திருச்செங்கோடு, நாமக்கல், இராசிபுரம் போன்ற பகுதிகளில் சிறுவர்களை போர்வெல் போடும் பணிக்கு ரிக் வண்டி முதலாளிகளுக்கு அடிமைகளாக விற்கும் கொடுமை நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது மண்மலை கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு-வெண்ணிலா தம்பதிக்கு ஒரு மகன், மகள். தாய் வெண்ணிலா இறந்ததால், குழந்தைகளை தலைவாசலில் உள்ள அவரது தாய்வழிப் பாட்டி கருப்பாயி வீட்டில் தங்கவைத்து, அங்கிருந்தபடி தேவியாக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

stt

பத்தாம் வகுப்பு படித்துவந்த தங்கராசு மகன் சந்தோஷ், சிவபக்தனாக இருந்துள்ளான். கடந்த ஒன்றாம் தேதி சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக திருச்செங்கோடு மலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளான் சந்தோஷ். கையில் கொண்டு சென்றிருந்த பணம் முழுக்க செலவானதால், விழா பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரிடம் உதவி கேட்க நினைக்கையில், ஒருவர் அச்சிறுவனைப் பரிவோடு அணுகி விசாரிக்க... ஊருக்குச் செல்ல பணமில்லாமல் பரிதவிப்பதைக் கூறியிருக்கிறான். அவரோ, "நான் சொல்வதைக் கேள்; ஊருக்குச் செல்ல பண உதவி செய்கிறேன்'' என்று பரிவோடு கூறி சிறுவனை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு ரிக் முதலாளியிடம் அழைத்துச் சென்று, 5,000 ரூபாய் கமிஷனைப் பெற்றுக்கொண்டு ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், பையன் காலையிலிருந்து இரவுவரை வீடு திரும்பாததால் பதறிப்போன பாட்டி கருப்பாயி, சந்தோஷின் அப்பா தங்கராசு, சித்தப்பா பாலு ஆகியோ ருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அடுத்து நடந்த விவரங் களை சந்தோஷின் சித்தப்பா பாலு நம்மிடம் கூறுகிறார். "சந்தோஷ் தனியாக வெளியூர்களுக்குச் சென்றதில்லை. சிவன்மீது பக்தியாக இருப்பதால் சிவன் கோவில்களுக்குச் சென்றிருக்கலாமென்ற எதிர்பார்ப்பில், சந்தோஷைத் தேடி, பல்வேறு சிவன் கோவில்களுக்கு நானும் உறவினர்களும் தேடிச் சென்றோம். சந்தோஷ் கிடைக்காததால் தலைவாசல் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். மேலும், அவனது பள்ளி ஆசிரியர் மற்றும் நண்பர்களிடம் சந்தோஷ் எங்கிருந்தாவது போன் மூலம் பேசினால் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

சுமார் 13 நாட்களுக்குப் பிறகு சந்தோஷ், அவனது நண்பன் ஒருவனுக்கு போன் போட்டு, போர்வெல் போடும் ரிக் முதலாளி யிடம் சிக்கிக்கொண்டிருப்பதாகக் கூறியுள் ளான். இதை அம்மாணவன் ஆசிரியரிடம் கூற, அவர் போலீசாரிடம் தெரிவித்து, கால் வந்த செல்பேசி எண் விவரத்தையும் கூறியிருக்கிறார். போலீசார் அந்த எண்ணுக்கு போன் போட்டபோது யாரும் எடுக்கவில்லை. உடனே அந்த செல்போன் லொகேஷனைப் பார்த்தபோது, கர்நாடக மாநிலத்தையும், திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியை யும் மாறி மாறிக் காட்டியிருக்கிறது. அந்த எண்ணுக்குத் தொடர்ச்சியாக கால் செய்த போது, மறுமுனையில் பேசியவர், தான் திருச்செங்கோட்டிலுள்ள முடிதிருத்தும் தொழிலாளி என்றும், கடைக்கு சாமான் வாங்குவதற்காக அவ்வப்போது கர்நாடக மாநிலம் சென்று வருவதாகவும் கூறினார். அதோடு எண் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.

Advertisment

student

உடனே ஒரு காரில் போலீசா ருடன் நாங்களும் திருச்செங் கோடு சென்றோம். பஸ் நிலையப் பகுதியிலுள்ள சலூன் கடை களைத் தொடர்ந்து ஆய்வுசெய்ததில், சம்பந்தப்பட்ட கடையைக் கண்டுபிடித்த போலீசார், சலூன் கடைக்காரரிடம், "போர்வெல் ரிக் வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கமுடியுமா?'' என்று பவ்யமாகக் கேட்டனர். உடனே அவர், இப்பகுதியில் அதற்கான புரோக்கர்கள் இருப்பதாகவும், அவர்களை அழைத்து வருவதாகவும் கூறி, 3 புரோக்கர்களை அழைக்க, அவர்களைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில், வாசுதேவன் என்கிற ரிக் முதலாளி சிக்கினார்.

அவரிடம் போலீசார் பேசியபோது, "நான் பெரிய ஆள். வி.ஐ.பி.ங்க பழக்கமெல்லாம் இருக்கு' என்று போலீசை மிரட்டும்வகையில் பேச... போலீசார் அதற் கெல்லாம் அசராமல், "உன்னிடம் ஒரு மாணவன் சிக்கி யுள்ளான். அவனை ஒப்படைக்காவிட்டால் சிறைக்குள் தள்ளி களி தின்ன வைப்போம்'' என்று அதட்ட... பையன், கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் ரிக் போர்வெல் போடும் வேலையிலிருப்பதை ஒப்புக்கொண் டார். அதன்பின் இரண்டு போலீசாருடன் நானும் அண் ணன் தங்கராசுவும் கர்நாடகாவிலுள்ள அந்த இடத் துக்கே சென்று வாசுதேவனைச் சந்திக்க, சந்தோஷை போலீசாரிடம் ஒப்படைத்தார். திருச்செங்கோட்டிலுள்ள புரோக்கர் 5,000 ரூபாய்க்கு விற்றதை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு சம்பந்தமாக எப்போது அழைத்தாலும் காவல் நிலையத்துக்கு வரவேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு, சந்தோஷுடன் ஊருக்கு வந்தோம்'' என்றார்.

தலைவாசல் போலீசாரைப் பொறுத்தவரை அந்த ஒரு மாணவன் கிடைத்ததோடு போதுமென்று இருக்கிறார்கள். ஆனால், திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல் பகுதிகளில் ஆழ்குழாய் போர் போடும் பணிக்கான ரிக் வாகனங்களில் வேலை செய்வதற்காக சிறுவர்களைக் கடத்தி விற்கும் புரோக்கர்கள் அதிகம் உள்ளனர். எனவே தமிழக காவல்துறை, தீவிர வேட்டையில் இறங்கினால், மேலும் பல சிறுவர்களை மீட்டெடுக்கலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Advertisment