விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மோடி அரசு ஏற்றிவிட்டது. இனி, விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் ஓஹோவென்று உயர்ந்துவிடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பெருமைப் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், வழக்கம்போலவே, இதுவும் மோடி அரசின் மோசடி அறிவிப்பு என்கிறார்கள் விவசாயிகள்.
நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை, சூரியகாந்தி விதை, சோயாபீன்ஸ், பருத்தி (நடுத்தரம்), எள், கருஞ்சீரகம் ஆகிய 14 உணவுப்பொருட்களுக்கு மத்தியஅரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
நெல்லுக்கு கடந்த ஆண்டுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.1,550 ஆக இருந்தது. இந்த ஆண்டு இந்த விலை ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, ரூ.1,700 ஆக இருந்த சோளம் விலை, ரூ.2,430 ஆகவும், ரூ.1,425 ஆக இருந்த கம்பு விலை ரூ.1,950 ஆகவும், ரூ.1,900 ஆக இருந்த கேழ்வரகு விலை ரூ.2,897 ஆகவும், ரூ.1,425 ஆக இருந்த மக்காச்சோளம் விலை ரூ.1,700 ஆகவும், ரூ.5,450 ஆக இருந்த துவரம் பருப்பு விலை ரூ.5,675 ஆகவும், ரூ.5,575 ஆக இருந்த பாசிப்பருப்பு விலை ரூ.6,975 ஆகவும், ரூ.5,400 ஆக இருந்த உளுந்தம்பருப்பு விலை ரூ.5,600 ஆகவும், ரூ.4,450 ஆக இருந்த நிலக்கடலை விலை ரூ.4,890 ஆகவும், ரூ.4,100 ஆக இருந்த சூரியகாந்தி விதை விலை ரூ.5,388 ஆகவும், ரூ.3,050 ஆக இருந்த சோயாபீன்ஸ் விலை ரூ.3,399 ஆகவும், ரூ.4,020 ஆக இருந்த பருத்தி (நடுத்தரம்) விலை ரூ.5,150 ஆகவும், எள் விலை ரூ.6,249 ஆகவும், கருஞ்சீரகம் விலை ரூ.5,877 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரசு அறிவித்துள்ள விலை விவசாயிகளுக்கு கிடைக்கப் போவதும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் அவர்களின் நட்டத்தை ஈடுகட்டவும் முடியாது என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறும் விவரங்கள் அதிர்ச்சியடையச் செய்கிறது.
இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளருமான மு.மாதவன் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது.. ""அரசே கொள்முதல் செய்வதால் நெல்லுக்கு மட்டும் அரசு அறிவித்துள்ள விலை கிடைக்கலாம். மற்ற வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்வதில்லை. ஒரு ஏக்கர் சோளம் பயிரிட 24 ஆயிரம் செலவிட்டால் 20 குவிண்டால் சோளம் விளையும். குவிண்டால் ரூ. 1100 வீதம் வியாபாரி வாங்கினால் 22 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கும். 2 ஆயிரம் ரூபாய் நட்டம். சோளத்திற்கு மத்திய அரசு சொல்லி இருக்கிற ரூ. 2,430 எந்தக் காலத்திலும் கிடைக்காது. வியாபாரிகள் வைப்பதுதான் விலை.
தமிழகம் முழுவதும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை எப்போதும் திறந்துவைத்து அனைத்து வேளாண் விளைபொருட்களையும் வாங்கினால் மட்டுமே இந்த விலை கிடைக்கும். அதுவரை இது கண்துடைப்புதான்''’என்கிறார் சோகமாக. தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கூறியது…""எம்.எஸ். சாமிநாதன் குழு 50 விழுக்காடு சேர்த்து வழங்கவேண்டும் என்று வரையறுத்ததே மிகவும் தவறானது. உதாரணத்திற்கு நெல்லுக்கு 2018 - 2019 ஆம் ஆண்டுக்கு மோடி அரசு அறிவித்துள்ள அடிப்படை விலை குவிண்டாலுக்கு 1750 ரூபாய். நல்ல பாசன வசதியுள்ள நிலத்தில் நெல் சாகுபடி செய்ய ஆகும் உற்பத்திச் செலவு மட்டும் ஏக்கருக்கு சராசரியாக 31,700 ரூபாய் ஆகும். எந்த இயற்கை பாதிப்பும் இல்லாது போனால் ஒரு ஏக்கருக்கு 18 குவிண்டால் நெல் அறுவடை கிடைக்கும். இந்த வகையில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ஆகும் இடுபொருள் செலவு மட்டும் 1760 ரூபாய். சாமிநாதன் குழு பரிந்துரைப்படி கணக்கிட்டாலே 1760 + 880 = 2440 ரூபாய் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், 1750 ரூபாய் அறிவித்துவிட்டு பெருமை பேசுகிறது மோடி அரசு. மோடி அரசின் இந்த மோசடியை உணர்ந்து வேளாண் விளைபொருள்களுக்கு லாப விலை கேட்டு தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்''’என்றார்.
""அரசாங்கம் நெல்லுக்கு ஆதரவு விலை வைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் நெல் விளையும் பூமியில் கருவேல மரங்கள் அடர்ந்து ஆடுகள் மேய்கிறது. தண்ணீர் வந்தால்தானே விவசாயம் செய்ய முடியும் என்கிறார்கள், வெடித்துக் கிடக்கும் விவசாய நிலத்தை பார்த்து விவசாயிகள்!
-இரா.பகத்சிங்