சி.சி.டி.வி. காட்சிகள் டி.வி.யில் ஒளிபரப் பானதைப் பார்த்தவர்கள் மிரண்டார்கள். அரை குறை ஆடையுடன் ஓடிய அந்த இளைஞனின் கதிதான் மிரட்சிக்கு காரணம். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில்வே கேட்டில் அடிக்கடி சிக்னல் ‘கட்’ஆவது வழக்கம். இங்கு சிக்னலுக்காக பயன்படும் கம்பியில் இருக்கும் காப்பர், அடிக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை போகும் என்பதால், அதைத் திருடுபவர்களால்தான் இந்தப் பிரச்சனை. இதனைத் தடுக்க ரயில்வே போலீஸ் தொடர்ந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், பொன்னேரி சின்னக்காவனத்தைச் சேர்ந்த இரண்டாமாண்டு அரசியல் அறிவியல் படித்துவந்த மாணவர் மவுலீஸ்வரன், தனது நண்பர்களுடன் கடந்த 24-ஆம் தேதி பெரியக்காவனம் சிக்னலைக் கடந்தபோது, ரயில்வே போலீஸார் அழைத்து விசாரித்துள்ளனர். இதில், மவுலீஸ்வரனின் நண்பர்கள் விசாரணைக்கு பயந்து ஓடியநிலையில், மவுலீஸ்வரனை மட்டும் அழைத்துச்சென்றுள்ளனர். லாக்-அப்பில் போலீஸ் பாணியில் விசாரித்ததில், மனமுடைந்தவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது. மறுநாள் காலை எளாவூர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் மவுலீஸ்வரனை பிணமாக மீட்டது காவல்துறை.
பொன்னேரி அரசு மருத்துவமனையில் மவுலீஸ்வரனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள தகவல், அவரது குடும்பத்திற்கு தெரிவிக் கப்பட, உறவினர்கள், கல்லூரி மாணவர்கள் என கூடியதில் அங்கு பரபரப்பு சூழ்ந்தது. “""விசாரணைனு சொல்லி கூட்டிட் டுப் போய் என் மகனைக் கொன்னுட்டாங்க. அவன் ஸ்டேஷன்ல இருக்கான்னு எங்களுக்கு தகவல்கூட சொல்லல. இதுல ஏதோ மர்மம் இருக்கு ''’எனக்கூறிய மவுலீஸ்வரனின் பெற்றோர், உடலை வாங்க மறுத்துவிட்டனர். மேலும், அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டும், சாலை மற்றும் ரயிலை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட, உயரதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்த பிறகு, மாலை 4 மணிக்கு மவுலீஸ் வரனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டது. விசாரணைக்காக அழைத்துச் சென்றபோதுதான் மவுலீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்ததை அடுத்து, ‘விசாரணையின்போது மரணம்’ என மாற்றப்பட்டதோடு, கும்மிடிப்பூண்டி சிப்காட் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர். இதில் தொடர்புடைய கும்மிடிப்பூண்டி ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் அங்கத்குமார், காவலர் வினய்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகின்றனர்.
சிக்னல் கம்பிகள் திருடுபோன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மவுலீஸ்வரன், தற்கொலை செய்து கொண்டதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
-அ.அருண்பாண்டியன்