எளிமையான தலைவர் என்றால் உலகளவில் அடையாளம் காணப்பட்ட இந்திய தலைவர், மகாத்மா காந்தி. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜரும், கக்கனும் எளிமையான தலைவர்களாக மனதில் நிற்கிறார்கள். காந்தி, காமராஜர், கக்கன் இவர்களைப் பார்க்காத தலைமுறையினர் அறிந்த எளிமையான தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஐயா நல்லகண்ணு அவர்களை இரக்கமற்ற இயற்கை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது.
ஆடம்பரம், பதவி, அதிகாரம் இவைதான் அரசியல் என்றாகிவிட்ட காலத்திலும் இவை எவையும் தன்னிடம் நெருங்க விடாமல், தன்னுடைய பொது வுடைமைக் கொள்கையை உறுதியாகக் கடைப் பிடித்து, மக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு அவர்கள். நூறாண்டுகள் முழுமையாக வாழ்ந்த அந்தப் பெருமகனாரின் 85 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் -தொழிலாளர் களின் உரிமைகளுக்கான போராட்டம், சாதி ஏற்றத் தாழ்வுக்கு எதிரான போராட்டம், இயற்கை வளங் களைக் கொள்ளையடிப்பவர்களுக்கு எதிரான போராட்டம் என அனைத்து வகைப் போராட்டங்களி லும் களப்போராளியாக நின்று மக்கள் நலனுக்காகப் பாடுபட்டவர்.
சதி வழக்குகளையும், கடுமையான சிறை வாசத்தையும், கொடுமையான சித்ரவதைகளையும் எதிர்கொண்டபோதும் மன உறுதி குறையாமல், கொள்கையைக் கடைப்பிடித்து, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராக உயர்ந்து நின்றார் தோழர் நல்லகண்ணு அவர்கள். தமிழ்நாட்டி லுள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் மதிக்கக் கூடிய தலைவராக மட்டுமில்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் அரசியல் தலைவர் என்றால் தோழர் நல்லகண்ணு போல நேர்மையாகவும், தூய் மையாகவும் இருக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய முன்னுதாரணமாகவும் திகழ்ந்தவர் அவர்.
நம் நக்கீரன் குடும்பத்தின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவர் ஐயா நல்லகண்ணு அவர்கள். அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 26 அன்று முதலில் வாழ்த்து தெரிவிக்கும் வரிசையில் நக்கீர னுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. ஐயாவின் போராட்டக் களங்களில் நக்கீரன் எப்போதுமே துணை நின்று, அவருடைய தீரமிக்க போராட்டத்தின் நியாயத்தை முன்னெடுத்து வந்திருக்கிறது. நக்கீரன் ஆசிரியரான என்னை ஜெயலலிதா ஆட்சியில் பொய்யான வழக்குப் போட்டு பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தபோது, நக்கீரனுக்கு உறுதுணையாக இருந்த தலைவர்களில் ஐயா நல்லகண்ணு முதன்மையானவர்.
அரசாங்கத்தின் அக்கிரமத்தைக் கண்டித்து, நக்கீரன் குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, மூத்த தலைவராக அங்குவந்து உரையாற்றி, சட்டப் போராட்டத்தின் மூலம் நிச்சயம் நக்கீரன் ஆசிரியரை விடுவிப்போம் என்றும் உறுதி யளித்து, பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தவர் நல்லகண்ணு ஐயாதான். அதன்பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் உள்பட அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம் அனைத்திலும் முதன்மையாக நின்று, என்னுடைய விடுதலைக்கு காரணமாக இருந்தார்.
நக்கீரனின் பயணத்தில் துணை நின்ற ஐயா நல்லகண்ணுவுக்கு வாழ்நாள் நன்றி செலுத்தும் வகையில் தோழர் சி.மகேந்திரன் எழுதிய ஐயாவின் வாழ்க்கை வரலாறான "கைதி எண் 9658'. தொடரை நக்கீரன் இதழில் வெளியிட்டு, அண்மையில் அதனை புத்தகமாகவும் வெளிக்கொண்டு வந்துள்ளது நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.
தோழர் நல்லகண்ணு தன் மரணத்திற்குப் பிறகு உடலையும் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்கு அர்ப்பணித்து, “இப்படி ஒரு தலைவரை இனி பார்க்க முடியுமா“ என்ற வியப்புடன் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார்.
செவ்வணக்கம் எங்கள் தோழரே!
-ஆசிரியர்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/26/nallakanu-2026-02-26-18-38-48.jpg)