ஷ்யாவில் ஜார் மன்னரின் கொடுங் கோலாட்சி குறித்து பாரதியார் தனது பாடலில், "இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்று குறிப்பிடுவார். அதேபோல தற்போது மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு, ஆட்சிக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலே அவர்களுக்கு தேசத்துரோகி, அர்பன் நக்சல் என்றெல்லாம் பட்டம் கொடுப்பதோடு, அவர்கள்மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து முடக்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது. அதற்கு சரியான சமீபத்திய உதாரணம், பத்திரிகையாளர் வினோத் துபா மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக வழக்காகும்.

s

"இடிப்பாரிலாத ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்' என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்குக்கேற்ப, ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக்காட்டி, அவர்களை நெறிப்படுத்த வேண்டிய கடமை பத்திரிகை யாளர்களுக்கு உள்ளது. இதன் படி ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது, தவறுகளைத் திருத்திக் கொள்ளத்தான் ஆட்சியாளர்கள் முன்வர வேண்டுமேயொழிய, பத்திரிகைகள் மீது வன்மத்தோடு பாயக்கூடாது.

ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், தாக்குதல்களையும் எதிர்கொண்டு, துணிவோடு தனது கருத்துக்களை எடுத்து வைக்கும் நக்கீரனைப் போல் ஒரு சில பத்திரிகைகளும், பத்திரிகையாளர் களும் ஆங்காங்கே செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இப்படியான பத்திரிகை யாளர்கள் மீது மோடி அரசு சர்வாதிகாரத் தன்மையோடு நடந்துகொள்வதற்குத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.

Advertisment

இந்தியாவின் புகழ்பெற்ற பத்மஸ்ரீ விருதுபெற்றவர், டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா. இவர், கடந்த ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஒரு யூ-ட்யூப் சேனல் நடத்திய விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டெல்லி யில் நடைபெற்ற போராட்டத்தில், பா.ஜ.க.வினர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது குறித்து பேசியபோது, "பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கிக்காகப் பயன்படுத்துகிறார்' என்று குற்றம்சாட்டினார். உடனடியாக அவரது கருத்துக்கு எதிராக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்யவும், அதுகுறித்து விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

ss

அதோடு அவ்விவகாரத்தை விடாமல், பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதாக, பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் அஜய் ஷ்யாம், சிம்லா காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில், பத்திரிகையாளர் வினோத் துவா மீது இமாசலப்பிரதேச அரசு, தேசத்துரோக வழக்கைப் பதிவுசெய்தது.

Advertisment

தன்மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி, கடந்த ஜூன் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தில் வினோத் துவா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், வினீத் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவ்வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், ஜூன் 3-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வினோத் துவா மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இவ்வழக்கை ரத்து செய்வதற்கு, 1962-ம் ஆண்டு கேதார்நாத் சிங் என்ற பத்திரிகையாளர், பீகார் மாநில அரசின்மீது உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவ்வழக்கின் தீர்ப்பில், தேசத்துரோகம் என்பதை வரையறுத்துச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். தேசத்துக்கு எதிரான வன்முறையைத் தூண்டக்கூடிய வகையிலான விமர்சனங் கள், வன்முறையை ஆதரிக்கக்கூடிய கருத்துகள் போன்றவையே தேசத் துரோகச் சட்டத்துக்கு பொருந்தும் என்றும், அவை தவிர்த்து, ஓர் அரசின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் ஒருபோதும் தேசத்துரோகம் ஆகாது என்று குறிப்பிடப்பட்டி ருந்தது.

அந்த தீர்ப்பைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், கேதார்நாத் சிங் வழக்கின் தீர்ப்பு, அனைத்துப் பத்திரிகை யாளர்கள் மீதான sவழக்குக்கும் பொருந்தும் என்று தீர்ப்பளித் துள்ளனர். இந்த தீர்ப்பு, பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்க நினைக்கும் மோடி அரசுக்கு விழுந்துள்ள பலத்த அடியாகும். அறத்தின்பால் நின்று, தேசத்தின் ஆட்சியாளர்களின்மீது விமர்சனம் வைக்கும் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதாகப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

இத்தீர்ப்பு குறித்து, மூத்த பத்திரிகையாள ரான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தனது அறிக்கையில், "ஜனநாயகம் என்ற மக்களாட்சியில், ஆளுவோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; அவர்கள் பாதை தவறும்போதோ அல்லது அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போதோ, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகள், ஊடகங்கள் எடுத்து வைக்கும் விமர்சனங்களையெல்லாம், எடுத்த எடுப்பிலேயே 124-ஆ தேசத்துரோகம், அரசுக்கு எதிராக 501, 505 போன்ற இ.பி.கோ. பிரிவு களின்கீழ் வழக்குகள் போடுவது ஏற்புடைத்தல்ல.

ஆளுவோர், அவர்கள் எக்கட்சியினராக இருந்தாலும், உள்நோக்கம் இல்லாமல் செய்யப்படும்வரை எந்த விமர்சனங்களையும், அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும் குற்றமாக அதைக் கருதக்கூடாது, வரவேற்கவே வேண்டும். தங்களது போக்கில், நடவடிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால்தான், உண்மையான ஜனநாயகம் நிலைக்க முடியும். உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சிறப்பான தீர்ப்பை அளித்துள்ளது. ஜன நாயகக் காப்புரிமையைப் பாதுகாக்கும் இத்தீர்ப்பை வரவேற்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மோடி அரசின் கொடுங்கரத்திலிருந்து பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாத்துள்ளது.

-தெ.சு.கவுதமன்