பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் புளியங்குடி நகரை பதற்றத்தில் தள்ளியிருக்கிறது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி யைச் சேர்ந்த மாரியம்மாள், ஜூலை 18 சாயங்கால வேளையில் வழக்கம்போல் கூலிவேலையை முடித்துவிட்டு சோர்வில் வீடுதிரும்பியவர், வீட்டிற்குள் நுழைந்ததுமே தன் ஒரே மகள் முனீஸ்வரி சேலைத் தலைப் பால் தூக்கிட்டுக்கொண்டு தொங்குவதைக் கண்டு பதற்றத்தில் அலறிக் கூச்சலிட் டிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் தகவல் தந்து ஸ்பாட்டுக்கு வந்த புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினார். வீட்டில் மாணவி தன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அக்கடிதத்தில் மாணவி முனீஸ்வரி தன் மரண வாக்குமூலமாக பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானங்களைத் தாங்கமாட் டாமல் தற்கொலை முடிவுக்குத் தான் தள்ளப்பட்டதாக எழுதியிருக்கிறாள்.
புளியங்குடி நகரின் கீழத்தெரு பகுதி வாடகை வீட்டில் வசித்து வருகிறவர் மாரியம்மாள். கணவர் கருப்பசாமி கடந்த பத்து ஆண்டு களுக்கு முன்பே காலமானதால் தன் மகளான முனீஸ்வரியை இரண்டு வயது முதலே தனியாகவே கட்டுமானத் தொழில் செய்துவரும் கூலியின் மூலம் சிரமத்திற்கிடையே வளர்த்து வந்திருக்கிறார்.
மாணவி முனீஸ்வரி புளியங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 அறிவியல் பாடப்பிரிவில் படித்துவந்தார். ஜூலை 17-ஆம் தேதியன்று வழக்கம்போல் பள்ளிசென்ற மாணவி முனீஸ்வரி, பள்ளியின் இடைவேளையின் போது தனக்கான ஸ்காலர்ஷிப்பிற்கு அவசியமான போனோபைடு எனும் கல்விச் சான்றை வாங்குவதற் காகப் பள்ளியின் அலுவலகம் போயிருக்கிறார். ஆனால் அங்குள்ள பணியாளர் வரத் தாமதமான தால் அதனைப் பெறுவதற்குள் மதியப் பாட வேளை கழிந்து அடுத்த பீரியட் ஆரம்பிக்கப்பட்டி ருக்கிறது. உதவித் தலைமை ஆசிரியை (நீலாம்பிகை) நடத்துகிற விலங்கியல் பாடவேளை. அதுசமயம் வகுப்பிற்கு வந்த மாணவி முனீஸ்வரி தன்னுடைய தாமதத்திற்கு ஆசிரியையிடம் விளக்கம்சொல்ல... உதவித் தலைமை ஆசிரியையான அந்தப் பொறுப்பு தலைமை ஆசிரியையோ...
“நீ இப்படித்தான் என திட்டியவர், நீ என் னோட எந்த ஒரு பீரியடுக்கும் இனிமே வகுப்பிற் குள்ளே வரக்கூடாது” என்று சக மாணவிகள் முன்னிலையில் திட்டியவர், தண்டனையாக முனீஸ்வரியை வகுப்பிற்கு வெளியே நிற்கச்சொல்லிவிட்டாராம். தன் சக மாணவிகள் கேட்கும்படியாக தன்னைத் திட்டிய உதவித் தலைமை ஆசிரியை, ஒரு பீரியடு முழுவதும் வெளியே நிறுத்திய அவமானத்தால் மனமுடைந்து அழுதிருக்கிறாள். கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த முனீஸ்வரியைக் கண்ட இயற்பியல் ஆசிரியை ஜெயா, முனீஸ்வரியை ஆறுதல்படுத்தி அவளை வகுப்பறைக்குள் அழைத்துச்சென்றிருக்கிறார்.
மறுநாள் ஜூலை 18 அன்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவி முனீஸ்வரி, தனது படிப்புச் சான்றிதழில் தலைமை ஆசிரியையின் கையெழுத்தை வாங்கச் சென்றபோது கடுப்பான உதவித் தலைமை ஆசிரியை, "நீ என்னோட விலங்கியல் பாட வகுப்புக்கு வரவேகூடாது என்று மறுபடியும் திட்டியவர், ஒன்னோட டி.சி.யக் கிழிச்சுக் குடுத்துருவேன் என்று மிரட்டினாராம். இதனால் பயத்தில் கண்ணீர் பொங்க வகுப்பறைக்கு வந்த முனீஸ்வரியை சக மாணவிகளான மனிஷா, மது, காருண்யா உள்ளிட்டவர்கள் சமாதானப் படுத்தியிருக்கிறார்கள்.
ஆனாலும் எச்.எம்.மின் டி.சி. கிழிப்பு என்ற மிரட்டல், மாணவி முனீஸ்வரியின் மனதை உடைத் திருக்கிறது. இதனால் தன் அம்மா அவமானப்பட்டு நிற்பாளே.. என்ற மன உளைச்சலில் வீடுதிரும்பிய அந்த மாணவி விரக்தியில் விபரீதமாக தற்கொலை முடிவைத் தேர்வு செய்திருக்கிறாள்.
வீடு திரும்பிய முனீஸ்வரி வேலைக்குப் போன தன் அம்மா வரத் தாமதமாகும் என்பதால் பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தவை அனைத்தையும், வரிவிடாமல் மரண வாக்கு மூலமாக எழுதிவைத்துவிட்டு தன் தாயின் நினைவாக அவளது சேலைத் தலைப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
நிர்ணயிக்கப்பட்ட அரசு கல்விக் கட்டணத்தை விட மாணவிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தார் உதவித் தலைமையாசிரியை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறையின் விசாரணையிலிருப்பவர் உதவித் தலைமை ஆசிரியை என்றும் சொல்கிறார்கள்.
விசாரித்தபோது, பள்ளியின் கழிவறையில் அடிக்கடி தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது என்று மாணவிகள் பலரும் நிர்வாகத்திடம் சொல்லியும் கவனிப்பு இல்லையாம்.
ஒரே மகளைப் பறிகொடுத்து துக்கத்திலிருக்கும் தாய் மாரியம்மாளோ, "அவ நல்லா படிப்பான்றதால, கஷ்டப்பட்டு கூலி வேலைக்குப் போயி படிக்கவைச்சேன். கணவர் காலமானதால, எம் மகள நல்லா படிக்கவைக்கணும்ற வைராக்கியத் தில் வளர்த்தேன். டாக்டருக்குப் படிக்கணும் ஆசப்பட்டாய்யா...… பாதியில இப்படியாயிருச் சேய்யா. இதுக்கு காரணமானவுக மேல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்யா''’என்றார் உடைந்த குரலில்.
மாவட்ட எஸ்.பி.யான சாம்சனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “"அந்த உதவித் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்திய பள்ளிக் கல்வித்துறை, அவரை சஸ்பென்ட் செய்திருக்கிறது. தொடர்ந்து காவல்துறை விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது''’ என்றார்.
-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்