பாலிவுட்டுக்கு ஒரு மர்மநாவலுக்கு இணையான சஸ்பென்ஸை அளித்துக்கொண்டிருக்கிறது சுஷாந்த் சிங் மர்ம மரணத்தைத் தொடர்ந்து, நாளுக்கொன்றாக வெளிப்படும் செய்திகள்.
சுஷாந்த் சிங் இறந்து 50 நாட்களாகிவிட்டது. ஆனால் மகாராஷ்டிர போலீசாரோ வழக்கு விசாரணையின் ஆரம்பகட்டத்திலே நின்றுகொண்டிருப்பதாக அவரது குடும்பத்திலிருந்து தொடர்ந்து புகார் எழுந்துகொண்டேயிருக்கிறது.
சுஷாந்தின் மரணத்தைத் தொடர்ந்து அழுத்தமாக எழுந்த குற்றச்சாட்டு, பாலிவுட்டில் எழுதிவைக்கப்படாத ஒரு நவீன தீண்டாமை பின்பற்றப்படுகிறது. பீகாரிலிருந்து வந்தவர் என்பதால் சுஷாந்த் பல இடங்களிலும் ஒதுக்கப்பட்டார் என்பதாகும். சமீபமாக, தாங்கள் இஸ்லாமியர் என்பதாலும் தென்னிந்தியர் என்பதாலும் பாலிவுட்டில் ஒதுக்கப்படுவதாக தமிழகத்தின் ஏ.ஆர்.ரஹ்மானும் கேரளாவின் ரசூல் பூக்குட்டியும் சொல்லியிருப்பதும் இதோடு இணைத்து நோக்கத்தக்கதே.
சுஷாந்தின் மரணம் குறித்து மகாராஷ்டிர போலீசின் விசாரணை போதுமானதல்ல, சி.பி.ஐ. விசாரணை தேவை என்ற கோரிக்கை முதலில் சுஷாந்தின் பெற்றோரிடமிருந்து எழ, எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று குரல்கொடுப்பதில் வந்து முடிந்திருக்கிறது.
சுஷாந்த் மரணத்தில் அவரது காதலியான நடிகை ரியா பெயரும் அடிபட, ரியாவின் வழக்கறிஞர், இந்த வழக்குக்கும் பீகாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் அங்கிருந்து சி.பி.ஐ. விசாரணை கோர முகாந்தரமும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் சுஷாந்தின் குடும்பம் நியமித்திருக் கும் வழக்கறிஞர் விகாஷ் சிங்கோ, சில அர்த்த முள்ள பாயிண்டுகளை முன்வைத்திருக்கிறார். .
சுஷாந்தோடு ரியா தங்கியிருந்தபோது, ரூ 17 கோடி சுஷாந்த் வங்கிக் கணக்குக்கு வந்திருக்கிறது. 15 கோடி அவரது வங்கிக் கணக்கைவிட்டு மறைந்திருக்கிறது. சுஷாந்த் இந்தக் கால கட்டத்தில் சொத்தோ, விலைகூடிய காரோ எதுவும் வாங்கவில்லை. சரி, அப்படியானால் இந்த பணம் என்னவானது?
மும்பை போலீஸ் வெறுமனே பாலிவுட் நட்சத்திரங்களை மட்டும் அழைத்து, சுஷாந்த் சிங் ஒதுக்கப்பட்டதால் தற்கொலை செய்தார் என்ற கோணத்திலேயே விசாரணையைத் தொடர்கிறது. இதன்மூலம் சில முக்கியமான விஷயங்களை கண்டுகொள்ளாமல் விடப்பார்க் கிறது. மூன்று வருட காலத்தில் சுஷாந்தின் 50 கோடி ரூபாய் மாயமாகியிருக்கிறது. இதில் ஒரு வருட காலம் ரியா, சுஷாந்துடன் தொடர்பிலிருந்திருக்கிறார்
சுஷாந்த் தன் பெற்றோருடனான தொடர்பை நிறுத்தியது ஒரே இரவில் நிகழ வில்லை. இதிலும் ரியாவின் தலையீடு உண்டு.
சுஷாந்தின் பாடிகார்டுகள், சமையல்காரர், வீட்டு வேலைக்காரர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். சுஷாந்தின் வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்டுகள், கிரெடிட் கார்டுகள் வேறொரு வராலும் கையாளப்பட்டது.
சில மருந்துகளை சுஷாந்த் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார். அந்த மருந்துகளைப் பற்றி அவரது குடும்பத்துக்கு எந்த விவரமுமே தெரியவில்லை. மொத்தத்தில் தன்னிடம் எதுவோ சரியில்லை என்ற உணர்வை சுஷாந்திடம் ரியா விதைத்தார்
இரண்டாவதாக சுஷாந்த் தன் மரணத்துக்கு முந்தைய தினம், தினா மோரியா எனும் நடிகர் ஏற்பாடு செய்த விருந்தில் கலந்துகொண்டார். அதில் ஆளுமைமிக்க நடிகர்கள், அரசியல்வாதி கள் கலந்துகொண்டனர். அங்கே வைத்து சுஷாந்த் மிரட்டப்பட்டார் என்றொரு குற்றச்சாட்டு நிலவுகிறது. ஆனால் அப்படியொரு பார்ட்டியே நடக்கவில்லை என மறுக்கிறார் தினா மோரியா.
க்ளைமாக்ஸிலாவது வில்லன் களைக் கைதுசெய்துவிடுவர் சினிமா போலீசார். நிஜ போலீசார் என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்.
-சூரியன்
___________
சபாஷ் வித்யா!
கொரோனா திரையரங்கக் கதவுகளை இறுகச் சாத்தியதால், இந்திய கணிதவியல் மேதை சாகுந்தலாதேவியின் வாழ்க்கைப் படமான சாகுந்தலாதேவியை அமேசான் நேரடியாக வெளியிட்டுள்ளது. கதைக்கரு சர்வதேச பார்வையாளர் களுக்கு ஏற்றதென்பதால் உலக அளவில் இந்தப் படம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு வெகுசில படங்களிலேயே நடித்துவந்த வித்யாபாலனுக்கு இந்தப் படம் பிக் ஜாக்பாட்டாக அமைந்திருக்கிறது. துறுதுறு பெண்ணாக (அந்த தாவணி-பாவாடை மட்டும் கொஞ்சம் ஓவர்), தன்னம்பிக்கைமிக்க கணிதமேதையாக, தாய்மையால் அலைக்கழிக்கப்படுபவராக அற்புத நடிப்பைத் தந்துள்ளார்.
___________
சங்கத்துக்கு எதிர்ப்பு!
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்க முயற்சி இன்றைய தமிழத் திரையுலகின் ஹாட் டாபிக்காக அடிபடத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் விவகாரம், உயர்நீதிமன்றம் வரை படியேறியதால் சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாரதிராஜாவின் இந்த முயற்சி சில தயாரிப்பாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாய் சங்கத்தை உடைக்கவில்லை. ஆனால் இன்னொரு சங்கத்தின் பிரசவம் இப்போது அவசியம். நிர் வாகிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என ஏற்கெனவே இருக்கும் சங்கத்துக்கு வலிக்காமல் பேசினாலும்கூட, சங்கத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையை யும் குலைக்கும் பாரதிராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஒரு தரப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டிலே, சங்கம் தொடங்குறதுக்கு நடவடிக்கையா என கொதிக்கிறார்கள் பாரதிராஜா ஆதரவாளர்கள்.