ஐந்தரை அடி உயரம் ஒல்லியான உடல் அமைப்பு கொண்ட சயானை பார்த்தால் அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளை யாரும் நம்பமாட்டார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் என்றாலே குருவாயூரப்பன் கோயில் நினைவுக்கு வரும். அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இரிஞ்ஞாலகுடா என்கிற கிராமம். அந்தக் கிராமத்தில் வசிக்கும் ரமணி என்பவர் மகன்தான் சயான். கோவையில் பேக்கரி நடத்திவந்த சயானுக்கு கனகராஜ் என்கிற கார் டிரைவர் அறிமுகமாகிறார். அதுவரை மனைவி வினுப்ரியா மகள் ஆறு வயதான நீத்துவுடன் மகிழ்ச்சியுடன் பேக்கரி தொழில் நடத்திவந்த சயானுக்கு கனகராஜின் அறிமுகம்தான் பெரிய திருப்பத்தை வாழ்க்கையில் ஏற்படுத்தியது.
கனகராஜ், அன்று தமிழகத்தை ஆண்ட முதல்வர் ஜெ.வின் கார் டிரைவர். ஜெ. கொடநாடு வரும் போது கனகராஜ்தான் அவர் செல்லும் காரை ஓட்டுவார். கனகராஜுக்குத் தெரியாத அரசியல்வாதிகளே அ.தி.மு.க.வில் கிடையாது. சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் வந்து தங்கி, சசிகலாவின் உறவினர் ராவணனையும் பார்த்துவிட்டு வருவார். ஜெ. மறைந்த பிறகு ஒரு இஞ்சினியரின் கார் டிரைவராக பணியாற்றி வந்த கனகராஜ், அந்த இஞ்சினியர் மூல மாகத்தான் சயானுக்கு அறிமுகமாகிறார்.
எடப்பாடி, வேலுமணி, சசிகலா என சுற்றிவந்த கனகராஜ், சயானிடம் அவர்களைச் சந்தித்த புகைப் படங்களைக் காட்டியுள்ளார். வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மூலமாக கோவை சேலம் மாவட்டங் களில் பல அரசு ஒப்பந்தங்களை கனகராஜ் பெறுவதை சயான் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பார். சயானின் பேக்கரி தொழில் டல்லடித்தது. சொந்தமாக பேக்கரி வைத்து தருகிறேன் என கனகராஜ் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்ற லட்சக்கணக்கான பணம் தருவதாக எடப்பாடி உறுதியளித்திருக்கிறார். நாம் கொடநாடு பங்களாவில் போய் சில டாகுமெண்ட்டுகளை எடுத்து வந்து அ.தி.மு.க மேலிடத்தில் கொடுக்க வேண்டும் என கனகராஜ் சொன்னார்.
அதற்கு கேரளாவிலிருந்து அடியாட்கள் வந்தால் விஷயம் வெளியே தெரியாது. நாம் வெற்றி கரமாக இந்த கொள்ளையை நடத்திவிட்டால், நீ துபாயில் பேக்கரி நடத்துவாய் என கனகராஜ் விதைத்த ஆசைதான் சயானை இந்த கொள்ளை சம்பவத்திற்கு துணிய வைத்தது. சக்சன் என்கிற கூலிப்படை தலைவரை சயான் கேரளாவிற்கு போய் சந்திக்கிறார். அவர் ஒரு கொலை வழக்கில் தொடர்புடைய வாளையார் மனோஜ், மனோஜ் சுவாமி, ஜம்ஷீர் உட்பட பதினோரு பேரை அழைத்து வந்து கனகராஜுக்கு காட்டுகிறார் சயான்.
சரி என ஒருலட்ச ரூபாய் பணத்தை தருகிறார் கனகராஜ். முதலில் கொடநாட்டை ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் வீடு என மற்றவர்களுக்கு சொல்கிறார் சயான். அதன்பிறகு அது முன்னாள் முதல்வர் ஜெ.வின் வீடு, அங்கு 2000 கோடி ரூபாய் பணம் இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.
