மாங்காய் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்படுவதால், மாங்காய்களை மரத்திலேயே காயவிட்டு கண்ணீரில் தத்தளிக்கிறார்கள் மா விவசாயிகள். கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்ட மா விவசாயிகளுக்கு ஆதரவாக வணிகர்கள் கடையடைப்பு நடத்தி போராட்டம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மாங்காய் விவசாயிகள் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், தேனி, திருவள் ளூர், மதுரை மாவட்டங்களில்தான் அதிகம். சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் மாந்தோப்புகள் உள்ளன. அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் மெட்ரிக் டன் மாங்காய் விளைச்சல் நடக்கிறது.
தமிழ்நாடு - ஆந்திர மாநில எல்லையோர ஊரான வேலூர் மாவட்டம் பரதராமியில் ஜூன் 20ஆம் தேதி வணிகர்கள் கடையடைப்பு செய்தனர். இதுகுறித்து பரதராமி கிராமத்தை சேர்ந்த மா விவசாயி பாரத்திடம் பேசியபோது, "நான் பத்து ஏக்கரில் மா மரங்கள் நட்டுள்ளேன். இந்தாண்டு ஒரு கிலோ மாங்காய் 3 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள். மாங்காய் பறிப்பு கூலி கிலோவுக்கு 1 ரூபாய், டிரான்ஸ்போர்ட் கூலி 1 ரூபாய் போனால் விவசாயிக்கு கிடைப்பது 1 ரூபாய் தான். இந்த விலையை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் மானியம் வழங்கவேண்டும். மாங்காய்க்கும் ஆதார விலை நிர்ணயிக்கவேண்டும். இந்தாண்டு மா விவசாயிகள் பாதிக்கப் பட்டுள்ளதால் நஷ்டயீடாக ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு தந்தோம். எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ததாகத் தெரியவில்லை. எங்கள் துயரத்தை அறிந்த வணிகர்கள், எங்களுக்கு ஆதரவாக கடையடைப்பு செய்துள்ளார்கள்'' என்றார்.
திருப்பத்தூர் மாவட்டம் கதிரம்பட்டு கிராம விவசாயி, உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நம்மிடம், "கடந்தாண்டு ஒரு டன் மாங்காய் 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இந்தாண்டு விளைச்சல் நல்லாயிருந்தது, எனக்கு 35 டன் விளைச்சல் வந்தது. நல்ல விலைபோகும்னு நினைச்சேன். ஆனால் ஒரு டன் மாங்காய் 4 ஆயிரம் வரை தான் வாங்கினாங்க. என்னோட 4.5 ஏக்கர் தோப்புக்கு மருந்து அடிச்சதுக்கு 60 ஆயிரம், உழவு அடிச்சதுக்கு 40 ஆயிரம் செலவு செய்தேன். காய் பறிப்பு கூலி, வண்டி செலவு, மண்டியில ஒரு டன்னுக்கு சூட்டு (கழிவு) 100 கிலோ, வியாபாரிக்கு நூத்துக்கு பத்து ரூபா கமிஷன், ஏத்துக்கூலி, இறக்கு கூலியெல்லாம் தந்தது போக விளையவச்ச எனக்கு ஒரு ரூபாய் கூட லாபமில்லை. ஆண்டுக்கு ஒருமுறை தான் விளைச்சலென்பதால் மனவேதனையா இருக்கு.
இப்படி விலை குறையக் காரணம் பேக் டரிக்காரங்க தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 மாகூழ் பேக்டரி இருக்கு. இந்த கம்பெனிக் காரர்களும், வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து சதி செய்து விவசாயிகளை ஒழிச்சிட்டாங்க. கம்மி விலைக்கு கேட்கறாங்களேன்னு தேங்காய், நெல் மாதிரி ஸ்டாக் வச்சி மாங்காய விற்கமுடியாது. அரசாங்கம் விலை நிர்ணயம் செய்தால்தான் விவசாயிகளை நட்டத்திலிருந்து காப்பாற்ற முடியும். மாங்காயை மதிப்பு கூட்டி விற்கச் சொல்றாங்க, விவசாயிகள் எப்படி அதை செய்றது?'' என்றார் வேதனையுடன்.
விவசாயி பள்ளத்தூர் பிரபு, "கடந்தாண் டைவிட இந்தாண்டு பத்து மடங்கு விலை குறைந்து 3 ருபாய்க்கு தான் மண்டியில் மாங்காய் வாங்கறாங்க. இதற்கு மாகூழ் கம்பெனிகளின் சதியே முக்கிய காரணம். சித்தூரில் 50 கம்பெனிகள், கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் 49 கம்பெனிகள் உள்ளன. இவை, கடந்தாண்டு அதிக விலை கொடுத்து மாங்காய் வாங்கி நட்ட மானது எனச்சொல்லி, இந்தாண்டு சிண்டிகேட் அமைத்து இந்த விலைக்கு மேல் மாங்காய் வாங்கக்கூடாது என முடிவுசெய்து குறைந்த விலைக்கு வாங்குகிறார்கள். அத னால் வந்த விலைக்கு விற் கிறோம். ஆந்திராவிலும் இதே நிலை தான். எனினும் அங்கே அரசாங்கம் டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் தருகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் தரவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை'' என்றார். ஆந்திராவிலும் சிண்டிகேட் அமைத்ததால் ஒரு கிலோ மாங்காய் 4 முதல் 6 ரூபாய்க்கே வாங்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டத்தால் மாநில அரசு, மா விவசாயிகளுக்கு கிலோவுக்கு 4 ரூபாய் மானியம் தந்துள்ளது. அதேபோல் மாகூழ் கம்பெனிகள் 4 ரூபாய் கிலோவுக்கு கூடுதலாக தரவேண்டும் என உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அதேபோல் தமிழ்நாடு அரசும் செய்யவேண்டும் என்கிறார்கள் தமிழக விவசாயிகள்.
வேலூர், திருவள்ளூர் மாவட்டத்தில் விளையும் மாங்காய்கள் வழக்கமாக சித்தூர் மாவட்டத்திலுள்ள மாங்காய் மண்டிக்கும், தொழிற்சாலைகளுக்கும் செல்லும். இந்தாண்டு அங்கே விளைச்சல் அதிகமாகியுள்ளது, விலையும் குறைவு. எனவே தமிழ்நாட்டு மாங்காய்களை ஆந்திராவுக்குள் கொண்டுவரக் கூடாதென்று அங்குள்ள விவசாயிகள் போராடுவதால் தமிழ்நாட்டு மா லாரிகளை திருப்பியனுப்புகிறது ஆந்திர அரசு. இதுவும் தமிழக மா விவசாயிகளுக்கு பாதகமாகியுள்ளது என்கிறார்கள்.