ஜான் மைக்கேல் டி குன்ஹா 2013-ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவை வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு அனுப்பியவர். அவர் எழுதிய தீர்ப்பை அப்படியே செல்லும் என உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அப்படிப்பட்ட குன்ஹா, சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதியாகச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, ஏப்ரல் முதல் வாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக அவர் ஓய்வுபெற்றார்.

cc

சாதாரணமாக ஒரு செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றம் அளிக்கக்கூடிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் போன்ற மேலமை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் சம்பவங்கள் நிறைய நடந்துள்ளன. ஆனால், ஒரு செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அளித்த தீர்ப்பை வரிக்கு வரி அப்படியே உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்வதும், அதை அமல்படுத்துங்கள் என உத்தரவிடுவதும் நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவரை நடக்காத ஒன்று.

செஷன்ஸ் கோர்ட் நீதிமன்றம் சொல்வதற்கு மாறாக, பல விஷயங்களைத் திருத்தி அதன் மையக்கருத்தை மட்டும் உச்சநீதிமன்றம் பொதுவாக ஏற்றுக் கொள்ளும். அதற்கு நேர்மாறாக, குன்ஹா ஜெ.வுக்கு எதிராக அளித்த தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டதோடு, அதில் அந்தத் தீர்ப்பைப் பாராட்டியும் விளக்கியும் பல வரிகளை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இணைத்து தீர்ப்பெழுதி பெருமை சேர்த்தார்கள்.

Advertisment

""ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வராக ஒரு அரசியல் சாசன தகுதிபெற்ற பதவி வகிக்க லாயக்கற்றவர்கள், ஜெ.வைப் போன்றவர்களைத் தண்டிக்காவிட்டால் ஊழலை எதிர்த்து நீதி மன்றங்கள் இனி பேசவே முடியாது'' என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாங்கள் எழுதிய தீர்ப்பில் குறிப்பிடும் அளவிற்கு மிகத் தெளிவான ஒரு தீர்ப்பை குன்ஹா எழுதியிருந்தார்' என குன்ஹாவைப் பற்றிய தனது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராகக் களம் கண்டு, ஜெ.வுக்கு எதிராக வாதாடிய பிரபல வழக்கறிஞர் ஆச்சார்யா.

""தனது வாழ்நாள் முழுவதும் நீதிக்காகப் போராடுவதையே லட்சியமாக வைத்து செயல்பட்டவர் குன்ஹா. மங்களூரில் ஒரு சாதாரண ஏழை ஆசிரியரின் மகனாகப் பிறந்த குன்ஹாவை, தகப்பனார் துணையில்லாமல் சகோதரிகளோடு பக்தி மிகுந்தவராக வளர்த்தவர் தான் குன்ஹாவின் அம்மா.

"கடவுளுக்கு கீழ்ப்படி, மற்ற எதற்கும் பயப் படாதே' என சிறுவயதில் அவருக்கு போதிக்கப்பட் டது. அப்படியே பிடித்துக்கொண்டார் குன்ஹா.

Advertisment

c

வழக்கறிஞராக, மனு அசோசியேட்ஸ் என்கிற பெயரில் தனது நண்பர்களான நொரோகா மற்றும் உல்லால் ஆகியோருடன் சேர்ந்து வழக் கறிஞராகப் பணியாற்றிய அவர், ஒருகட்டத்தில் நீதிபதியானால் தான் சட்டத்துறையில் நியா யங்களை எடுத்துச் சொல்ல முடியும் என நினைத்து, நீதிபதியாக மாறினார்.

மாவட்ட நீதிபதியாக அவர் பெல்காம் மாவட்டத்தில் பணியாற்றியபோது மத்தியப்பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதி, அந்த மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்த மான ஈத்கா மைதானத்தில் தேசியக்கொடியை ஏற்றி பிரச்சினை செய்தார். அதை எதிர்த்து அவர்மீது வழக்குப் போடப்பட்டது. அந்த வழக்கை உமாபாரதி மதிக்கவில்லை. அவர்மீது கைது வாரண்ட்டுகள் பிறப்பிக்கப்பட்டன. அதையும் அவர் சட்டை செய்யவில்லை.

