இன்றைய காலகட்டத்தில் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்து, கல்விக்கட்டணம் செலுத்திப் படிக்கவைப்பதற்கு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் பள்ளி நிர்வாகமோ, கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் செலுத்தும் அக்கறையை மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் செலுத்துவதில்லை. இதனால் பள்ளி வாகன விபத்துக்களால் பிஞ்சுகளின் உயிர் பறிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இரண்டாண்டுகளுக்குமுன் ஆரணி அருகேயுள்ள கொருக்கத்துரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் சர்வேஷ், எல்.கே.ஜி. வகுப்பில் சேர்ந்த முதல் நாளிலேயே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டது. அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன், தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி, பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே தவறிவிழுந்து பலியானாள். அந்த வரிசையில் தற்போது பள்ளி வாகன ஓட்டுநரின் அலட்சியத்தால் தீக்ஷித் என்ற மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவில் வசித்துவரும் வெற்றிவேல் -ஜெனிபர் தம்பதியின் ஒரே மகன் தீக்ஷித். பெற்றோர் இருவரும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். மாணவன் தீக்ஷித், ஆழ்வார்திருநகரில் உள்ள வெங்கடேஷ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 28-ம் தேதி தீக்ஷித்தை அவன் அம்மா ஜெனிபர் வழக்கம்போல காலை 8:30 மணிக்கு பள்ளிக்கு கிளப்பி வீட்டருகே பள்ளி வாகனத்தில் புன்னகையுடன் வழியனுப்பி வைத்துள்ளார். அதுதான் அவனின் கடைசிப் புன்னகை என்பது யாருக்கும் தெரியாது. பள்ளி வாகனத்தை முகலிவாக்கம் காந்தி தெருவைச் சேர்ந்த 64 வயதான பூங்காவனம் ஓட்டியுள்ளார். இவர் சென்னை கார்ப்பரேஷனில் குப்பை வண்டி ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வாகனத்தில் ஞானசக்தி என்ற ஆயாவும் இருந்துள்ளார்.
அந்த பள்ளி வாகனத்தில் பதின்மூன்று மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். பள்ளி வளாகத்தினுள்ளே வாகனம் வந்தவுடன் சில மாணவர்களை மட்டும் அழைத்துக்கொண்டு ஆயா ஞானசக்தி பள்ளிக்குள் சென்றுவிட, மற்ற மாணவர்கள் அவர்களாகவே பள்ளி வாகனத்தி லிருந்து இறங்கியுள்ளனர். தீக்ஷித் கடைசியாக இறங்கி வாகனத்தின் முன்புறம் சென்றுள்ளான். அவனைக் கவனிக்காத ஓட்டுநர், அடுத்த டிரிப் மாணவர்களை அழைத்துவர வேனைக் கிளப்பியிருக்கிறார். கண நேரத்தில், தீக்ஷித் மீது வேனின் இடதுபக்க முன்சக்கரம் ஏறி இறங்கியுள்ளது. தீக்ஷித் சக்கரத்தில் சிக்கியதை ஓட்டுநர் பூங்காவனம் கவனிக்கவேயில்லை. ஓட்டுநருக்கு சரியாகக் காதும் கேட்காதாம். தீக்ஷித் சக்கரத்தில் சிக்கியதைக் கண்ட சக மாணவர்கள் கூச்சலிடுவது சற்று நேரம்கழித்தே புரிந்திருக்கிறது. ரத்த வெள்ளத்திலிருந்த தீக்ஷித்தை வடபழனி யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், முன்னதாகவே மாணவன் தீக்ஷித் உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர். உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஒரு மணி நேரம் கழித்தே பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவமனையில் தீக்ஷித்தின் தாயார் கதறி அழுதது சுற்றியிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டது. பள்ளியின் தாளாளர் ஜெயபால் கடைசிவரை சம்பவ இடத்திக்கு வரவில்லை. பள்ளி முதல்வர் தனலட்சுமியோ தலைமறைவாகி விட்டார்.
பள்ளித் தாளாளர் ஜெயபால் அரசியல் பின்புலம் உள்ளவர். ஓட்டுநர் பூங்காவனம், 64 வயதானவர். 58 வயதைக் கடந்தவர்கள் மோட்டார் வாகனச் சட்டப்படி பப்ளிக் சர்வீஸ் வாகனத்தை ஓட்டக்கூடாது. பேஜ் (பப்ளிக் சர்வீஸ்) ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களை பணியில் அமர்த்தியது சட்டப்படி குற்றம். அதுவும் காது கேட்புத்திறன் குறைபாடுள்ளவரை பணியில் சேர்த்து பள்ளி வாகனத்தை ஓட்டவைத்தது கடுமையான குற்றமாகும். குழந்தைகளின் உயிர்மீது அலட்சியம் காட்டிய பள்ளித் தாளாளர் மற்றும் முதல்வர் மீது கடுமையான சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கினால் மட்டுமே இனியொரு பிஞ்சுக் குழந்தையின் உயிர் பறிபோவதைத் தடுக்க முடியும்.
________________
இறுதிச்சுற்று!
வன்னியருக்கு உள்ஒதுக்கீடு சட்டம் ரத்து! உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2021-ல் தேர்தலுக்கு முன்பாக கடந்த அ.தி.மு.க. அரசு இச்சட்டத்தை அவசரமாகக் கொண்டுவந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இச்சட்டத்துக்கு அரசாணை பிறப்பித்தது. ஆனால் இச்சட்டத்துக்கு எதிராக 25-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். விசாரணையின் முடிவில் கே.முரளிசங்கர், எம்.துரைசாமி அமர்வு இச்சட்டம் குறித்து, "சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் எப்படி இடஒதுக்கீடு வழங்கமுடியும்' என கேள்வியெழுப்பியது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டில் ஏறகெனவே சீர்மரபினருக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்போது வன்னியர்களுக்கு 10.5 சதம் வழங்கினால், மிச்சமுள்ள 22 சாதியினருக்கு வெறும் 2.5 சதவிகித இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் எனக்கூறி ரத்து செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில்... மார்ச் 31-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் நாகேஷ்வரராவ், பி.எம். கவாய் அமர்வு, பிற்பட்டோரில் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டியது ஏன் என்பதற்கான தரவுகளை மாநில அரசு சமர்ப்பிக்கத் தவறியதாக குறிப்பிட்டது. இதனையடுத்து தமிழக அரசு "அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும்' என அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், “"இதனை சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பாகப் பார்ப்பதாகவும், தமிழக அரசு தேவையான புள்ளி விவரங்களை உடனடியாகச் சேகரித்து மீண்டும் சட்டம் இயற்றவேண்டும்'” என்று குறிப்பிட்டார்.
-மணி