகாரம் சபையில் ரசிக்கும்படியாக இருந்தது. சென்னை அருகே புதிய விமானநிலை யங்கள் அமையவிருப்பது கொள்கைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி, பெங்களூரை ஒட்டி ஓசூர் இருப்பதால், விமானத்திற்காக பெங்களுரை நோக்கி ஓட வேண்டியிருப்பதை எளிமையாக விவரித்து ஓசூருக்கு விமான நிலையம் கொண்டுவரும் முயற்சியை அரசு எடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தினார். ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் அசோகன் பேசியதும் நல்ல விசயம். தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்த்தது எந்த ஆட்சியில் என ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் விவாதித்தது ஆக்கப்பூர்வமாக இருந்தது.
20-ந்தேதி பேரவை கூடியதும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடம் ஒருவித பரபரப்பு இருந் தது. மயிலாடுதுறையில் கவர்னர் கான்வாய் மீது கறுப்புக் கொடிகள் வீசப்பட்டதாக எழுந்த சம்பவம் குறித்து அவர்கள் பிரச்சனைகள் கிளப்பக்கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்ப கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவரான அ.தி. மு.க. எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க. நயினார் நாகேந் திரன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பேசினர்.
கவர்னருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப் பில்லை; காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன சொல்லப்போகிறார்? என்று சொல்லிவிட்டு எடப்பாடி தலைமையில் வெளிநடப்பு செய்தது அ.தி.மு.க. அதேபோல பா.ஜ.க. உறுப்பினர்களும் வெளியேறினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய முதல்வர், "காவல் துறையை கையில் வைத் திருக்கும் முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்ற எதிர்க் கட்சி தலைவர், நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என தெரிந்துகொள்ளாமலே வெளி நடப்பு செய்திருக்கிறார்''” என்று தெரிவித்துவிட்டு, மயிலாடுதுறையில் கவர்னர் கான்வாய் வரும்போது என்ன நடந்தது என்பதை விளக்கமாகவும் விரிவாக வும் எடுத்துச் சொன்ன முதல்வர், "ஆர்ப்பாட்டத் தில் கவர்னர்மீது கற்களும் கொடிகளும் வீசப்பட்ட தாக சொல்வது அபாண்டமான குற்றச்சாட்டு. நடக் காத ஒன்றை நடந்ததாகச் சொல்லி அரசியல் செய்ய வேண்டாம். ஆளுநரின் பாதுகாப்பில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது''’என்று விளக்கமளித்தார்.
கோர்ட் பணிகள் இருந்ததால் ஒருமுறை நான் பேரவைக்கு லேட்டாக வந்தேன். அப்போது துணைக்கேள்வி கேட்க நான் முயற்சித்தபோது, "10:45-க்கு வந்துவிட்டு உடனே துணை கேள்விக் கேட்க அனுமதி கேட்கிறீர்கள்' எனக் கேலியாகக் கேட்டார். அப்படி அவர் கேட்டதில் எனக்கு வருத்தம் கிடையாது. உறுப்பினர்கள் பலர் சபைக்கு வந்திருக்கிறார்களா? இல்லையா? என்பதுகூட தெரியாது. ஆனால், எனக்கு பதில் சொல்லி நான் சபைக்கு வருகிறேன்; கேள்வி கேட்கிறேன் என பேரவையில் நான் இருப்பதை சபாநாயகர் பதிவு செய்வதாகவே அதை எடுத்துக் கொண்டேன்.
பொதுவாக சபை நடவடிக்கைகள் ஆக்கப்பூர்வமாக இருக்கின்றன. சபாநாயகர் அப்பாவு தனது பணியை சிறப்பாக செய்கிறார். விவாதங்களின் பொக்கிஷமாக இருக்கிறது சட்டமன்ற நிகழ்வுகள்.
-இரா.இளையசெல்வன்