குமரி மாவட்டம் செருப்பாலூர் -காவு விளையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியரான தனுஷ் கடந்த 19-ஆம் தேதி மாலை காவஸ்தலத்திலுள்ள தனது காதலி வீட்டிற்குச் சென்று, ‘"கை நிறைய சம்பளம் வாங்குகிறேன், உங்க மதத்திற்கே மாறுகிறேன்... உங்க மகளை திருமணம் செய்து தாருங்கள்'’என்று காதலியின் பெற்றோரிடம் கெஞ்சியிருக்கிறார். மறுநாள் காலையில் அதே வீட்டு மாடியில் தூக்கில் பிணமாக அவர் தொங்கியதைப் பார்த்து, அது கொலையா?, தற்கொலையா? என அந்த ஊரே அதிர்ந்துபோய்க் கிடக்கிறது.
தனுஷுக்கு நேர்ந்தது என்ன? என்று அவரின் தந்தை துரைசாமி கண்ணீர் வடிய நம்மிடம், “""எனக்கு சொந்த ஊர் திருச்சி. தனலெட்சுமியை விரும்பி கல்யாணம் செய்துவிட்டு அவள் சொந்தஊரான செருப்பாலூரில் வசித்துவந்தோம். குலசேகரத்திலுள்ள ஒரு முஸ்லீம் பள்ளியில்தான் எனது ஒரே மகனும் காவஸ்தலத்தைச் சேர்ந்த முகம்மது அலியின் மகள் ஷமிராவும் படித்துவந்தனர். 12-ஆம் வகுப்புவரை அங்கு படித்த அவர்கள், காதலர்களாக மாறினார்கள்.
நான் வேலை விஷயமாக திருச்சிக்கு வந்து அப்பப்ப வீட்டுக்குச் செல்வேன். தனுஷ் பி.இ. படிப்பை கோயம்புத்தூரில் படித்தான். ஷமிராவும் கோயம்புத்தூர் வந்து பி.எஸ்.ஸி. நர்சிங் படித்தாள். இது அவர்களுடைய காதலை மேலும் வலுப் படுத்தியது. கல்லூரி 3-ஆம் ஆண்டு படிக்கும் போதுதான் இவர்களுடைய காதல் விசயம் எனக்குத் தெரியவந்து, உடனே கண்டித்தேன்.
இந்த நிலையில் இவர்களுடைய காதல் விவகாரம் ஷமிராவின் பெற்றோருக்குத் தெரியவர ... ஷமிராவின் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டனர். எனது மகன் கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல ஒரு நிறுவனத்தில் சேர்ந்தான். அதன்பிறகு இருவரும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்துவந்தனர். இந்நிலையில் ஷமிரா, நண்பர் ஒருவர் மூலம் தனுஷை தொடர்புகொண்டு, "எனக்கு நிச்சயதார்த்தம்... நீ வந்து தடுத்து நிறுத்து' என்றிருக்கிறாள்.
ஆனால் அன்றைய தினம் அவனால் அங்கு போகமுடியவில்லை. அவன் போகாததால் ஷமிரா, இவர்கள் சேர்ந்திருந்த போட்டோக்கள், ஆடியோ ரெக்கார்டிங்கை ஜமாத் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைத்து "எனக்கு இந்த நிச்சயதார்த்தத்தில் விருப்பமில்லை. நான் ஒரு இந்து பையனை காதலிக்கிறேன்' என கூறியிருக்கிறாள். இதனால் அந்த நிச்சயதார்த்தம் நின்றுபோனது.
பிறகு என் மகன் என்னிடம், ""அவள் எந்தளவு என்னை நேசிக்கிறாள். நான் முஸ்லீமாக மாறுகிறேன். ஷமிரா வீட்டிற்கு போய் பெண் கேளுங்கள். நான் மதம் மாறத் தயாராக இருக்கிறேனு சொல்லுங்கள்' என்றான். அதன்படி நான் அவங்க வீட்டிற்குப் போய் "என் மகன் உங்க மதம் மாறி உங்க மகளை திருமணம் செய்யத் தயாராக இருக்கிறான். நல்லா அவளை கவனித்துக்கொள்வான்'னு சொல்லி பெண் கேட்டேன். அதற்கு அவர்கள் "ரம்ஜான் மாதம் தொடங்கிவிட்டது அது முடிஞ்சதும் பேசலாம்'னு சொன்னார்கள்.
