"எங்களுக்கும் லேப்டாப் கொடுங்கன்னுதானே கேட்டோம். அதுக்காக இப்படியா அராஜகம் பண்ணுவாங்க. மாட்டை அடிக்கிறது போல அடிக்கிறாங்களே'' என கதறுகிறார்கள் ஈரோடு மாவட்ட மாணவ-மாணவியர்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச லேப்டாப் வழங்குகிறது. ஆனால், 2017-18 கல்வி யாண்டில் படித்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்குவதாக உத்தர வாதம் அளித்திருந்தது.

அதன்படி இந்தாண்டு இரு வாரங்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையன் தனது தொகுதி யான கோபிசெட்டிபாளையத்திலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி திட்டத்தைத் தொடங்கிவைத்தனர். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் லேப்டாப் வழங்குவதை அரசின் சாதனை விழாவாக, அந்தந்த தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நடத்தி வருகின்றனர்.

aa

Advertisment

இந்நிலையில், கடந்த ஜூன் 23-ந் தேதி ஈரோட்டில் உள்ள வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், குமலன்குட்டை ஆகிய மூன்று இடங்களிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட சென்றாண்டு படித்த மாணவர்கள், தங்களுக்கும் லேப்டாப் கொடுப்பார்கள் என்ற ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி யது. வீரப்பன்சத்திரம் பள்ளிக்கு ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு மற்றும் மேற்கு எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்ச ருமான கே.வி.ராமலிங்கமும் கட்சியினர் புடைசூழ வந்தனர்.

அப்போது அவர்களிடம் தங்களுக்கு லேப்டாப் வழங்கப்படாத காரணத்தை முன்னாள் மாணவர்கள் கேட்க, ""நீங்கதான் படிச்சி முடிச்சிட்டீங்களே. முதல்ல இப்ப படிக்கிற பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். அப்புறம் வந்தா பார்க்கலாம்'' என அலட்சியமாக பதிலளித்தார் எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம். இதனால் கொதித்துப்போன மாணவர்கள், “""போன வருஷம் கேட்டப்ப, அடுத்த வருஷம் கொடுக்கிறதா சொன்னீங்களே. இப்பவும் அதே அரசுதானே இருக்கு. எங்களுக்கு முதல்ல கொடுங்க'' என எம்.எல்.ஏ.க்களை முற்றுகையிட்டு முழங்கினர்.

இதைக் கண்டுகொள் ளாத எம்.எல்.ஏ.க்கள் போலீ சார் உதவியுடன் மாணவர் களை அப்புறப்படுத்திவிட்டு, நிகழ்ச்சியில் சிரித்த முகத் துடன் கலந்துகொண்டனர். இதைக்கண்டு கடுப்பான மாணவர்கள் பள்ளிவளா கத்துக்கு வெளியே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதனால், எம்.எல்.ஏ.க் களால் பள்ளியை விட்டு வெளி யேற முடியாமல் போனது. வேறுவழியின்றி, பின்வாசல் டாய்லெட் ரூம் வழியாக காரிலேறி, குமலன்குட்டைக்கு பறந்தனர். அங்கும் அவர் களுக்கு குமலன்குட்டை அரசுப் பள்ளி மாணவர்களின் “வரவேற்பு காத்திருந்தது. அவர்களிடம், "கண்டிப்பாக உங்களுடன் பேசுகிறோம்... பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக்கூறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

"வேண்டும் வேண்டும் லேப்டாப் வேண்டும்' என்ற மாணவர்களின் முழக்கத்திற்கு நடுவே நிகழ்ச்சியை நடத்தமுடியாமல், ஆசிரியர்கள் கையில் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, அங்குள்ள வகுப்பறை ஒன்றில் மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் எம்.எல்.ஏ.க்கள். பத்து மாணவர்களை போலீசார் அழைத்துச்செல்ல, ""ஏம்பா இன்னும் ரெண்டு மாசத்துல உங்களுக்கு கொடுக்கிறோம்... ரகளை பண்ணாதீங்க'' என எம்.எல்.ஏ. தென்னரசு கூற... ""என்னங்க சேலத்துக்கு ஒரு நீதி ஈரோட்டு ஒரு நீதியா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி போனவருஷம் படித்த மாணவர்களுக்கும் சேர்த்தேதான் கொடுத்தாரு. அது மட்டுமில்லாம அவருடைய சொந்த ஊரான எடப்பாடியில் இந்த வருஷம் பத்தாவது படிக்கிற பசங்களுக்கும் லேப்டாப் கொடுத்திருக் காங்க. அது மட்டும் எப்படிங்க?'' என மாணவர்கள் கிடுக்குப்பிடி பிடிக்க... எம்.எல்.ஏ.க்கள் திணறிப்போனார்கள்.

இதற்கிடையேதான், வீரப்பன்சத்திரம் அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சாலை மறியலைத் தொடர, அங்கு கூடுதல் போலீசார் களத்தில் இறங்கி தடியாலும், லத்தியாலும் மாணவர்களைக் கண்மூடித் தனமாக தாக்கத் தொடங்கினார்கள். சில போலீசார் பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்ததோடு, கைதிகளைத் தாக்குவதுபோல கன்னத்தில் அறைந்தனர். மாணவிகளை ஆண் போலீசாரே தரதரவென இழுத்துச் சென்று கொடூரமாக நடத்தியதால், மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடியதில் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது. போலீ சார் தாக்கியதால், வலிதாங்க முடியாமல் மாணவர்கள் கதறியழுதனர்.

பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அதை விலையில்லாமல் தருவதாக உத்தரவாதம் கொடுத்துவிட்டு, அடுத்த ஆண்டு தருவதாக இழுத்தடித்தது அரசின் குற்றம். அதோடு நிறுத்தாமல் சமூக முன்னேற்றத்துக்கான இளைஞர்களை, காக்கிகளை ஏவி தாக்கியது பெருங்குற்றம். எப்போதுதான் திருந்தப்போகுது இந்த அரசு?

-ஜீவாதங்கவேல்

___________

பத்திரிகையாளர்களைத் தாக்கி...!

Advertisment

குமலன்குட்டை பள்ளியில் மாணவர்களோடு எம்.எல்.ஏ.க்கள் பேச்சுவார்த்தை நடத்தியபோது செய்தி சேகரித்தனர் செய்தியாளர்கள். அப்போது, அங்கிருந்த எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கத்தின் மகனும், ஈரோடு அ.தி.மு.க. மாணவரணி செயலாளருமான ரத்தன்பிரதீவ், “"மாணவர்கள் முற்றுகை! எம்.எல்.ஏ.க்கள் திணறல்னு செய்தி போடப்போறீங்களாடா நாய்களா!' என அநாகரிகமாக பேசியபடியே, தனது அடியாட்களோடு தமிழ் இந்து நிருபர் கோவிந்தராஜ், ஜூவி நிருபர் நவீன் ஆகியோரைத் தாக்கத் தொடங்கினர். இதைத் தடுக்காமல் ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்.பன்னீர்செல்வம் இருவரும் வேடிக்கை பார்த்தனர். பத்திரிகையாளர்களின் போராட்டத்திற்குப் பிறகே ரத்தன்பிரதீவ் மீது ஒப்புக்கு ஒரு வழக்கு பதிந்திருக்கிறது காவல்துறை.