துரை மேயர் இந்திராணிக்கு எதிரான சூறாவளி, அவர் சார்ந்த தி.மு.க.விலேயே சுழன்றடித்து வருகிறது.

பொதுவாக மதுரையைப் பொறுத்தவரை, தி.மு.க.வின் மா.செ.க்களான தளபதி, அமைச்சர் மூர்த்தி, மணி மாறன் ஆகிய மூவருமே ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாகவே இருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாநகராட்சிக் கவுன்சிலர்களாக இவர்களது ஆதரவாளர்கள் அதிகம் வென்ற நிலையில், இவர்கள் மேயராக்க விரும்பிய இவர்களின் ஆதரவாளர்களுக்கு மேயர் பதவி கிடைக்கவில்லை.

மேயரைத் தேர்வு செய்யும் பொறுப்பை, அப்போது கட்சியில் பவர்ஃபுல்லாக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கட்சித் தலைமை ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்குப் புதுமுகமான, வழக்கறிஞர் பொன்வசந்த் என்பவரின் மனைவி இந்திராணியை மேயராக்கினார்.

dd

Advertisment

கட்சிக்கு சம்பந்தமே இல்லாத இந்திராணி மேயராக வந்தது மதுரை தி.மு.க.வினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேயரின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கூட கட்சிப் பிரமுகர்கள் பலரும் தலைகாட்டவில்லை. மேயர் தரப்பு கறி விருந்து போட்டபோதும், அதிலும் பலர் பங்கேற்கவில்லை. இது குறித்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "“என் தொடர்பான நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்கிறார்கள். பதிலுக்கு நானும் என் ஆதரவாளர்களிடம், அவரைப் பார்க்காதே, அங்கே செல்லாதே என்று சொல்வதாக கதை கட்டுகிறார்கள். நான் அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். காரணம், நான் பெரிய மனிதன்''’என்று பதிலடி கொடுத்ததோடு, ”"என்னால் அரசியலை விட்டு எப்போது வேண்டுமானாலும் வெளியே போகமுடியும். யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் யாருக்கும் அடிமை இல்லை''’என்றும் ஆவேசம் காட்டினார்.

இந்த நிலையில் தங்களுக்குள் முரண்பட்டிருந்த மதுரை தி.மு.க. மா.செ.க்கள் மூவரும் ஓரணியில் கைகோர்த்தனர். அந்த நிலையில் பி.டி.ஆரின் ஆதரவாளரான மேயர் இந்திராணிக்கு எதிராக கவுன்சிலர்கள் உசுப்பப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இருக்கும் 67 கவுன்சிலர்களில், 60 பேர் மேயரை மாற்றவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதோடு, அறிவாலயத்திற்கே அணிதிரண்டு வந்து கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுத்தனர்.

ff

உடனே அமைச்சர் நேரு தலைமையில் மதுரையில் சமாதானக் கூட்டம் நடந்தது. கட்சியை பேலன்ஸ் செய்து நடத்தும் வகையில், கவுன்சிலர் மா.ஜெயராமனை மாமன்றத் தலைவராக இதில் தேர்ந்தெடுத்து, கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாமல் மேயர் கிடப்பில் போட, கொந்தளித்துப்போன ஜெயராமன், மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயருக்கு எதிராக கண்டனப் போராட்டம் நடத்த, அவருக்கு ஆதரவாகப் பெரும்பாலான தி.மு.க. கவுன்சிலர்களும் களத்தில் இறங்கி, கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ விவகாரத்தால், அவர் மீது துறை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட, இதனால் அவருக்குத் தலைமையின் அனுசரணை அதிகம் இருக்காது என்பதைப் புரிந்துகொண்டவர்கள், இப்போது அவர் ஆதரவாளரான மேயரை இனி எளிதாக மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கைக்கு வந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே கடந்த 26 ஆம் தேதி, மத்திய மண்டல கூட்டத்தில் 56-ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நூர்ஜஹானை பி.டி.ஆரின் ஆதரவாளர் மிசா பாண்டியன் ஒருமையில் திட்டி அடிக்கப்போக, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கவுன்சிலர் நூர்ஜஹான், மாவட்ட காவல் ஆணையரிடம் "தன் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்கள் கட்சியினரே என்னைத் தாக்க முற்பட்டனர். மேயரும் இதைக் கண்டுகொள்ளவில்லை'’என்று புகார் கொடுத்து மதுரையின் அரசியல் களத்தைத் தகிக்கச் செய்திருக்கிறார்.

நூர்ஜஹானிடம் என்ன நடந்தது என்று நாம் கேட்டபோது...”"மிசா பாண்டியனின் மனைவி பாண்டியம்மாள்தான் மண்டலத் தலைவர். அவரிடம் கவுன்சிலர் என்ற முறையில், பொதுப் பிரச்சினை குறித்துதான் பேசினேன். அப்போது மிசா பாண்டியன் எழுந்து, என்னை ஒருமையில் பேசினார். நான் உடனே, "அண்ணே ஏன் ஒருமையில் பேசுகிறீர்கள்?' என்றதும் "அப்படித்தான் பேசுவேன். ஒன்னை உருத்தெரியாமல் அழித்துவிடுவேன்' என்றபடி அடிக்கப் பாய்ந்தார். அதனால்தான், அதற்கான வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு, மேயரிடம் புகார் கடிதம் கொடுத்தேன். ஆனால் அவர் இதுகுறித்து விசாரிக்கக்கூட இல்லை. காரணம். பி.டி..ஆரின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில், சொந்தக் கட்சி கவுன்சிலர்களையே மேயர் மதிப்பதில்லை. வார்டுகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரப்போவதாக தகவல் வருகிறது. அப்படி வந்தால், அதற்கு என் முழு ஆதரவு இருக்கும்''’என்றார் அழுத்தமாக. .

Advertisment

dd

மதுரை மாநகராட்சி மன்றத் தலைவரான ஜெயராமனோ “"பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் இருக்கிறோம். என்னை மாமன்றத் தலைவராக கட்சியே அறிவித்தும் இன்றுவரை அதை மேயர் அங்கீகரிக்கவில்லை. இதன்மூலம் கட்சியையே அவமானப்படுத்துகிறார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்க மூன்று மாவட்டச் செயலாளர்களிடமும் நாங்கள் அனுமதி கேட்டிருக்கிறோம். கட்டுப்பாட்டை மீறி செயல்படும் மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம்''’என்றார் நிதானக் குரலில்.

எழும் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற மேயரைச் சந்திக்க முயன்றோம். அவரது உதவியாளர்கள், “"மேயர் மீட்டிங்கில் இருக்கிறார்... வந்ததும் கூப்பிடுகிறோம்'’என்றார்கள். கடைசிவரை நம்மை அழைக்கவில்லை.

"மேயரின் நாற்காலி அங்கே, எந்த நேரத்திலும் கவிழலாம்...' என்ற நிலையில் தடதடத்துக்கொண்டு இருக்கிறது.