10 நாட்களில் இரண்டு முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடைமடைப் பகுதிகளில் இருக்கும் ஏரி, குளங்கள் வறண்டுதான் கிடக் கின்றன. எடப்பாடி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கை வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் தினந்தோறும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
"எங்களுக்கு தண்ணீர் கொடு, உங்களுக்கு உணவு கொடுக்கிறோம்'’என்ற கோஷத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 24-ஆம் தேதி, பட்டுக்கோட்டையில் அரசு அலுவல கங்களை முற்றுகையிட்டார்கள். திருவோணத்தில் சாலை மறியல் செய்த விவசாயிகளை கைது செய்தது போலீஸ். கலத்தூர், குருவிக்கரம்பை, வீரியங்கோட்டை பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை விவசாயிகளும் இளைஞர்களும் தங்களது சொந்தப் பணத்தில் மராமத்து செய்துவிட்டு காத்திருந்தும் தண்ணீர் வராததால் ரொம்பவே மனமுடைந்துவிட்டார்கள் மக்கள்.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கல்லணைப் பாசனம் உள்ள கடைமடைப் பகுதிகள் காய்ந்து கிடக்க...
ஆலங்குடி தி.மு.க. எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமையில் போராட்டக் களம் அமைக்கப் பட்டது. அப்போது வந்த அதிகாரிகளும் அதன்பின் வந்த அமைச்சர் விஜயபாஸ்கரும் நாகுடிக்கு 300 கன அடி நீர் திறந்துவிடப்படும் என உறுதியளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் சொன்னபடி அதிகார வர்க்கம் நடந்து கொள்ளாததால், கடந்த 22-ஆம் தேதி காலை, நாகுடி கல்லணை கால்வாய் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுவிட்டனர்.
போராட்டத்தின் நான்காம்நாள் கல்லூரி மாணவ-மாணவிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக அணி அணியாக திரண்டு வந்து களத்தில் குதித்தனர். சில மாணவர்கள் பொ.ப.துறையின் அதிகாரிகளுக்கு போன் போட்டு "தண்ணீரை எப்போது திறப்பீர்கள்' எனக் கேட்டதும், “"இதே கேள்வியை எத்தனைபேர் எத்தனை தடவைதான் கேப்பீங்க. இப்படியே கேட்டுக்கிட்டிருந்தா நெஞ்சு வெடிச்சு செத்துருவேன்... என் சாவுக்கு நீங்கதான் காரணம்'’’என எரிச்சலாக ஒரு அதிகாரி பேசிய ஆடியோவை சோஷியல் மீடியாவில் பரவ விட்டனர் மாணவர்கள்.
சி.பி.ஐ.யின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அ.ம.மு.க. எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. உதயம் சண்முகம் ஆகியோர் போராட்டக்களத்திற்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்க மிட்டனர்.
நான்கு நாட்கள் ஆகியும் போராட்டத்தின் வீரியம் குறையாததால், பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகள், தொடர்ந்து 10 நாட்களுக்கு தினசரி 250 கன அடி தண்ணீர் திறந்துவிடுவதாக ஒத்துக்கொண்ட பின்தான், தற்காலிகமாக தணிந்தது போராட்டம்.
-இரா.பகத்சிங்