அனைவரும் கொடநாட்டிற்குள் செல்ல வில்லை. சயான்கூட அந்த பங்களாவின் அறைக் குள் செல்லவில்லை. முதலில் 8-ஆம் நம்பர் கேட்டில் இருந்த கிருஷ்ணதாபா ஒரு லாரியில் படுத்திருக்கிறார். அவரது கை, காலை கட்டிப் போட்ட பிறகு ஓம்பகதூரை, வாளையார் மனோஜ் வாயைக் கட்டும்போது அவர் இறந்துவிடுகிறார். அதன்பிறகு 10-ஆம் நம்பர் கேட் திறக்கப்பட்டது. அப்போதுதான் சயான் உள்ளே வருகிறார். சயான், ஓம் பகதூர் இருந்த லாரியில் உட்கார்ந்துகொள்ள டார்ச்லைட்டுடன் கடப்பாறையுடன் பங்களாவிற் குள் கனகராஜ், மனோஜ், ஜம்ஷீர் உள்ளே செல்கிறார்கள். உள்ளே சென்ற கனகராஜ், ஜெ. சசி அறையில் இருந்த டாகுமெண்ட்டுகளை எடுத்துக்கொண்டார். காரில் கனகராஜ் சயானுடன் சேலம் நோக்கி பயணிக்கிறார்.
மற்றவர்கள் கோத்தகிரி நோக்கி பயணிக் கிறார்கள். அவர்கள் சென்ற காரில் ஒரு காரை போலீஸார் மடக்கினார்கள். பத்துமணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட அந்தக் காரில் இருந்த பொருட்கள்தான் கொடநாடு கொள்ளையில் போலீசார் கைப்பற்றிய பொருட்கள். அவர்களை கனகராஜ், துபாயிலிருந்த சஜீவனின் தம்பி சுனில் மூலம் விடுவிக்கிறார். அப்பொழுதுதான் ஓம்பகதூர் செத்துப்போய்விட்டார் என்கிற விவரம் போலீஸ் மூலம் கனகராஜுக்கும் சயானுக்கும் தெரியவந்தது.
கொடநாட்டிலிருந்து, தான் கொண்டுவந்த டாகுமெண்டுகளை அ.தி.மு.க மேலிடத்தில் கொடுத்துவிட்டு வந்த கனகராஜ், சயானிடம், ஒரு கொலை நடந்துவிட்டது, நாம் சரணடைய வேண்டும் என்கிறான். நாம் இங்கே சுற்றித்திரிவது போலீசுக்குத் தெரியுமே. தேவையென்றால் அவர்கள் பிடிக்கட்டும் என்கிறான் சயான். கோத்தகிரியில் மாட்டியவர்களை விடுவிக்கவே நான் எடப்பாடி வரைக்கும் பேசினேன். அவரது அலுவலகத்தில் வேலுமணியின் அண்ணன் அன்பரசனும் சரணடையச் சொல்கிறார்கள் என்ற கனகராஜிடம், நான் கோவையில் உள்ள எனது மகள் ஆறே வயதான நீத்துவையும் எனது மனைவி வினுப்ரியாவையும் அழைத்துக்கொண்டு சொந்த ஊரில் விட்டுவிட்டு வருகிறேன் என புறப்பட்ட சயான், பழனிக்குச் சென்றார்.
அங்கிருந்து மறுபடியும் கோவை வந்து சொந்த ஊரான இரிஞ்ஞாலகுடா நோக்கிப் புறப் பட்டார். அவர் புறப்பட்டுப் போய்க்கொண்டிருக் கும்போதே சேலத்தில் இருந்து கனகராஜிடம் இருந்து எந்த போனும் வரவில்லை. நிமிடத்திற்கு ஒருமுறை போன் செய்து சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகம், கோவையில் உள்ள வேலுமணியின் அண்ணன் அன்பரசன் ஆகியோர் சொல்வதைச் சொல்லிக்கொண்டிருந்த கனகராஜ், ஏன் போன் செய்யவில்லை என்று ஆச்சரியத்துடன் கார் ஓட்டிக்கொண்டிருந்த சயானுக்கு சேலத்தில் ஒரு விபத்தில் கனகராஜ் கொல்லப்பட்ட விவரம் தெரியவில்லை.
