"கஃபே காபி டே' நிறுவனரும் முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தாவின் மரணம், இந்திய தொழிலதிபர்களையும் தொழில் முனைவோர்களையும் கொஞ்சம் நடுங்க வைத்திருக்கிறது.
பெங்களூருவில் தொடங்கி சர்வதேச நாடுகள்வரை புகழ்பெற்ற நிறுவனம் "கஃபே காபி டே'. மணிக்கணக்கில் நேரம் செலவிடும் வசதிக்காக வும், வைஃபை வசதிக்காகவும் காதலர்கள், இளைஞர்கள், சுயதொழில் முனைவோர் காபி டேயைத் தேடிவந்து காபி ஆர்டர் செய்தனர். அதனுடைய கிளைகள் இன்று 1700-ஐயும் தாண்டி சென்றுகொண்டிருக்கின்றன.
காபியில் தொடங்கி தகவல் தொழில்நுட்ப துறைக்கும் நகர்ந்த சித்தார்த், "மைண்ட் ட்ரீ' என்னும் அவுட்சோர்சிங் பணிகளைச் செய்துகொடுக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுமத்தில் ஒருவராகி, வெற்றிச்சிகரத்தின் உச்சியை நோக்கி மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தார்.
வியாபாரம் என்பது வளர்ச்சியும் சரிவையும் உள்ளடக்கியது தானே. சித்தார்த்தா, சில சரிவுகளைச் சந்திக்க ஆரம்பித்தார். அதோடு, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு மாபெரும் தடைக்கல் அவரது வழியை மறித்தது. கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையிட்டது. கிட்டத் தட்ட அதேசமயத்தில் கஃபே காபி டே கிளைகளிலும் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்றன.
அந்த சோதனைக்குப் பின், அரசுக்குக் கட்டவேண்டிய வருமான வரியில் சித்தார்த்தா முறைகேடு செய்திருப்பதாகக் குற்றச் சாட்டு எழுந்தது. 300 கோடி வருமான வரி கட்டவேண் டிய இடத்தில் வெறும் 36 கோடி வருமான வரி மட்டுமே செலுத்தி ஏய்த்திருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து அவரது சொத்துக்கள் பலவற்றை அட்டாச்மெண்ட் செய்து விற்பனைசெய்ய இயலாதபடி முடக்கியது வருமான வரித்துறை.
கஃபே காபி டேயைக் கூட கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்க முயற்சிகள் நடந்ததாகக் கூறப்பட்டது.
இதனால் மிகுந்த மனநெருக்கடியிலிருந்த சித்தார்த்தா, கடந்த செவ்வாயன்று மங்களூர் செல்லும் வழியில் காரை நிறுத்தி, ஓட்டுநரை சற்று நேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு செல் போனுடன் இறங்கிச்சென்றார். சற்றுநேரத்துக்குப் பின் ஓட்டுநர் தொடர்புகொள்ள முயன்றபோது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சற்றுநேரம் காத்திருந்த ஓட்டுநர் அவரது குடும்பத் துக்குத் தகவல் சொல்ல... நாடே பரபரப்பானது. நேத்ராவதி ஆற்றங்கரையில் அவரைத் தேடி மீட்புப் படையினர் வந்திறங்கினர். ஆனால் மறு நாள் மதியம்தான் அவரது உடல் மீட்கப்பட்டது.
சித்தார்த்தாவின் மரணம் அதிர்வலைகளை மட்டுமின்றி, அரசியல் சர்ச்சைகளையும், விடைதெரியாத கேள்விகளையும் எழுப்பத் தொடங்கியிருக்கிறது.