இந்த வழக்கு குன்ஹாவிடம் வந்தது, அவர் மத்தியப்பிரதேச முதல்வரான உமாபாரதியை கைது செய்ய உத்தரவிட்டார். அதனால் உமாபாரதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிறைச்சாலைக்குச் செல்லவேண்டிய சூழல் எழுந்தது, இந்தத் தீர்ப்பினால் ஒட்டுமொத்த கர்நாடகத்தின் கவனத்தையும் அகில இந்திய மீடியாக்களையும் ஈர்த்த குன்ஹா, ஜெயலலிதா வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜெ.வின் வழக்கை அவர் விசாரிக்கும்போது, ஜெ. கிறிஸ்துவ பாதிரியார்களை கைக்குள் போட்டுக்கொண்டு குன்ஹாவை தனக்கு சாதகமாக மாற்ற முயற்சித்தார். ஜெ.வின் இந்த அசைவுகளைக் கண்டு கோபமடைந்த குன்ஹா, சர்ச்சுக்குப் போவதையே நிறுத்திவிட்டு வீட்டிலிருந்து ஜெபம் செய்தார்'' என குன்ஹாவை நினைவுகூர்கிறார் அவரது உதவியாளராக இருந்த பிச்சைமுத்து.

அதன்பிறகு கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு நியமிக்கப்பட்ட குன்ஹா, கௌரி லங்கேஷ் என்கிற பத்திரிகையாளரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினருக்கு ஜாமீன் தரமுடியாது என தீர்ப்பளித்தார், அத்துடன் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிகளை உடைத்து இப்போதைய பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா நடத்திய "ஆபரேஷன் கமலா' என்கிற ரகசிய ஆபரேஷனில் ஒரு சுயேச்சை எம்.எல். ஏ.வுக்கு பணம் கொடுப்பதற்காக நடந்த ரகசிய பேச்சு வார்த்தை தொடர்பான வழக்கில் எடியூரப்பா தவறு செய்திருக்கிறார் என தைரியமாகத் தீர்ப்பளித்தார். அதேபோல் "எடியூரப்பா தொடர்பான சில நில விவகாரங்களில் தவறு நடந்திருக்கிறது' என தொடரப்பட்ட வழக்கில் உண்மை இருக்கிறது என தீர்ப்பளித்தார்.

"இப்படி தனது வாழ்நாள் முழுவதும் அநியாயங்களுக்கு எதிராக ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பயப்படாமல், அவர்கள் கொடுத்த இனிப்பான வாய்ப்புகளை நிராகரித்து, நேர்மையின் சிகரமாக விளங்கிய குன்ஹாவை சுப்ரீம்கோர்ட்டுக்கு அனுப்ப பா.ஜ.க.வினர் விரும்பவில்லை. போதுமடா சாமி என கர்நாடக உயர்நீதிமன்றத்தோடு அவரது நீதிமன்ற வாழ்க்கையை முடித்து அனுப்பி வைத்துவிட்டனர்' என்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.

ஓய்வுபெற்ற குன்ஹாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் இணைந்து நடத்தினார்கள், ஆனால் ஜெயலலிதா குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமிக்கு அவர் எதிர்பார்த்த அரசு பதவிகள் எதுவும் தரப்படவில்லை. அத்துடன் ஓய்வுபெறும் நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

அதேநேரத்தில், குன்ஹாவுக்கு நீதித்துறை சில பொறுப்புக்களை ஓய்வுபெற்றதும் வழங்கத் தயாராக இருந்தது. அவையைத்தையும் வேண்டாம் என நிராகரித்துவிட்டு சொந்த ஊரான மங்களூருவில் அமைதியான வாழ்க்கைக்காகப் புறப்பட்டுச் சென்றார் நீதித்துறையில் ஒளிவீசும் சூரியனாகத் திகழ்ந்த நீதியரசர் ஜான் மைக்கேல் டி குன்ஹா.