நாகை மாவட்டத் தில் சமீபத்தில் பிடிபட்ட கஞ்சா விவகாரத்தில் அ.தி.மு.க. ஒன்றிய துணை சேர்மன் கைது செய்யப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேதாரண்யம் அடுத்துள்ள கீழையூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மேலப் பிடகை பகுதியில் மூன்று கார்களில் கடத்திவரப்பட்ட 200 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். கஞ்சா மற்றும் மூன்று கார்களுடன், திருப்பூர் மாவட்டம் இடுவை மணிராஜ், மணல்மேல்குடி கௌதம், திருக்கோவிலூர் தெட்சணாமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோரை கீழையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அதே நேரம், கஞ்சா கடத்தல்காரர்களிடம் தனிப்படை டீல் பேசியதாகவும், கஞ்சா கடத்தியவர்களின் விலையுயர்ந்த இரண்டு கார்களை மறைத்து வைத்துள்ளதாகவும் நாகை போலீஸ் வட்டாரத்தில் புகைச்சல் கிளம்பியது. அதைத் தொடர்ந்து தனிப்படையை அதிரடியாகக் கலைத்த தோடு, அவர்களை காத்திருப்புப் பட்டிய லில் வைத்து, பின்னர் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இதற்கிடையில், கஞ்சா கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்துவந்த வேதாரண்யம் ஒன்றிய அ.தி.மு.க. துணை சேர்மன் அறிவழகனை விடுவிக்க 30 லட்சம் பேரம்பேசி, 20 லட்சம் மாவட்ட போலீஸ் உயரதிகாரிக்கு கை மாறியதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம் மேலும் பூதாகரமானதால், வேறுவழியின்றி நாகை டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அறிவழகனை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர், விசாரணையில், அறிவழகனுக்கும் மாவட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகளுக்கும், பெரும்புள்ளிகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காக்கிகளிடம் விசாரித்த போது, "நாகை மாவட்ட காவல்துறைக்கு கஞ்சா கடத்தல், தங்கக்கடத்தல், கள்ளச் சாராயமெனப் பல்வேறு குற்றச்செயல்களைப் பிடிப்பதன்மூலம் தனிப்பட்ட வருமானம் வருகிறது. இந்த குற்றவாளிகளை உயிரைப் பணயம்வைத்து விரட்டிப்பிடிக்கும் தனிப்படையினருக்கு ஆகக்கூடிய போக்கு வரத்துச் செலவுகள் உட்பட்டவைகளுக்கு ஏதோ ஒருவகையில் கைநீட்டாமல் இருக்க முடியாது. அது மாவட்ட எஸ்.பி.க்கு தெரியாமலிருக்காது'' என்கிறார் நேர்மையான காக்கி.
மதுவிலக்குப் பிரிவு அதிகாரி ஒருவர் நம்மிடம், "நாகை மாவட்ட எஸ்.பி.யை கரப்ட்டாக மாற்றியதே எங்கள் துறையிலுள்ள நவரசநாயகன் பெயர் கொண்ட டி.எஸ்.பி.தான். அந்த டி.எஸ்.பி.க்கு 22 பார்ல இருந்து மாதம் 10 ஆயிரம் கொடுக்குறாங்க. அந்தப் பணத்தில் மொபைல் போலீஸ் யூனிட்டுக்கு ஒரு பைசா கொடுக்க மாட்டார். இந்த கஞ்சா விவகாரத்தில் டி.எஸ்.பி.யும், க்யூ பிரிவு எஸ்.ஐ. ஒருவரும் சேர்ந்து முக்கிய புள்ளியை மறைக்கச் செய்த பணப்பரிவர்த்தனையில் சிக்கி, தற்போது விசாரணை டி.எஸ்.பி. ஒருவரின் கேம்ப் ஆபீசுக்கே அன்யூனிபார்மில் போகும்படியாகிவிட்டது'' என கூறினார்.
வேதாரண்யம் பகுதியைச்சேர்ந்த காவல்துறையினரிடம் விசாரித்தோம், "கோடியக்காடு சண்முகம் குடும்பம் தங்கக் கடத்தலையும், கஞ்சா கடத்தலையும் பல ஆண்டுகளாக செய்துவருகிறது. சண்முகத்தின் இரண்டாவது மகன் அருண் ஆனந்தராஜ், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனான அறிவழகனின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்த அறிவழகன்தான் சமீபத்தில் பிடிபட்ட கஞ்சா விவகாரத்தில் முக்கிய புள்ளியாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதற்கெல்லாம் மூளையாக செயல்படுபவன் அ.தி.மு.க. அறிவழகனின் அண்ணன் மகன் கருத்தபாண்டி. தற்போது தலைமறைவாக துபாயிலிருக்கிறாராம். இந்நிலையில், அ.தி.மு.க. அறிவழகனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்'' என்றனர்.
விசாரணை அதிகாரிகள் கூறும்போது, "நாகை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில் எஸ்.பி. ஹர்சிங் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பினால் அதிரடியாக கஞ்சா கடத்தல்களைப் பிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா கடத்தலில் பிடிபட்ட மணல்மேல் குடியைச் சேர்ந்த கௌதமன் உதவியுடன், 200 கிலோ கஞ்சா வுடன் கடத்தலில் ஈடுபட்ட இடுவை மணிராஜ் என்பவனையும் கைது செய்திருக்கிறோம்''’ என்கிறார் கள்.
மாவட்ட எஸ்.பி. ஹர்ஷிங் கிடம் கேட்டபோது, "விசாரணை போகிறது, குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். தனிப்படையைக் கலைத்ததோடு, அவர்களை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகிறோம்''’என்கிறார்.
நாகை மாவட்ட எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ராணி உள்ளிட்ட பல போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றியிருக்கும் விவகாரத் தில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணனின் ரிவஞ்ச் இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரித்ததில். "சமீபத்தில் பிடிபட்ட கஞ்சா விவகார வழக்கில் முக்கிய குற்றவாளியைத் தப்பவிட பேரம் பேசியதாக தனிப்படை கலைக்கப்பட்டது. பேரம் பேசியதே மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிக்காகத்தான் என கஞ்சா கடத்தல்காரர்கள் செய்தியை கசியவிட, மாவட்ட எஸ்.பி. ஹர்ஷிங் நிம்மதியிழந்துவிட்டார். அ.தி.மு.க. அறிவழகன் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னைப் பற்றியும், (லக்னோவில் ஒரு கோடிக்கு வீடு, நாகை மாவட்டத்தில் அவரது மனைவி பெயரில் விவசாயப் பண்ணை) இருப்பதாகத் தெரிந்து நிலைகுலைந்த மாவட்ட எஸ்.பி., நேரடியாக டி.எஸ்.பி. கேம்ப் ஆபிஸுக்கே சென்று வருத்தம் தெரிவித்துவிட்டு வந்தாராம்.
அதையடுத்து சில காக்கிகளின் லிஸ்ட்டை கொடுத்து, மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரையுள்ள காக்கிகளைப் பந்தாடி வருகிறாராம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன்'' என்கிறார்கள்.