திருச்சி, ராம்ஜிநகர் -புங்கனூர் பகுதி கிராப்பட்டியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், தெருவில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அவனிடம் உறையூரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒரு பொட்டலத்தை கொடுத்து, "உன்னோட பள்ளிக்கூடத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவனிடம் இந்த பொட்டலத்தைக் கொடு' என்று கொடுக்க... அவனும் வாங்கிக்கொண்டு செல்கிறான்.
அடுத்தநாள் பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவனிடம் அதை கொடுக்க, அவனோ பதட்டமாகி... ‘ "டேய் டீச்சர் எல்லாம் இருக் காங்கடா.. இப்போ ஏன் கொடுக்குற. உன்னோட சாக்ஸ்ல வச்சு மறைச்சுக்கோ. நான் அப்பறம் வந்து வாங்கிக்கிறேன்'’ என்று சொல்ல... அந்த 9-ஆம் வகுப்பு மாணவனும் தன்னுடைய சாக்ஸில் வைத்து மறைத்துக்கொள்கிறான்.
இதை தூரத்தில் இருந்து கவனித்த டீச்சர், அந்த 9-ஆம் வகுப்பு மாணவனை அழைத்து, ’"அந்த சாக்ஸில் என்ன மறைச்சு வச்சிருக்க, எடுடா'’என்று மிரட்டியதும்... அவன் பயந்து நடுங்கியபடியே எடுத்துக் கொடுக்கிறான். பிரித்துப் பார்த்த டீச்சருக்கு அதிர்ச்சி. காரணம்... அது கஞ்சா பொட்டலம்.
உடனே பள்ளி நிர்வாகம், அந்த இரண்டு மாணவர்களையும் தற்காலிகமாக நீக்கியது. இதனால் ஆத்திரமடைந்த 9-ஆம் வகுப்பு மாணவனின் பெற்றோர், ""என்னுடைய பையனுக்கு அது கஞ்சா பொட்டலம் என்று தெரியாது. இதற்காக என் பையனை கஞ்சா விற்கிறான் என்று சொல்லி நீக்கக்கூடாது''’என ராம்ஜிநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுப்பையாவிடம் புகார் கொடுத்தனர்.
புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர் சுப்பையா, ""இந்த விவகாரத்தை நீங்க பள்ளிக் கூடத்திலேயே பேசிக்கொள்ளுங்கள்''’என்று அனுப்பி வைத்துவிட்டார். பள்ளி நிர்வாகத் தினரோ, "கஞ்சா விற்றது யார்?' என்று விசாரணை நடத்தாமல், இந்த பிரச்சனை வெளியே தெரியாமல் அப்படியே அமுக்கியும், நீக்கப்பட்ட இரண்டு மாணவர்களையும் திரும்ப பள்ளியில் சேர்த்துக்கொண்டனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது முதல் அதிர்ச்சி என்றால், இளைய தலைமுறையி னரே அதிகம் இப் போதையின் பிடி யில் சிக்கியிருப்ப தால் அவர்களை குறிவைத்தே கஞ்சா விற்பனை அதிகரித் துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது பள்ளி மாணவர்களிடையேயும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள் ளது. பள்ளி, கல்லூரி அருகி லேயே கஞ்சா பொட்டலங்கள் விற்கப்பட்டு வருவதுடன், இப்போது பள்ளிகளுக்குள்ளேயே -அதுவும் மாணவர்கள் மூலமாகவே கஞ்சா விற்கும் அவலமும் இருக்கிறது.
ஆன்லைன் மூலமாகவும் கஞ்சா சப்ளை ஆரம்பித்துவிட்டதால், நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு, தென்மண்டல போலீஸ் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை சென்னையில் அவசரமாக கூட்டியது. கடந்த 2014-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 6.7 லட்சமாக இருந்த நிலையில்... நடப்பாண்டில் 3 கோடியாக அதிகரித்துள்ளதாக இக்கூட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.
""கஞ்சா போதையின் பிடியில் இளைய சமுதாயத்தினர் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு நமக்கு இருக்கிறது''’’என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி இக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். "போதைப் பொருட்களை மாணவர்களுக்கு சப்ளை செய்யும் கடத்தல்காரர்கள் குறைவான அளவு போதைப்பொருளோடு பிடிபட்டால்கூட அவர்கள் மீது கடுமையான தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்' என்றும் இக்கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.
கஞ்சா புழக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து நடந் துள்ள இந்த அவசர கூட்டமும், அக்கூட்டத்தில் நடந்துள்ள விவாதங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் இது குறித்த கள ஆய்வில் இறங்கினோம்...
திருச்சி மன்னார்புரம் அருகே உள்ள பழைமையான பள்ளியில் மாணவர்களிடம் கஞ்சா விற்பதற்கு என்றே ராம்ஜிநகர் கஞ்சா வியாபாரிகள், ஒரு மாணவனை அந்தப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். இந்த மாணவன் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை மிகவும் குறைந்த விலையில் விற்று வந்திருக் கிறார்.
பள்ளியைச் சுற்றி விளையாட்டுத் துறையில் இருக்கும் மாணவர்கள் தங்கிப் படிப்பதால் அவர் களுக்கும் இந்த கஞ்சா சப்ளை ஆகிவருகிறது. இது குறித்து அந்த பள்ளியில் உள்ள சில ஆசிரியர்களுக்கு தெரிந்தும், இதை பற்றி பேசவோ அந்த மாணவன் மீது நடவடிக்கை எடுக்கவோ அவர்கள் அஞ்சுகின்றனர்.
