தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா, அகரம் பவுண்டேஷனை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் மூலமாக சாதி, மதம், கடவுள் நம்பிக்கை என எந்த எல்லைக்குள்ளும் சுருங்கிவிடாமல், பள்ளிப்படிப்பில் சிறந்து விளங்கி மேல்படிப்பைத் தொடர முடியாத கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க உதவி வருகிறார். இதற்காக சிபாரிசோ, மேலிடத்து அழுத்தமோ எது வந்தாலும், அவர் கண்டுகொள்வதில்லை.
இந்த அறக்கட்டளையின் மூலம் மருத்துவமோ, பொறியியலோ விரும்பிய பாடத்தைப் படித்து, வெற்றிகண்ட மாணவர்களை ஆண்டுதோறும் விழாக்கள் நடத்தி கவுரவிக்கவும் செய்கிறார். சமீபத்தில் இதுபோன்ற ஒரு மேடையில், தன்னால் படித்து முன்னுக்கு வந்த மாணவியின் பேச்சைக் கேட்டு, மேடையில் கண்கலங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் இந்த அகரம் அறக்கட்டளையை நடத்துவதற்கு சூர்யாவுக்கு, அவரது தந்தை சிவக்குமார், சகோதரர் கார்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன் மற்றும் அவரது மகன் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டி யன் ஆகியோர் உறுதுணையாக இருக்கிறார்கள். தொடர்ந்து அறம் சார்ந்த நோக்கத்திற்காக அகரம் பவுண்டேஷன் இயங்கிவருகிறது.
இதற்கிடையே, 2டி எண்டெர்டெய்ன் மெண்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, பல படங்களையும் சூர்யா தயாரித்து வருகிறார். குறிப்பாக 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் உள்ளிட்ட ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில், தனது மனைவி ஜோதிகாவை ரீஎண்ட்ரி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார். அந்த வரிசையில், சசிகுமார், ஜோதிகா மற்றும் சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படத்தை 2டி எண்டெர்டெய்ன் மெண்ட் தயாரித்து வருகிறது. "கத்துக்குட்டி' படத்தின் இயக்குனர் இரா.சரவணன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதங்களுக்கு முன்பே தொடங்கியது.
பத்திரிகையாளராக இருந்து இயக்குனராக ஆன இரா.சரவணன் தஞ்சாவூர்க்காரர். இந்தப் படமும் தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்துப் பேசுவதால், மருத்துவமனைக்காக செட் எதுவும் அமைக்காமல், இயல்பு மாறாமல் இருப்பதற்காக தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை யில் முறையாக அனுமதிபெற்று படப்பிடிப்பு தொடங்கியது. இது அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அதை நம்பியிருக்கும் மக்கள் சந்திக்கும் கொடுமைகளை நேரில் பார்க்கும் வாய்ப்பை ஜோதிகாவுக்கு ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான், ஜே.எஃப்.டபில்யூ. விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிகா, ""நான் ஷூட்டிங்கிற்காக தஞ்சாவூர் சென்றிருந் தேன். அப்போது உலகப் புகழ்பெற்ற தஞ்சை பிர கதீஸ்வரர் கோவிலைப் பார்க்காமல் போகாதீர்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய வரலாற்றுச் சின்னம் அது என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே, அந்தக் கோவிலைப் பார்த்திருக்கிறேன். உதயப் பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல, அவ்வ ளவு அழகான கோவில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் இருந்தது. தஞ்சை கோவிலுக்கு நேரெதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டிருந்தது. நான் பார்த்ததை எல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது. அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு. இதன்பிறகு, நான் அந்தக் கோவிலுக்கு செல்ல எனக்குத் தோன்றவில்லை.
இதை வேண்டுகோளாக உங்களிடம் வைக்கிறேன். கோவில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள். பராமரிக்கிறீர்கள். உண்டியலில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். தயவுசெய்து அதே பணத்தை பள்ளிக்கூடங்களுக்காகவும், மருத்துவ மனைகளுக்காகவும் கொடுத்து உதவுங்கள். கோவில்களைப் போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை'' என்று தன் மனதில் பட்டதைச் சொல்லி வேண்டுகோள் விடுத்தார்.
""ஜோதிகாவின் இந்தப் பேச்சு வைரலாகிய நிலையில்தான், இந்துத்வ குழுக்களைச் சேர்ந்த சிலர், ஜோதிகா இந்துக் கோவில்களுக்கு எதிராக பேசிவிட்டார். அவரால் ஒரு தேவாலயத்தையோ, மசூதியையோ குறித்து இப்படியொரு கருத்தைச் சொல்ல முடியுமா? என்று கிளப்பிவிடத் தொடங்கினார்கள். ஜோதிகா நல்ல நோக்கத்துடன் பேசிய தை தவறாக சித்தரித்து, சமூக வலைதளங்களிலும் கருத்து களைப் பரப்பினார்கள். இதன் பிறகே, “கோவில்களைக் குறித்து எந்த இடத்திலும் குறைத்துப் பேசவில்லை. கோவில்களுக் குக் கொடுக்கும் முக்கியத் துவத்தை மருத்துவமனை களுக்கும் கொடுக்கவேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டார்'' என்று இயக்குனர் சரவணன் விளக்கமளித் திருக்கிறார். சூர்யா, சிவக்குமார் தரப்பு செல்வாக் கும், பிரபலமும் கொண்டது. அவர்களை சர்ச்சை யில் சிக்கவைத்தால், நாம் இதில் குளிர்காயலாம் என்ற நோக்கத்திலேயே இந்துத்வ குழுக்களைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து இதுகுறித்து பேசிவரு கிறார்கள். அவர்களுக்கு ஜோதிகா அல்லது சூர்யா மூலமாக மறுப்பு சொன்னால் மீண்டும் விஷயத்தை ஊதிப் பெரிதாக்குவார்கள் என்பதால்தான், இயக் குனர் சரவணனை விளக்கம் எழுத வைத்திருக்கிறார் கள் என்கிறார்கள் இந்த விவகாரத்தின் பின்னணியை அறிந்தவர்கள். ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா தெரிவித்த கருத்தும் பா.ஜ.க.+இந்துத்வாவாதிகளை கொதிப்படைய வைத்திருந்தது.
இதற்கிடையே, பிரதமர் மோடியே, கோவில்களை விடவும் கழிப்பறைகள் அவசியமானவை என்று பேசியதைக் குறிப்பிட்டு, இந்துத்வ கும்பல் களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள்.
-ஈ.பா.பரமேஷ்வரன்