பாலக்காடு பக்கத்தில் கண்ணாடி என்கிற ஊரில் சயானின் காரை பக்கவாட்டில் ஒரு லாரி, இடித்துத் தள்ளியது. சயான் வேகமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோத... காரிலிருந்த மூன்றுபேரும் நினைவிழந்தார்கள். அதில் சயான் மட்டும் பிழைத்துக்கொண்டார். அவர் வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தார். அந்த துயரமான சம்பவத்திலிருந்து பிழைத்துக்கொண்ட சயான், கனகராஜையும் தன்னையும் கண்காணித் தவர்கள் கொலை செய்ய திட்டமிட் டார்கள். கொடநாடு கொள்ளை விவகாரத்தின் பின்னணியில் எடப்பாடி, வேலுமணி மற்றும் அ.தி.மு.க. மந்திரிகள் இருக்கிறார்கள் என இரண்டு வருடம் கழித்து பேச ஆரம்பித்தார்.
இந்த வழக்கு பற்றி பேசக்கூடாது என சயானுக்கு எதிராக கோர்ட்டில் தடை வாங்கியிருந்தார் எடப்பாடி. அதனால், சயான் வழக்கைப் பற்றி பேசாமல் அன்று நடந்த விபத்தைப் பற்றி மட்டும் நம்மிடம் ஒருசில வார்த்தைகள் சொன்னார்.
நக்கீரன்: இந்த விபத்து மனதளவில் என்ன சோகத்தை ஏற்படுத்தியது?
சயான்: எனது மனைவி, குழந்தை இருவரையும் ஒரே நேரத்தில் இழந்தேன். அது வார்த்தைகளால் சொல்லவே முடியாத பெரிய சோகத்தை எனக்கு ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு என் வாழ்க்கையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்கள், எனக்கு ஏற்படுத்திய சோகத்தை வெளிப்படையான வார்த்தையால் சொல்ல முடியாது. (கண்ணீர் சிந்துகிறார்)
நக்கீரன்: தனிப்பட்ட முறையில் இந்த சோகங்களை சந்திக்க என்ன செய்தீர்கள்?
சயான்: தியானம், பிரார்த்தனை செய்கிறேன்.
நக்கீரன்: உங்கள் பிரார்த் தனை வெற்றிபெறும் என நம்புகிறீர்களா?
சயான்: நான் கடவுளை நம்புகிறேன். அந்தக் கடவுள் என்னை காப்பாற்று வார்.
நக்கீரன்: கடந்த இரண்டு வருடங்களாக ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்கிறீர்கள். இந்த சோதனையை எப்படி எதிர்கொள்வீர்கள்?
சயான்: எனக்கு இழப்பதற்கு எதுவுமில்லை. அதனால் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
நக்கீரன்: உங்கள் குழந்தை நீத்துவுடனான நினைவலை களை பகிர முடியுமா?
சயான்: அது என்னால் முடியாது. அது மிகப்பெரிய சோகம். அதைப்பற்றி பேச முயலலை.
நக்கீரன்: உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு ஏற்பட்ட சோகத்தை எப்படி எதிர்கொண்டார்கள்?
சயான்: 2016-ல் என் அப்பா இறந்தார். 2017 ஏப்ரலில் நான் எனது மனைவியையும் குழந்தையையும் இழந்தேன். எனது தாயாருக்கு 72 வயது. ஒரு தங்கை இருக்கிறார். இந்த விபத்திற்குப் பிறகு ஒட்டுமொத்தமாக வீடே காலியாகிப்போனதாக உணர்கிறேன். நான் ஜெயிலுக்குப் போனேன், என் தாய் உடல்நலம் குன்றிவிட்டது.
நக்கீரன்: உங்கள் குடும்பத் தினர் ஆறுதல் சொல்வார்களா?
சயான்: என் சகோதரி ஆறுதல் சொல்வார். எனக்கு மனதைரியம் தந்தவர்கள் எனது வழக்கறிஞர்கள் தான். அவர்கள் உதவியால்தான் நான் வாழ்கிறேன்.