வருமான வரித்துறையின் முன்னாள் டிஜி ஒருவர்தான் தனக்கு நேர்ந்த நெருக்கடிகளுக்குக் காரணம் என மரணத்துக்கு முன்னால் எழுதிய கடிதமொன்றில் சித்தார்த்தா தெரிவித்திருந்தார். ஆனால் அந்தக் கடிதத்தில் காணப்படும் கையெழுத் துக்கும், ஆண்டு வருமானவரி கணக்கை தாக்கல் செய்திருக்கும் கோப்புகளில் காணப்படும் சித்தார்த் தாவின் கையெழுத்துக்கும் வித்தியாசமிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகமெழுப்பு கின்றனர். காவல்துறையோ ""ஐ.டி. அதிகாரிகள் இன்னும் இந்தக் கடிதத்தை முறையாக பரிசோத னையே செய்யவில்லை. அதற்குள் கையெழுத்து வித்தியாசம் எப்படித் தெரிந்தது என கேள்வி யெழுப்புகின்றனர். எனினும் சந்தேகம் எழுந்தால் பாரன்சிக் துறை மூலம் கையெழுத்தின் நம்பகத்தன் மையை உறுதிசெய்துகொள்வோம்'' என்கின்றன.
வி.ஜி.சித்தார்த்தாவின் இறுதிச் சடங்குகள் அவரது தந்தையின் பேலூர் காபி எஸ்டேட்டில் நடந்து முடிந்திருக்கின்றன. சித்தார்த்தாவின் சொத்துமதிப்பு கிட்டத்தட்ட 25,000 கோடி வரை இருக்கையில், 7000 கோடி கடனுக்காகத் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்ற கேள்வி உறுத்தலாகத்தான் இருக்கிறது.
’A lot can happen over a cup of coffee’ என்பதுதான் "கஃபே காபி டே'யின் பிரபலமான விளம்பர வாசகம். தனது இக்கட்டுகளிலிருந்து மீளும் வழியும் அதில் அடக்கம் என அவர் ஏன் நம்பியிருந்திருக்கக்கூடாது என்கிறார்கள் அவரது மரணத்தை விரும்பாதவர்கள்.
-க.சுப்பிரமணியன்
________________
அரசியல் பின்னணி!
""அரசியல்ரீதியாக திட்டமிடப்பட்ட ஐ.டி. ரெய்டுகளை நடத்துவது பா.ஜ.க. அரசின் தொடர் வழக்கமாகிவிட்டது. அதற்கு சென்னை வாசன் ஐ கேரில் நடந்த ரெய்டுகளை உதாரணமாகச் சொல்லலாம். அன்றைக்கு ஐ.டி. கமிஷனராக இருந்த ராஜனிடம் "வாசன் ஐ கேர்', ப.சிதம்பரத்தின் பினாமி சொத்துக்கள்னு அறிவிக்க உத்தரவு தர்றாங்க. ஆனா, அவரோ இரண்டுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிவிட்டார். இதையடுத்து அவருக்கு நெருக்குதல் அதிகமாகிறது. மூன்று முறை வி.ஆர்.எஸ். கொடுக் கிறார். அதை ஏற்றுக்கொள்ளாமல் திறமையற்ற, ஊழல் அதிகாரின்னு சொல்லி 14 பேரில் ஒருவராக டிஸ்மிஸ் பண்ணினார் டைரக்டர் ஜெனரல்.
2017-ல் ரெய்டுக்குள்ளான கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் சித்தார்த்தாவுக்கும் கிருஷ்ணா என்பவர்தான் ஆடிட்டர். சிவக்குமாரை டார்கெட் பண்ணித்தான் சித்தார்த்தாவின் அலுவலகங் களிலும் ரெய்டு போனாங்க. எதுவும் நடக்கலை. அதனால சித்தார்த்தா வரி ஏய்ப்பு செய்திருப்பதாகச் சொல்லி அவரது சொத்துக்களை அட்டாச் பண்றாங்க. அதில் சித்தார்த்தாவின் "மைண்ட் ட்ரீ' பங்குகளும் அடக்கம். அதில் வெக்ஸ் ஆனதுதான் சித்தார்த்தாவின் தற்கொலைக்குக் காரணம்'' என்கிறார்கள் ஐ.டி. துறையின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்