பாலியல் கொடுமைகள் பலவிதங்களில் வெட்டவெளிச்சமாகிவரும் சூழ்நிலையில்... சென்னையில் -அதுவும் புகழ்பெற்ற கல்லூரியின் பேராசிரியர்களால் பல மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பது இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
சென்னை -தாம்பரத்திலுள்ள "மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி' (சுருக்கமாக எம்.சி.சி.)யின் 29 மாணவிகள், 17 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் என மொத்தம் 46 பேர் கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இரு பேராசிரியர்கள் கூட்டுச் சேர்ந்துகொண்டு பல மாணவிகளுக்கு உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் இம்சை கொடுத்து, ரொம்பவே பாடாய்படுத்தியுள்ளனர். அந்த விவகாரம்தான் இப்போது வெடித்துக் கிளம்பியுள்ளது.
அப்போது சுற்றுலா சென்ற மாணவிகளில் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ""மூணுநாள் டூர் ப்ளான்பண்ணி, ஜனவரி 09-ஆம் தேதி சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ட்ரெயின்ல கிளம்பினோம். எங்களுக்குத் துணையா பேராசிரியர்கள் ரவின், சாமுவேல் டென்னிசன், ஆலன் ஜே.ரெட்டி, பேராசிரியைகள் அனுலின் கிறிஸ்துதாஸ், தினமாலா, அட்டெண்டர் துல்கானம் ஆகியோர் வந்தனர். நாங்க எல்லோருமோ ஸூவாலஜி தேர்டு இயர் ஸ்டூடண்ட்.
பெங்களூரு ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து, தங்குமிடத்திற்கு டிராவல்ஸ் பஸ்ல கிளம்பினோம். அப்போதே தன்னோட சேட்டையை ஆரம்பிச்சுட்டாரு ரவின். கேர்ள்ஸ் ஸ்டூடண்டுடன் ஒட்டி உரசி உட்கார்வது... சில்மிஷம் பண்ணுவதுன்னு இம்சை தாங்க முடியல. ஒரு வழியா ரூமுக்குப் போய் குளிச்சி ரெடியாகி, "இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ்' சென்டருக்குப் போனோம். சென்டருக்கு ஆப்போசிட்ல பஸ்ஸ நிறுத்திட்டு, நாங்கெல்லாம் ரோட்டை கிராஸ் பண்ணும்போது, எனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லி தொடக்கூடாத இடத்துல தொட்டு சேட்டை பண்ணுனாரு. நான் கோபமா பார்த்ததும்... எதுவுமே நடக்காத மாதிரி போயிட்டாரு. அப்போதிருந்து எனக்கு மெண்டலியா டிஸ்டர்பா இருக்கு''’என கண்ணீர்விட்டார்.
இன்னொரு மாணவியோ, ""நாங்க ரூம்ல இருக்கும்போது சாமுவேல் டென்னிசன் வந்து, ரூமுக்குள்ளதான இருக்கீங்க, எதுக்கு ஃபுல்லா டிரஸ்பண்ணிக்கிட்டு... ஷார்ட்ஸ், பனியன் போட்டா ஃப்ரீயா இருக்கலாம்ல'' என அநாகரிகமாக கமெண்ட் அடித்தார். யானைகள் கூட்டத்தைப் பார்ப்பதற்காக கூர்க்கிற்குப் போனோம். தூரத்திலிருந்த யானைகளுடன் செல்ஃபி எடுத்துக்கிட்டிருக்கும்போது, என்னிடமிருந்து செல்போனை பிடுங்கி, என்னை ஃபோர்ஸாக அவர் அருகே இழுத்து செல்ஃபி எடுத்து வெறுப்பேத்தினார் ரவின். இதையெல்லாம் எங்களுக்குத் துணையா வந்த பேராசிரியைகளிடம் சொன்னபோது, அவர்களும் கண்டு கொள்ளாததுதான் அதிர்ச்சியாக இருந்தது.
மூன்று நாட்கள் நரக வேதனையை அனுபவித்துவிட்டு, ஒரு வழியாக சென்னைக்கு வந்து காலேஜ் பிரின்ஸ்பல் அலெக்சாண்டரிடம் நடந்த அத்தனை இம்சைகளையும் சொன்னபோது, "ஃபர்ஸ்ட் டைமா ரவின்மேல இப்படி ஒரு கம்ப்ளெய்ண்ட் வந்திருப்பதால் வார்ன் பண்ணிவிட்ருவோம். செகண்ட் டைம் வந்தா சிவியரா பனிஷ்மெண்ட் கொடுப்போம்'னு சொல்லிட்டாரு. நாங்க கம்ப்ளெய்ண்ட் கொடுத்தது தெரிஞ்சதும், "ஒங்களோட காண்டாக்ட் சர்டிபிகேட், டிகிரி சர்டிபிகேட்ல கைவச்சிருவோம். கூலிப்படைய செட் பண்ணி போட்டுத் தள்ளிருவோம்'னு பகிரங்கமாக மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள் ரவினும் சாமுவேல் டென்னிசனும்.
ஆனாலும் அசராத நாங்க, போராட்டத்தில் இறங்கியிருப்பதோடு, புகார் மனு எழுதி ஹெச்.ஓ.டி. மோசஸ் இன்பராஜ்கிட்ட கொடுத்ததற்கு, "மூணு வருஷம் டூர் போகக்கூடாது, சம்பந்தப்பட்ட அந்த ரெண்டு புரொபசர்களும் ஸ்டூடண்ட்ஸ்களின் ரெக்கார்டு நோட்டை திருத்தக்கூடாது' என வினோதமான தீர்ப்பை சொல்றாரு. இன்னொரு ஹெச்.ஓ.டி. மனுதாமஸோ, "தெரியாம கை பட்டுருக்கும், இதுக்குப் போயி ஏம்மா கம்ப்ளெய்ண்டு'ன்னு சொல்றாரு'' என வேதனைப்பட்டார்கள் பல மாணவிகள். (அவர்களின் வாக்குமூலம் ஆதாரப்பூர்வமாக நம்மிடம் உள்ளது.)
இருபது வருடங்களுக்கு முன்பும் ஒரு மாணவியிடம் தனது வல்கர் மெண்டாலிட்டியைக் காண்பித்திருக்கிறார் ரவின். இதுகுறித்து அப்போது அந்த மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் பலனில்லையாம்.
இம்சைஅரசர்களான ரவினையும் சாமுவேல் டென்னிசனையும் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தும் ஸ்விட்ச் ஆஃப் கண்டிஷனிலேயே அவர்களது செல்போன்கள் இருந்தன. ஹெச்.ஓ.டி. மைக்கேல் இன்பராஜ், பிரின்ஸ்பல் அலெக்சாண்டர் ஆகிய இருவரும் நமது அழைப்பையும் எஸ்.எம்.எஸ்.சையும் கண்டுகொள்ளவில்லை.
மாணவிகளின் ஒட்டுமொத்த குமுறலை, கல்லூரி கமிட்டி கன்வீனரான விஜயகுமாரி ஜோசப்பிடம் நாம் சொன்ன பிறகுதான் இருதரப்பையும் அமரவைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
-மனோசௌந்தர்