ஆளும்கட்சியை சேர்ந்த பெண் பிரமுகரின் மகன், திருச்சியில் மசாஜ் சென்டரும், உடம்பு இளைப்பு நிலையமும் நடத்தி வருகிறார். வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பை வைத்து புதுப்புது போதை மருந்து, போதை ஊசிகளை கொண்டு வந்து உடம்பு இளைப்புக்காக பயன்படுத்துகிறார்கள். இங்கே வேலை செய்யும் வட இந்தியப் பெண்களுக்கும் இதை பயன்படுத்துகிறார்களாம். லோக்கல் போலீசுக்கு இது எல்லாம் தெரிந்தும் வேடிக்கை பார்க்கிறது.
முன்பு ஒரு காலத்தில் திருச்சி ராம்ஜிநகர் திருடர்கள் என்றால், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த போலீஸாரும் கதிகலங்கிப் போவார்கள். அப்படிப்பட்ட திருடர்கள் எல்லோரும் இப்போது கஞ்சா வியாபாரிகளாக மாறியிருக்கிறார்கள். ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா சந்தை போன்று ஆங்காங்கே ஆட்களை வைத்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். தேசிய சட்டக் கல்லூரியில் படிக்கும் வட இந்திய மாணவர்கள் அதிகம்பேர், கஞ்சாவுக்கு அடிமையாகி, ராம்ஜி நகரே கதி என்று கிடக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு இந்த மாணவர்கள் கஞ்சா போதையில் டூவீலரில் சென்றபோது அந்த ஏரியாவைச் சேர்ந்த ஒருவர்மீது மோதி யதில், அவர் உயிரிழந்துவிட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் கொடுத்து சமாளித் திருக்கிறார்கள் இந்த மாணவர்கள். கடைசியில் இந்த விஷயம் போலீசுக்குச் சென்றதால்... ராம்ஜிநகரில் கஞ்சா விற்கும் கும்பல் பற்றிய விசாரணையில் இறங்கியது. அப்போது கமல், மதன் என இருவர்தான் அங்கே முக்கியமான வியாபாரிகள் என்பது தெரியவந்தது. ராம்ஜி நகரைச் சுற்றி எடமலைப்பட்டி புதூர், கண்டோன்மென்ட், சோமரசம் பேட்டை, மணிகண்டம், சோழநகர் என இந்த 5 காவல்நிலையங்களையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கமலின் அண்ணன் நந்துவின் பிள்ளைகள்தான் பள்ளியில் கஞ்சாவை விற்பனை செய்கிறார்கள். கிருஷ்ணன், தனபால், கந்தன், பூட்டோ, கமலேஷ், சரவணன் ஆகியோர் போலீஸ் இன்ஸ் பெக்டர்களுக்கு ஆள்காட்டியாகவும், கஞ்சா வியாபாரிகளுக்கு புரோக்கராக வும் செயல்படுகிறார்கள். இவர்கள் மூலம்தான் திருச்சியில் கஞ்சா விற்பனை யும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது என்கிறார்கள்.
திருச்சியின் மையப்பகுதியான பாலக்கரை, செங்குளம் காலனி, காந்தி மார்க்கெட், தென்னூர், காஜாப் பேட்டை, மணல்வாரித்துறை ரோடு, குஞ்சாங்கொலை, தாமோதரன் எடத் தெரு, வேர்ஹவுஸ் செங்குளம் காலனி, ராம்ஜிநகர், பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிவறை களிலும், ரயில்வே தண்டவாளங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் கஞ்சா விற்கும் ஏஜெண்டுகள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி திருச்சி கொள்ளிடம் புதுப்பாலத்தில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களிடம் தகராறு செய்த கஞ்சா போதையில் இருந்த சிலர், காதலனை அடித்து கொள்ளிட ஆற்றில் வீசினர். இரண்டு நாள் தேடலுக்குப் பிறகு அந்த வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார். ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸ் அருகே கொள்ளிடம் ஆற்றிற்கு குளிக்க சென்ற 15 வயதுடைய சிறுமிகள் கஞ்சா கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினர். தாமோதரன் எடத்தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள், கழிவறைக்கு வந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தனர். சமீபத்தில் திருச்சி ரயில் நிலையத்தில் சுமார் 12 வயது, 10 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் கஞ்சா பொட்டலத்துடன் பிடிபட்ட னர்.
கடந்த இரண்டு மாதங்களாகவே திருச்சியில் தினமும் கஞ்சா பிடிபட்டது போன்று வழக்குப்பதிவு செய்து கொண்டே வருகிறது போலீஸ். இப்படி கஞ்சா மாநகரமாக மாறிவிட்டது திருச்சி மாநகரம். பள்ளி மாணவர்களும் கஞ்சாவுக்கு அடிமையானதோடு மட்டுமல் லாமல், பள்ளி மாணவர்கள் கஞ்சா விற்கும் தொழிலுக்கு மாறி வருவதுதான் ஆபத்தான செயலாக இருக்கிறது.
இதை, திருச்சி மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் பால கிருஷ்ணன் கவனத்திற்கு நாம் கொண்டு சென்றபோது, ""இது ரொம்ப சீரியஸான விஷயம். உடனடியாக நடவடிக்கை எடுக் கிறோம்''’’என்று உறுதியளித்தார்.
தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள திருச்சியில் மட்டுமல்ல... எல்லா மாவட்டங்களிலும் மாணவர்களை ஆட்டி வைக்கிறது இந்த கஞ்சா போதை.
-ஜீ.தாவீதுராஜ்