பெற்றோர்களையும், திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்களையும் சமீபத்தில் உலுக்கிய சம்பவம் திருப்பூர் ரிதன்யாவின் தற்கொலை. இதேபோன்று தமிழகத்தில் பல சம்பவங்கள் நடந்தாலும், அதிகாரபலத்தால் மூடி மறைக்கப்பட்டு நீதி கிடைக்காமல் போன சம்பவங்களும் உள்ளன.
கடந்த ஜூலை நான்காம் தேதி, குமரி மாவட்டம் மேல்மிடாலத்தில், திருமண மான ஐந்தாவது மாதத்தில், வரதட்சணை கொடுமையால் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட ஜெபிலா என்ற பெண், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையை சேர்ந்த ராபின்சன்-புஷ்பலதா தம்பதியினரின் ஒரே மகள் ஜெபிலா. இவர் மேல்மிடாலத்தை சேர்ந்த நிதின்ராஜை காதலித்துவந்த நிலையில், அதை முதலில் எதிர்த்த ஜெபிலாவின் பெற்றோர், கடைசியில் மகளின் விருப்பப்படியே திருமணம் செய்துவைத்த நிலையில், இந்த தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் புஷ்பலதா கூறுகையில், "என் மகள் ஜெபிலா டாக்டராகணும்னு ஆசைப்பட்டு அது முடியாததால் பி.எஸ்சி. நர்சிங் முடித்தாள். அந்த நிதின்ராஜோடு செல்போன் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலானதில், இருவரும் வெவ்வேறு சமூகமென்பதால் வேண்டாமென்று போராடிப் பார்த்தோம். இரண்டாண்டுகளுக்கு பிறகு திருமணத்துக்கு சம்மதித்து, அவங்க கேட்ட 60 பவுன் நகை, 7 லட்சம் ரொக்கம், 2 லட்சத்துக்கு சீர்வரிசைன்னு அத்தனையையும் செய்தோம். திருமணம் முடிஞ்ச ஒரு மாசத்துலயே அவங்க வீட்டில் சுதந்திரமாக இருக்கமுடியாததை கணவனிடம் சொல்லியிருக்கா. அதற்கு, “அப்படியானால் உன் பெற்றோரிடம் சொல்லி நமக்கு வீடு வாங்கித்தரச் சொல். நாம அங்க தனியா இருக்கலாம்” என்றிருக்கிறார். உடனே மேல்மிடாலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு புதிய வீட்டை வாங்கிக் கொடுத்தோம்.
அந்த வீட்டில் குடியேறியதும், அதே வீட்டில், கணவரின் அம்மா, அப்பா மற்றும் இரண்டு சகோதரிகளின் குடும்பங்களும் புகுந்தனர். இதனால் அங்கும் அவளது சுதந்திரம் பறிபோனது. கணவனோடு தனித்திருப்பதற்கும் தடையாக இருந்தனர். இந்நிலையில், சென்னையில் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்ட நிதின்ராஜ், எந்த வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தான். வரதட்சணையாகக் கொடுத்ததை அடகு வைத்தும், விற்றும் அவர்களின் குடும்பத்துக்கு செலவழித்துவந்தான். இதையொட்டி இருவருக்குமிடையே மனக்கசப்புகள் வந்தன.
வீட்டிலேயே இருப்பதால், பகல் வேளையிலும் அவனுக்கு அந்த மாதிரி ஆசை வந்தபோதெல்லாம் வீட்டில் ஆட்களிருப் பதையும் பொருட்படுத்தாமல் அவளிடம் அருவருப்பான செயல்களில் ஈடுபட... அதற்கு, "உன்னை கட்டுனவன்தானே கூப்பிடுறான்'’என சகோதரிகளும் பச்சையாகக் கூறுவதை என்னிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறாள். அவர்களனைவரும் சேர்ந்துகொண்டு வரதட்சணை கேட்டு மகளை மிரட்டத் தொடங்கினார்கள். கடலில் மீன்பிடிக்க படகு வாங்கணும், 10 லட்சம் கொடுன்னு அவன் கூடுதல் வரதட்சணை கேட்டு அவளை டார்ச்சர் செய்துவந்தான்.
உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் டார்ச்சரை அனுபவித்தவள், பலமுறை என்னிடம் சொல்லி அழுதிருக்கிறாள். "நான் போராடித் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை நான்தான் அனுபவிக்கணும்...… இதில் நீங்க என்ன பாவம் செய்தீர்கள், எல்லாம் ஒருநாள் முடிவுக்கு வரும்' என்றவள், தற்கொலை முடிவை எடுத்துவிட்டாள்''’என்றார் கண்ணீருடன்.
உறவினர்கள் கூறுகையில், “"நிதின்ராஜ் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரையும் கைதுசெய்ய வேண்டுமென்று ஜெபிலாவின் உடலை நாங்க வாங்கவில்லை. கருங்கல் போலீசாரோ, மற்றவர்கள் தப்பிவிட்டனர், நிதின்ராஜை மட்டும் கைது செய்துள்ளோம் என்றனர். ஆனால் அவன்மீதும் எந்த வழக்கும் பதிய வில்லை. ஜெபிலாவை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் யாரையும் குறிப்பிடவில்லை. போலீசார் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்''’என்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பிலோ, “"சப்-கலெக்டர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் ஜெபிலா, என் சாவுக்கு யாரும் காரணமில்லை, நானே சுயமாக எடுத்த முடிவு என்று கடிதமெழுதி உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருக்கிறார். அதனடிப்படையில் தற்கொலை வழக்கு பதிந்து விசாரணையும் நடக்கிறது''’என்றனர்.
இவ்விவகாரம் குறித்து மனநல மருத்துவர் சோனியா ஜார்ஜ் கூறுகையில், "பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள், பெண்ணுக்கு அந்த பந்தம் நிம்மதியை கொடுக்கவில்லையென்றால், வெளியே நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவார்களென்று, மகளை அட்ஜஸ்ட் செய்யச் சொல்வார்கள். அது தவறு. பிரச் சனைக்கு தொடக்கத்திலேயே தீர்வுகண்டால் ஒரு உயிரைக் காப்பாற்றமுடியும். அதேபோல் திருமணமான பெண்கள் அங்கு தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் மனந்திறந்து பேச வேண்டும். தாங்களாகவே முடிவெடுக்க நினைக்கும்போதுதான் இதுமாதிரி மனநிலைக்கு அவர்களைத் தூண்டுகிறது. இன்றைக்கு பெண்கள் எல்லாத் துறையிலும் சாதிக்கும் நிலையில், சரியாக அமையாத திருமண பந்தத்திலிருந்து வெளியேறி, மறுபக்கத்தை தேர்ந்தெடுத்து சாதித்து, மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும். இதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் போராடுவதுபோல் திருமண வாழ்க்கையிலும் அந்த போராட்ட சூழல் சமுதாயத்திலிருந்து மாறுவதற்கு, கல்வி நிலையங்களில் வரதட்சணை கொடுமை குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும். இதுவே அதற்கு மருந்து'' என்றார்.
தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைத் தாக வேண்டும்.