ள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.அத்திப் பாக்கம் கிராமத்தில் மூன்று முறை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவரான நைனா என்பவர், தன் மீதான பொய்ப்புகாரை விசாரித்த போலீசார், தன்னை அவமானப்படுத்தியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரிக்கையில்,  "நைனாவுக்கு உடன்பிறந்தவர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத் துக்கு சரிதா என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்களுக்கு குடும்பச்சொத்தாக சுமார் 20 ஏக்கர் நிலம் இருந்துள்ளது.  நைனாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்கள் உட்பட மொத்த சொத்துக்களையும், பன்னீர்செல்வத்தின் மனைவி சரிதா, தனது மாமியார் எல்லம்மாள் உதவியுடன், தனது கணவரை காப்பாளராகப் போட்டு, தனது பெண் குழந்தைகள் பெயரில் தானப்பத்திரம் எழுதச்செய்திருக்கிறார். இந்நிலையில், சரிதாவின் கணவர் இறந்தபின்னர், இந்த மோசடி, நைனாவுக்கு தெரியவர, வழக்கறிஞர் சிவராமன் மூலம், தான செட்டில்மெண்ட் செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தார் நைனா. (இந்த வழக்கில், அவர் தற்கொலை செய்துகொண்ட நாளில், அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.) 

இதற்கிடையே, சொத்துக்களை பிரித்துக் கொடுக்குமாறு திருநாவலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் சரிதா. அவருக்கு தூண்டுதலாக பழனிவேல், ஆறுமுகம், கண்ணன், சுந்தரம், சந்திரசேகர் ஆகியோர் இருந்துள்ளனர். மேலும், நைனா தன்னை மானபங்கம் செய்ய முயன்ற தாகக் கூறி பொய்ப் புகாரளித்தார் சரிதா. இது நைனாவை

Advertisment

kallakuruchi1

அதிர்ச்சியடையச் செய்தது. இதுகுறித்து விசாரணைக்கு அழைத்த திருநாவலூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளையராஜா, நைனாவை டவுசரோடு அமரவைத்து அவமானப் படுத்தியிருக்கிறார். சரிதாவின் நட்பு வட்டத்தினரும் நைனாவை மிரட்டியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த நைனா, தனது நிலத்திலுள்ள மோட்டார் கொட்டகைக்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து நைனாவின் மனைவி பழனியம் மாள் கூறுகையில், "தம்பி மனைவி சரிதா, சொத்து சம்பந்தமாக பல்வேறு தொல்லைகள் கொடுத்த போதும், சட்டத்தின்படி பார்த்துக்கொள்வோம் என்பார். அப்படிப்பட்டவர் மீது, மானபங்கப் படுத்தியதாக காவல் நிலையத்தில் பொய்ப் புகார் கொடுத்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு போய்விட்டார். சம்பந்தப் பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வருந்தினார்.

Advertisment

நைனாவின் வழக்கறிஞர் சிவராமனோ, "சிவில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் காவல் நிலையம் விசா ரிக்கக்கூடாது. மீறி நைனாவுக்கு காவல்துறையினர் தொல்லை கொடுத்து வந்தனர். உயரதிகாரிகளுக்கு புகாரனுப்பியும், காவல்துறை அவரை மிரட்டுவதை நிறுத்தாததால் தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார். நைனா தற்கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக காவல் ஆய்வாளர் இளையராஜா மற்றும் பழனிவேல் உட்பட ஆறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்'' என்றார். 

காவல்துறையின் அராஜகத்தால் ஓர் அப்பாவியின் உயிர் பலியாகியுள்ளது.