ரம்ஜான் முடிஞ்ச இரண்டாவது நாளில் ஷமிராவின் அப்பா எனது மகனுக்கு போன்செய்து, "உன் அப்பா என் வீடு ஏறி பெண் கேட்ட அன்னைக்கே உன்னை கோயம்புத்தூர்ல வச்சிக் கொன்னுருப்பேன். ரம்ஜான் மாதம்னால விட்டுட்டேன்'னு மிரட்டியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் கடந்த 20-ஆம் தேதி காலையில் குலசேகரம் போலீசிலிருந்து "உங்க மகனுக்கு விபத்து போலீஸ் ஸ்டேஷன் வாங்க'னு கூப்பிட்டாங்க. பதறிப்போன நான், "அவன் கோயம்புத்தூரில்தானே இருந்தான்?' என கேட்டபோது, "போலீஸ் ஸ்டேஷன் வாங்க'ன்னு சொல்லி வச்சுட்டாங்க.
போலீஸ் ஸ்டேஷன் போனதும், போலீஸ் "உங்க மகன் காதலி வீட்டுல தற்கொலை செய்துட்டான். போஸ்ட்மார்ட்டம் செய்து உடலை வாங்கிட்டுப் போங்க'னு அசால்டா சொல்லிட்டாங்க. "என் மகன் கோழை இல்லை. அவனை காயமின்றி கொலை செய்து கட்டித்தூக்கி தற்கொலையா காண்பிச்சுட்டாங்க. தாழ்த்தபட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் தி.மு.க. பாதுகாப்புனு சொல்லு றாங்க. என் மகனை கொலை செய்தவர்களை அதே தி.மு.க.தான் பாதுகாக்கிறது''’என தலையில் அடித்துக் கொண்டார்.
தாயார் தனலெட்சுமி கூறும்போது, ""என் வீட்டுக்கு இன்னைக்கே வரணும்னு அந்த பொண்ணு சொன்னதுனாலதான், அவன் கோயம்புத்தூரி லிருந்து பைக்ல குலசேகரம் வந் தான். இதெல்லாம் விசாரிக்காம, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரா மலே தற்கொலைனு போலீஸ் முடிவு பண்ணி என் மக னின் உடலையும் எரிக்க வச்சிட்டாங்க'' என கதறினார்.
ஷமிராவின் உறவினர்களிடம் நாம் பேசிய போது, ""ஷமிராவை அவனால் தொடர்புகொள்ள முடியாததால்தான் அவன் வீட்டிற்கே வந்தான். அப்போது ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை. பிறகு ஷமிராவின் அப்பாவும், சித்தப்பாவும் வந்து அவனிடம் சமாதானமா பேசி புரிய வைத்தனர். இது மாலையில் நடந்த சம்பவம். பிறகு திரும்ப இரவு வந்துதான் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளான். பெண்ணின் பெற்றோர் தி.மு.க. அனுதாபிகூட இல்லை. அவர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவார்களா என்பதுகூட சந்தேகம் தான். வெளியே உள்ள சிலர் தூண்டிவிடு கிறார்கள்''’’ என்றனர்.
போலீஸ் தரப்போ, “"தனுஷின் உடலில் ரத்தக்காயமோ, அடிபட்ட காயமோ இல்லை. அவன் சுவர் ஏறிக் குதித்ததற்கான அடையாளம் அவனுடைய பேண்ட் சட்டையில் உள்ளது. எஸ்.பி. உத்தரவின்பேரில் தீவிரமாக விசாரித்ததின் பின்தான் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தோம்''’என்கின்றனர்.
இருந்தாலும் குமரி மக்கள் இந்த மரணத்தை சந்தேகமாகவே பார்க்கின்றனர்.