"நம்மோடு போகட்டும் இந்த கஷ்டம். நம்பிள்ளைகளுக்கு வேண்டாம். லாட்டரியில் பரிசு விழுந்தால் நம் பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துவிடலாம்'' என உழைப்பை நம்பாமல், அதிர்ஷ்டத்தை நம்பி தினக்கூலிகள் லாட்டரிக்கு அடிமையானது ஒரு பக்கம். மறுபக்கம், "தினசரி பாக்கெட் மணி பத்தவில்லை" எனக்கூறி கிடைத்த பாக்கெட் மணியை லாட்டரியில் போட்டு அடிமையாகியுள்ளது மாணாக்கர்கள் கூட்டம். லாட்டரியைத் தடுக்கவேண்டிய காவல்துறையோ "கவனிப்பால்' அடிமையாகியுள்ளது. இந்தக் கூத்து நடப்பது திண்டுக்கல் மாவட்டத்தில்!
2003ல் தமிழ்நாட்டில் அனைத்து வகையான லாட்டரி களுக்கும் தடை போட்டது அன்றைய ஜெயலலிதா அரசு. தடைப்போட்டதுமே கொல்லைப்புறம் வழியாக அண்டை மாநில லாட்டரி சீட்டுக் களை கொண்டு வந்தனர் லாட் டரி மாபியாக் கள். தினக்கூலி கள்தான் லாட் டரி மாபியாக் களின் இலக்கு. இப்பொழுது மாணாக் கர்களும் இந்த அடிமை வலையில் சிக்கியது தான் வேதனை!
"கடந்த காலங்களில் 10 சேம் பியூச்சர், 12 சேம் சிங்கம், 20 சேம் குயில், 30 சேம் ரோஜா, 50 சேம் டியர், 50 சேம் தங்கம் என்று பல ரகங்கள் இருந்தன. இது இப்பொழுது வெளிமாநிலங்களில் ஒரிஜினலாகவே சீட்டுகளாக அச்சடிக்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இந்த லாட்டரி சீட்டுக் களை மொத்தமாக வாங்கிவந்து சிலர் விற்பனையில் ஈடுபடுகின்றனர். சிலரோ, அந்த ஒரிஜினல் லாட் டரிச்சீட்டை கையில் வைத்துக்கொண்டு, பிரிண்டிங் மெஷின் ஏற்பாடு செய்து, ஒரிஜினல் லாட்டரியைப் போலவே பிரிண்ட் செய்து, அதை பொது மக்களிடம் 1 டிக்கெட் 2 ரூபாய் என்ற அளவில். விற்பனை செய்துவருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், செம்பட்டி, கொடைரோடு, நத்தம், கன்னிவாடி, வடமதுரை, கொடைக்கானல், பழனி பகுதிகளிலும், திண்டுக்கல் நகரிலோ சிறைச்சாலை மற்றும் தாலுகா அலுவலகம் அருகிலும் கடை போட்டு லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் காலையில் தொடங்கி 9 மணிவரை மாணாக்கர்கள் கூட்டமும், அதன்பின் தினக்கூலிகள் கூட்டமும் அதிகம் காணப்படும். மதியம் 3.30க்கு மேல் அனைவரையுமே காணலாம். இதுகுறித்து காவல்துறையில் புகாரளித்தால் குறிப்பிட்ட அந்த லாட்டரி கடைக்கு போன் செய்து தகவல் கூறிய நம்மையே போட்டுக்கொடுத்து விடும் போலீஸ்'' என்கின்றார் சமூக ஆர்வலர் ஒருவர்.
தடைசெய்யப்பட்ட லாட்டரியை அனை வரும் வாங்கி விட முடியுமா? "நம்பிக்கைதான் இந்த தொழிலின் ஆணி வேர். இந்த ஆள் இவருக்கு வேண்டியவர் எனத் தங்களுக்கு தெரிந்த நபர்களை கூறினால் தான் லாட்டரி சீட்டிற்கான எண்ணையே காண்பிப்பார்கள். முடிவில் பணத்தை வாங்கிக் கொண்டு லாட்டரி சீட்டின் பெயர், சீரியல் எண் மட்டுமே இடம்பெறும் துண்டு ஜெராக்ஸ் சீட்டை மட்டுமே கொடுத்தனுப்புவார்கள். சீட்டின் விலை ரூ.120. எத்தனை சீட்டுக்கள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். கோடிக்கணக்கான ரூபாய் பரிசுத்தொகை என சீட்டில் அச்சடிக்கப்பட்டி ருந்தாலும் அதிகபட்ச பரிசுத்தொகை ரூ.7500 மட்டுமே! அதனைத் தாண்டி லட்சக்கணக்கில் பரிசு விழுந்ததாக செய்தி இருந்தாலும் அதனை வாங்க முடியாது. அடித்துத் துரத்திவிடுவார்கள். இது நானே அனுபவப்பட்டது. துவக்கத்தில் ரூ.500 பரிசு விழுந்தது. கூடுதல் பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு குறுகிய காலத்தில் ரூ.2 லட்சம் வரை இழந்துள்ளேன். இப்பொழுது ரூ.500 சம்பளத்தில் அதே லாட்டரிக்கடையில் வேலை செய்கிறேன். படிக்கும் பிள்ளைகள் இதே லாட்டரியை வாங்குவது தான் வேதனையாக இருக்கிறது'' என்கிறார் முகம், பெயர் மறைத்த வேடச்சந்தூர் காரர்.
"பள்ளிக்கு, கல்லூரிக்கு செல்லுமுன் லாட்டரி சீட்டுக்கள் குறித்த துண்டு சீட்டை வாங்கிச் செல்லும் மாணக்கர்கள், மாலை வேளையில் தங்களது மொபைலிலேயே ரிசல்ட் பார்த்துக் கொள்கின்றனர். அதனையும் தாண்டி வருபவர் களுக்கு பரிசுத் தகவலையும் கூறிவிடுவார்கள் விற்பனையாளர்கள். சம்பந்தப்பட்ட பகுதி ஸ்டேஷன் தொடங்கி, துணைச்சரகம், தனிப்பிரிவு என அனைவரையும் லாட்டரி விற்பனையாளர்கள் "கவனிப்பதால்' தங்கு தடையின்றி நடக்கின்றது லாட்டரி விற்பனை. அதனையும் தாண்டி ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் தங்களிடம் வேலை பார்க்கும் "பலி ஆட்டை' நாள் ஒன்றுக்கு ரூ.500 சம்பளத்தில் லாட்டரி கேசுக்கு அனுப்பி வைப்பது வழக்கமான ஒன்று.
திண்டுக்கல் மத்தியில் தாலுகா அலுவலகம், சிறைச்சாலை அருகிலிருக்கும் லாட்டரி கடையை ஒரு நாளும் கண்டுகொண்டதில்லை சட்டம் ஒழுங்கு காவல்துறை. மாறாக, அவர்கள் கையைக் காட்டும் போட்டியாளர்கள் மீது வழக்கினை பதிவு செய்கின்றது. சமீபத்தில் கூட சின்னாளப்பட்டி பகுதியில் லாட்டரி விற்பனை செய்ததாக இருவரை கைது செய்ததும் அதே வகையே! மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டால் மட்டுமே மாணாக்கர்கள் காப்பாற்றப்படுவார்கள்'' என்கிறார் உளவு அதிகாரி ஒருவர்.
லாட்டரி விற்பனையை தடயம் இல்லாமல் ஒழித்து மாணாக்கர்களை மீட்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை!