சென்னைப் பல்கலைக்கழகத்தின் அடிப்படை தத்துவவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு பயின்றுவந்தவர் கிருபாமோகன். இவரை கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி அழைத்துப் பேசிய துறைத்தலைவர் வெங்கடாஜலபதி, "ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷர் வர்றதால, துணைவேந்தர் துரைசாமி உங்க அட்மிஷனை ரத்துசெய்ய வற்புறுத்து கிறார்'’என்று கூறியிருந்தார். சொன்னபடியே செப்டம்பர் 04-ந்தேதி கிருபாமோகனின் அட்மிஷனை ரத்து செய்ததற்கான சான்றிதழைக் கையில்தந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத் திருக்கிறார்.

mm

கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது அம்பேத்கர் -பெரியார் படிப்பு வட்டம். இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் புத்தகங்கள் குறித்து விவாதக்கூட்டம் நடத்துவது, மாணவர்கள் பிரச்சனை களுக்கு குரலெழுப்புவது, பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைப்பின் முக்கிய நபராக இருந்தவர்தான் மாணவர் கிருபா மோகன்.

தற்போது அவர், குறிவைக்கப் பட்டிருப்பதன் பின்னணி குறித்து நாம் விசாரித்தபோது, “""நாட்டுக்காக கதிராமங்கலம் என்கிற ஒரு கிராமத்தை இழப்பதில் தவறொன்றும் இல்லை என்று பேசியிருந்தார் பா.ஜ.க. எம்.பி. இல.கணேசன். இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடந்த விவே கானந்தர் கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள வந்த அவரை நுழையவிடாமல் போராட்டம் நடத்தினர் அம்பேத்கர் -பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள். அதேபோல், சைவ சித்தாந்தத் துறைத்தலைவர் எழுதிய "மாணிக்கவாசகர் -காலமும் கருத்தும்' என்ற புத்தக வெளியீட்டின்போது, அதை எதிர்த்து எச்.ராஜா, அர்ஜூன் சம்பத் ஆகியோரின் ஆதரவாளர்கள் யூனிவர் சிட்டிக்குள் நுழைய முயன்றபோது, அவர்களுக்கு எதிராக குரல்கொடுத்து முடக்கினார்கள். பா.ஜ.க. எம்.பி. தருண்விஜய் திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையும் இவர்கள் சும்மா விடவில்லை.

Advertisment

mmm

யூனிவர்சிட்டியின் 160-வது ஆண்டு விழாவுக்கு வி.சி. துரைசாமி வருகை தந்தபோது, அவர் செய்யும் ஊழல்களைப் பட்டியலிட்டு முழக்கமிட்டார்கள். இப்படி பா.ஜ.க.வுக்கும், வி.சி.க்கும் எதிராக செயல்படும் இந்த அமைப்பை முடக்குவதற்காக நேரம்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிரபலப்படுத்த வேண்டு மென்று சிலர் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் முறையிட, அவர் நேரடியாக ஆளுநரைச் சந்தித்து பேசியிருக்கிறார். இதழியல் துறைத்தலைவர் ரவீந்திரன் தொடர்பான ஏராளமான முறைகேடுகள் குறித்து அம்பேத்கர் -பெரியார் படிப்பு வட்டத்தின் மாணவர்கள் குரலெழுப்பி வந்தனர். இதில் கடுப்பான ரவீந்திரன், எக்கனாமிக்ஸ் துறையின் தலைவரான தனது தாய்மாமனும், வி.சி. துரைசாமியின் நெருங்கிய நண்பருமான வேதகிரி சண்முகசுந்தரத்தை வைத்து காய்நகர்த்தினார். இதெல்லாம்போக, ஏற்கனவே இந்த அமைப்பின்மீது தனக்கிருந்த கோபத்தைக்காட்ட வி.சி.துரைசாமி நினைத்தது என எல்லாமும் சேர்ந்து கிருபாமோகனின் அட்மிஷனை ரத்துசெய்வதில் முடிந்திருக்கிறது''’’ என்றனர்.

Advertisment

கிருபாமோகனிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ""கல்விச் சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எந்தப் பிரச்சனையும் இல்லாதபோது, எதற்காக எனது அட்மிஷனை ரத்துசெய்யச் சொல்கிறார்கள்’’ என்று ஹெச்.ஓ.டி. வெங்கடாசலபதியிடம் கேட்டேன், பதிலில்லை. வகுப்புகள் தொடங்கி ஒருமாதம் முடிந்தபிறகு இப்படிச் செய்வது நியாயமா?'' என்றேன். "எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காததால், வி.சி. உங்க அட்மிஷனை ரத்துசெய்யச் சொன்னார்'’என்று புதிய காரணத்தைச் சொன்னார்.

"ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்த எனக்கு, எதற்காக எலிஜிபிலிட்டி சான்றிதழ் கேட்கவேண்டும். முதுகலை புரபஷனல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே சொன்னீர் கள்?' என்றதற்கு, "ஆளுநர் தரப்பிலிருந்து பிரஷர்ப்பா… என்னால் எதுவும் செய்ய முடியாது' என்று கையை விரித்துவிட்டார்.

mmm

சென்னைப் பல்கலைக் கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு இங்கு வந்தால் மட்டுமே எலிஜிபி லிட்டி சான்றிதழ் கொடுக்கவேண்டும். நான் ஏற்கனவே இங்கு படித்தவன் என்பதால், அதற்கு அவசியமில்லை. அப்படியே கட்டாயமாகக் கொடுக்க வேண்டுமென்றாலும், அந்தந்த துறையின் மூலமாகவே பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் வாங்கமுடியும். தனிப்பட்ட ரீதியில் வாங்கமுடியாது. மேலும், எனக்குப்பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் இப்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், இந்த காரணத்தைச் சொல்லி என்னுடைய அட்மிஷனை மட்டும் நீக்கியதில் உள்நோக்கம் தெரிகிறது.

கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல்முறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான காரணங்கள் இல்லா மல், அம்பேத்கர் -பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதற்காக என் அட்மிஷனை ரத்து செய் திருக்கிறது சென்னை பல்கலைக்கழக நிர்வாகம். இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறேன்'' என்றார் விரக்தியுடன். அடிப்படை தத்துவவியல் துறைத்தலைவர் வெங்கடாஜலபதியிடம் இதுபற்றி கேட்டால், "சொன்னதைத்தான் செய்தேன்' என்கிறார். சென்னைப் பல்கலைக்கழக வி.சி. துரைசாமியோ, "இதுபற்றி எதுவும் சொல்ல முடியாது' என்று மறுத்துவிட்டார்.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கன்னையா குமார் என அதிகாரத்தின் வேகத்தால் திணறடிக்கப்பட்ட மாணவர்கள் இங்கு ஏராளம். அந்த வரிசையில் பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தையும் சேர்க்கப் பார்க்கிறார்கள்.

-அ.அருண்பாண்டியன்