ரோடு குமலன்குட்டை செல்வம் நகரைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சத்யா. சிவா கட்டுமான நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களது ஒரே மகன் ஆதித்யா. 17 வயதாகும் ஆதித்யா குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த வருடம் பனிரெண்டாம் வகுப்பில் படித்துவந்துள்ளார். 

Advertisment

ஜூலை 2ம் தேதி காலை வழக்கம்போல் தனது மகன் ஆதித்யாவை டூவீலரில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார் தந்தை சிவா. போகும்போது பள்ளிச் சீருடையில் சென்ற ஆதித்யா, அன்று மாலையில் வேறு உடையில் பள்ளியிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் மயங்கிக் கிடக்க, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு தகவல் கொடுக்க, ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அந்த மாணவன் ஆதித்யா ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

காலையில் பள்ளியில் விட்டுச்சென்ற மகன் மாலையில் இறந்துவிட்டான் என்ற தகவல் அந்த குடும்பத்திற்கு பேரிடியாக இறங்கியது. மருத்துவமனையில் இருந்த மகனின் உடலைப் பார்த்து கதறிய பெற்றோர், இறந்துபோன மகனின் உடலில் காயங்கள் இருப்பதைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்ததோடு, எங்கள் மகனைக் கொன்றுவிட்டார்கள் என கண்ணீர்விட்டுக் கதறினார்கள். அதன் பிறகுதான் அந்த கொடூரம் தெரிந்தது. 

அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்களின் தாக்குதலால்தான் ஆதித்யா இறந்தான் என்று தெரியவந்தது. 

Advertisment

மாணவர்களுக்குள் ஏன் மோதல் வந்தது? அது கொலை வரை எப்படி சென்றது? என நாம் விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

ஆதித்யாவும், அவனைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களும் ஒரே வகுப்பில் பயில்பவர்கள்தான். மாணவ -மாணவியர் என ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள். சென்ற வருடம் 11ஆம் வகுப்பு படிக்கும்போது ஒரு மாணவியை ஒரு மாணவன் காதலிப்பதாகக் கூறியிருக்கிறான். இந்த வருடம் 12ஆம் வகுப்பு வந்தபிறகு அந்த மாணவி சம்பந்தப்   பட்ட அந்த மாணவரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார். அந்த மாணவியிடம் மாணவன் ஆதித்யா நட்புடன் பழகிவந்துள்ளான். இது ஏற்கனவே அந்த மாணவியிடம் பழகிய மாணவனுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீ அவளோடு பேசக்கூடாது என ஆதித்யாவை எச்சரித்திருக்கிறான் அந்த மாணவன். நான் அப்படித்தான் பேசுவேன் என ஆதித்யா கூற, இருவருக்கும் யாருக்கு மாணவி சொந்தம், யார் காதல் பெரிது என பகை வளர்ந்       துள்ளது.

மாணவன் ஆதித்யா மற்றும் கொலையில் ஈடுபட்ட அந்த மாணவன் என இருவரும் குழுக்களாக இருந்துள்ளார்கள். ஒத்தைக்கு ஒத்தை பார்ப்போமா என இருவரும் சவால்விட்டுள்ளார்கள்.

சம்பவம் நடந்த 2ஆம் தேதி காலை தனது தந்தையுடன் பள்ளிச் சீருடையுடன் பள்ளிக்கு வந்த ஆதித்யா, வகுப்பறைக்குச் செல்லாமல் ஏற்கனவே புத்தகப் பையில் கொண்டுவந்த மாற்றுத் துணியை உடுத்துக்கொண்டு பள்ளி யைவிட்டு வெளியே எங்கோ சென்றுள்ளான். அன்று மாலை எதிரியான அந்த மாணவனை தனது நட்பிலுள்ள மாணவர் களிடம் சொல்லி அங்கு வரவழைத்துள்ளான். இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாற, இருவரும் அடித்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மாணவன் ஆதித்யா மயக்கமுற்று கீழே விழுந்தான். பயந்துபோன மாணவர்கள் எல்லோரும் ஓடிவிட்டனர். மயக்கமடைந்த மாணவன் ஆதித்யா ஒரு மணி நேரம் அப்படியே கிடந்துள்ளான். அதன்பிறகு மருத்துவமனை கொண்டுசென்று பார்த்தபோதுதான் அவன் இறந்தது தெரியவந்தது.

"என் மகனை பல மாணவர்கள் சேர்ந்து தாக்கிக் கொன்றுவிட்டார்கள்'' என பெற்றோர் கதறினார்கள். 

இரண்டு மாணவர்கள் அடித்துக் கொண்டபோது, அதைத் தடுக்க ஒரு மாணவன் செல்ல, அவனை ஆதித்யா தாக்கியுள்ளான். அந்த மாணவனும் திரும்ப ஆதித்யாவைத் தாக்கியுள்ளான். இதுதான் நடந்திருக்கிறது. தற்போது இரண்டு மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..

பள்ளிப் படிப்பில், படிப்பதில் கவனம் செல்லாமல் இதுபோன்ற கவனச் சிதறல்களால் ஒரு மாணவன் பரிதாபமாக பலியாகி உள்ளான். இரண்டு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும், கல்வியும் கேள்விக்குறியாகி யுள்ளது.

இன்றைய சூழலில் ஆசிரியர்களும் பாடம் நடத்துவது மட்டுமே தங்களின் பணி இன்று ஒதுங்கக்கூடாது. ஒழுக்க, பண்பாட்டு நெறிகளையும் கற்பிப்பதும் ஆசிரியரின் பணிதான். பெற்றோர்களும், பள்ளிக்கு அனுப்புவதோடு தங்கள் கடமை முடிந்ததென ஒதுங்காமல், அவர்களிடம் பேசி, அவர் களின் உலகம் என்னவாக இருக்கிறது, அவர்கள் எந்தத் திசையில் பயணிக்கிறார்கள் என ஓரளவாவது தெரிந்துவைத்திருப்பது அவசியம்!