"என்னுடன் இருக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகள்தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள்' என மருத்துவர் ராமதாஸ் சொன்னதும், பா.ம.க.வில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. "என் மூச்சு இருக்கும்வரை பா.ம.க.வின் தலைவர் நான்தான்' என அறிவித்திருந்தார் ராமதாஸ். "முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக் கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருப்ப தாகவும், அதனால் நான்தான் கட்சியின் தலைவராக செயல்படு வேன்' என்றும் பதில் அறிக்கை விடுத்திருந்தார் அன்புமணி. ராமதாஸ் நீக்கும் நிர்வாகிகளுக்கு அன்புமணி முக்கியத்துவம் தருவதும், அன்புமணி நீக்கும் நிர்வாகிகளுக்கு ராமதாஸ் முக்கியத் துவம் தருவதும், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில்... மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியின் முன்னோடிகள். இந்த நிலையில்தான் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்தோம்.
60வது திருமணநாள் வாழ்த்துக்கள்.
நன்றி... நன்றி...!
சரஸ்வதி அம்மாள் அவர்களுக்கு திருமண நாள் பரிசாக என்ன அளித்தீர்கள்?
என்ன பரிசு கொடுத்திருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த பரிசை கொடுத்திருப்பேன்.
திருமண நாளன்று அன்புமணி தைலாபுரம் வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். வரவில்லை. அது எப்படி இருக்கிறது?
எல்லோரும் என்றால் யாரை சொல்கிறீர்கள்? அதைப்பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
அம்மாவிடமும் அன்புமணி பேசவில்லையா?
அம்மா பேச தயாராக இருக்கிறார். அவர் பேசினால் பேசுவார்கள். ஆனால் தாயுள்ளம் வேதனைப் பட்டதை நான் உணர்ந்தேன்..
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க. தயாராகி விட்டதா?
தயாராகிக்கொண்டிருக்கிறோம்.
தேர்தல் களம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இந்தமுறை கடும் போட்டி நிலவும்.
இருமுனைப் போட்டியா? மும்முனைப் போட்டியா? நான்கு முனைப் போட்டியா?
நான் ஜோசியம் படிக்கல... நான் மருத்துவம் படித்தவன். ஜோசியம் படித்திருந்தால் சொல்லுவேன்.
பா.ம.க. என்ன முடிவு எடுக்கும்?
பொதுக்குழு, செயற்குழு கூடித்தான் முடிவு எடுப்போம்.
தி.மு.க., அ.தி.மு.க. என இரு அணிகள்தான் தேர்தலை சந்தித்து வருகின்றன. இந்த இரு அணிகளிலும் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். இரு அணிகளும் தற்போது உங்களுக்கு சாதகமாக இருக்கிறதா?
எப்போதுமே பா.ம.க. எந்த அணியில் சேருகிறதோ, அந்த கூட்டணி வெற்றிக் கூட்டணி என்று சொல்லுவேன்.
பா.ம.க. தனித்துப் போட்டியிடுமா?
வாய்ப்பு இல்லை.
பா.ம.க. தலைமையில் ஒரு அணி அமையுமா?
அமையாது. வாய்ப்பு இல்லை.
என்னுடன் இருக்கும் மாநில, மாவட்ட நிர்வாகி கள் தான் பா.ம.க. சார்பில் தேர்தலில் நிற்பார்கள் என சொன்னீர்கள். வேட்பாளர் கள், தொகுதிகளை முடிவு செய்துவிட்டீர்களா?
இப்போது எதனையும் சொல்ல முடியாது. போகப் போகத்தான் முடிவு செய்யமுடியும். காலம்தான் சொல்லும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் எனச் சொன்னதாகவும், ஆனால் பா.ஜ.க.வுடன் அவர்கள் கூட்டணி வைத்துவிட்டனர் எனத் தெரிவித்தீர்கள். இப்போது நீங்கள் விரும்பிய அ.தி.மு.க.வும், அன்புமணி விரும்பிய பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ளார்களே?
காலங்கள் அப்படியே போவதில்லை. ஒவ்வொரு முறையும் சில மாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது. அது அரசியலுக்கும் பொருந்தும். அதுபோன்ற மாற்றங்கள் நிகழத்தான் செய்கிறது.
இப்போதைக்கு எந்த முடிவையும் எடுக்க முடியாதா?
இன்றைய சூழலில் எந்த முடிவும் எடுக்க முடியாது. காலம் இருக்கிறது.
அண்மையில் நடந்த கூட்டங்களில் அய்யா சொல்லும் வழியில்தான் செல் கிறோம். மன்னித்துவிடுங்கள் என்றெல்லாம் அன்புமணி பேசுகிறாரே...
கடைசியாக என்ன சொல்கிறார்? தலைவர் பதவி வேண்டும் என்கிறார். செயல் தலைவராக இருக்குமாறு சொல்கிறேன். மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டும்போது, எல்லோருக்கும் போன் போட்டு மா.செ. கூட்டத்திற்கு போக வேண் டாம் என்று சொல்லியிருக்கிறார். அதற்கு என்ன காரணம் சொன்னார் என்றால், தன்னை அடிப்படை உறுப்பினரி-ருந்து நீக்குவதற்காகத்தான் உங்களையெல்லாம் கூப்பிடுகிறார் என்று பொய்யான தகவலை சொல்லியிருக்கிறார். அடிப்படை உறுப்பின ரில் இருந்து நீக்க நான் என்ன மூடனா, முட்டாளா, முரடனா? அப்படி அதனை நான் செய்தால் கட்சி ஏற்றுக்கொள்ளுமா, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
செயல் தலைவராக இருக்குமாறு சொல்கிறீர்கள். தலைவராக பதவி வகித்தவர், செயல் தலைவராக இருப்பது நன்றாக இருக்குமா?
அன்புமணிக்கு அந்த பொறுப்பு கொடுத்து 3 வருடம் ஆகிறது. இப்போது வேறு பொறுப் புக்கு வரலாம். மாறி மாறி பொறுப்புகள் வரும். ஒரே பொறுப்பில் கடைசி வரைக்கும் இருக்க முடியுமா? செயல் தலைவர் பதவியும் பெரிய பதவிதான். எல்லா இடங்களுக்கும் சென்று கட்சியை பலப்படுத்தலாம்.
இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?
மருத்துவர் என்ற முறையிலும், ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையிலும் இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்றுதான். போதைப் பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பா.ம.க. தொண்டர்களுக்கு எப்போது நல்ல செய்தி வரும்?
இப்போ மட்டும் என்ன? எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது? பா.ம.க. நன்றாக சென்று கொண்டிருக்கிறது. தினமும் தொண்டர்கள் வருகிறார்கள். நம் பிக்கையுடன் செல்கிறார்கள். முதலமைச்சர் ஆகணும், டெல்லியில் மந்திரி ஆகணும் என்ற ஆசையில் பா.ம.க.வை நான் ஆரம் பிக்கவில்லை. பாட்டாளி மக்களுக்கு உரிய சமூக, பொருளாதார முன்னேற்றம் வேண்டும். பணக்கார குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய கல்வியும், மருத்துவமும் பாட்டாளி மக்க ளுக்கு கிடைக்க வேண்டும் என்றுதான் ஆரம் பித்தேன். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 324 சமுதாயத்திற்காக எண்ணற்ற போராட்டங் களை பா.ம.க. நடத்தியிருக்கிறது. தொடர்ந்து மக்களுக்காக பா.ம.க. போராடும்; பா.ம.க. எழுச்சி பெறும்!