தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்ட மளிப்பு விழா என்ற அறிவிப்பு வெளியானதுமே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி பெறாத படிப்பிற்கும் சேர்த்து ஆளுநர் பட்டம் வழங்குகிறாரா? என்ற பரபரப்பு எழும்பிய நிலையில், அனுமதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் சொல்லிக் கொண்டது.
திட்டமிட்டபடி ஏப்ரல் 24-ஆம் தேதி பல்கலைக்கழகத் தில் 10,840 பேருக்கு பட்டம் வழங்கவிருந்தனர். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொள்ள வந்தார். சி.பி.எம் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்யக் காத்திருந்த நேரத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
பட்டமளிப்பு விழா நடக்கும் விழா அரங்கில் பட்டம் பெற காத்திருந்த அரவிந்தசாமி என்ற எம்.பில். மாணவரை தனியாக அழைத்துச்சென்று விசாரணை செய்த போலீசார், சோதனை செய்வதாகக் கூறி உடைகளை அவிழ்த்து சோதனை செய்ததுடன் பட்டம் பெறவும் அனுமதிக்கவில்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து டி.ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர் மாணவர்கள். போலீசாரின் தள்ளுமுள்ளும் நடந்துள்ளது. இந்த நிலையில் போலீசார் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக் கத் தயாராகி வருகின்றனர் இந்திய மாணவர் சங்கத்தினர்.
பட்டம்பெற முடியாமல் தனி அறையில் வைக்கப்பட்டு சோதனைக்கு உள்ளான தமிழ் இலக்கிய ஆய்வு நிறைஞர் பட்ட மாணவரும், எஸ்.எப்.ஐ. மாநிலச் செயலாளருமான ஜி.அரவிந்தசாமி நம்மிடம்,
"எங்கள் குடும்பத்தில் முதல் ஆய் வுப் பட்டதாரி நான். ஆளுநர் கையில் பட்டம் கொடுக்கிறார்கள் என்றதும் நீலக்கலர் சட்டையில் காலை 9 மணிக்கே உள்ளே வந்து பல்வேறு விசாரணை களுக்குப் பிறகு 9.25-க்கு பட்டம் பெற கொடுக்கப்பட்ட வெள்ளை நிற அங்கியுடன் விழா அரங்கிற்கு வந்தமர்ந் தேன். அதன் பிறகு 9.30-க்கு ஒரு போலீஸ் டீம் வந்து என்னை சோதனை செய்தார்கள். ஒன்றும் இல்லை என்று சொல்லிச் சென்றனர். அடுத்து 9.35-க்கு மற்றொரு டீம் வந்து சோதனை செய்தார்கள். பிறகு 9.45-க்கு வந்த டீம் என்னை எழுப்பி வெளியே அழைத்து வந்ததும், அரங்கக் கதவுகளை மூடிவிட்டு அருகிலிருந்த மின்சாரக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச்சென்று தனிமைச்சிறை வைத்து என் உடைகளை கழற்றச்சொன்னார் கள். முடியாது என்றேன். ஆனால் ஆளுநர் வருவதற்கு எதிர்ப்புக்காட்ட ஏதாவது வைத் திருப்பீர்கள் என்று சொல்லி கழற்றினார்கள்.
வெள்ளை அங்கியை கழற்றிப் பார்த்த பிறகு சட்டை, பேண்டை கழற்றினார்கள். உள்ளே கருப்பு பனியன், ஜட்டி போட்டிருந் தேன். வேறு எந்த பொருளும் என்னிடம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட பிறகும் கூட என்னைப் பட்டம்பெற அனுமதிக்கவில்லை. ஆளுநர் அங்கிருந்து செல்லும் வரை தனியறையில் வைத்தி ருந்த பிறகு லோக்கல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் என்னை ஜீப்பில் ஏற்றிவைத்திருந்தனர். என்னுடன் 6 பேருக்கு பட்டம் கொடுக்கவில்லை. மதியம் 2 மணிக்குப் பிறகு தேர்வுகள் கட்டுப்பாட்டு அறையில் பட்டம் கிடைக் கும் என்று சொன்னார்கள். அங்கே போய் எனது பட்டத்தை நானே எடுத்துக்கொண்டு பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து போட்டுவிட்டு வந்தேன். என்னைப் போலவே பலரும் பட்டங்களை தேர்வுகள் கட்டுப்பாட்டு அறையில்தான் எடுத்துச் சென்றனர். என்னைப் பார்த்து, "என்ன தோழர்'” என்று ஒரு நண்பர் கேட்டதாலேயே அவருக்கும் பட்டம் கொடுக்காமல் வைத்துவிட்டார்கள்.
நாங்களும் முறைப்படி கட்டணம் செலுத்தித் தான் பட்டம் பெற வந்தோம். ஆனால் எங்களை அவ மரியாதை செய்துவிட்டார்கள். இது சம்பந்தமாக மனித உரிமை மீறல் பிரச்சனை கொண்டுபோக முடிவெடுத் துள்ளேன். மனித உரிமை ஆணையத்தில் முறையிடுவ துடன் நீதிமன்றத்திலும் வழக்கு போட தயாராக இருக்கிறேன். சோதனை என்ற பெயரில் ஆடைகளை அவிழ்க்க யார் இவர்களுக்கு உரிமை கொடுத்தது. எங்கள் பட்டங்களைக் காணவில்லை என்று ஒளித்து வைத்த நிர்வாகமும் எங்களுக்கு பதில் சொல்லவேண்டும்'' என்றார்.
"ஆளுநர் விழாவில் பட்டம் பெற வந்த மாணவரின் ஆடையை அவிழ்த்து அவமானப்படுத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடு!' என்ற முழக்கத்துடன் 26-ஆம் தேதி காலை, எஸ்.எஃப்.ஐ., டைஃபி இளைஞர்கள் தஞ்சை ஐ.ஜி. அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பேரணியாக வந்த இளைஞர்கள் போலீசாரையும், தடுப்புகளையும் தள்ளிக்கொண்டு ஐ.ஜி. அலுவலகம் நோக்கிச் சென்றது பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இளைஞர்களை குண்டுக்கட்டாக தூக்கி வேன்களில் ஏற்றி கைது செய்து அழைத்துச்சென்றனர்.
அரவிந்தசாமிக்கு நேர்ந்த கொடுமைக்கு போலீசார் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்தப் போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக வெடிக்கும் என்று குரல் எழுப்பிக்கொண்டே சென்றனர் இளைஞர்கள்.