மூகநீதி, கருத்துரிமை போன்ற விஷயங்களில் முற்போக்கு மாநிலமாக திகழக்கூடிய தமிழகத்தில், செய்தி ஊடகங்களைப் பற்றிய ஆளும் அரசின் அணுகுமுறை மோசமாக தரம் தாழ்ந்து வருகிறது. மக்களுக்கான செய்திகளை சட்டப்பூர்வமான வழிகளில் கொண்டுசேர்க்கும் செய்தி நிறுவனங்களின் முயற்சிகளை அவதூறு வழக்குகள், வாய்மொழி மிரட்டல்கள், மறைமுக தாக்குதல்களை நிகழ்த்தி அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்கிற கருத்துரிமைக்கான பிரிவு 19க்கு எதிராகவே செயல்பட்டு வந்தது.

press

இதனைக் கண்டிக்கும் விதமாக ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள், நிறுவனர்கள் ஒருங்கிணைந்து ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியை உருவாக்கினர். இதன் முதல் கூட்டம் சென்ற ஆண்டு ஜூலையில் நடத்தப்பட்டு, அதற்கு தலைமைதாங்கிய ‘தி இந்து’ வெளியீட்டுக் குழுமத்தின் தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான என்.ராம் தலைமையிலான குழு தமிழக முதல்வரைச் சந்தித்து பிரச்சனைகளை எடுத்துக்கூறியது.

Advertisment

நிர்மலாதேவி விவகாரத்தில் நமது நக்கீரன் ஆசிரியர் கைது செய்யப்பட்ட போதுகூட, “""உண்மையை மக்களுக்குச் சொல்லும் ஊடகத்தின் ஆசிரியர் மீதே, காவல்துறையினர் இதுபோன்ற ஒரு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையேயன்றி வேறேதும் இல்லை''’என தன் கருத்தை பதிவுசெய்தது ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி. அதேபோல், மூத்த பத்திரிகையாளர் என்.ராமின் வாதமும் நீதிமன்றத்தில் முக்கியத்துவம் பெற்றது.

தற்போது ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவராக இந்து என்.ராம் நியமிக்கப்பட்டிருக்கிறார். நமது நக்கீரன் ஆசிரியர், ஊடக செய்தி ஆசிரியர்கள், நிறுவனர்கள், செய்தியாளர்கள் என 16 பேர் பங்கேற்ற கூட்டம் ஜன.07-ல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் வகையில் அரசுகளும் ஆதிக்கச் சக்திகளும் செயல்பட்டபோது, அவற்றை வெற்றிகரமாக முறியடித்த என்.ராமின் பணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கவர்னர் மாளிகையின் கெடுபிடிக்குப் பணிந்து காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-வது பிரிவின்கீழ் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் ஆசிரியரை சிறைக்கு அனுப்பமுடியாது என்று தீர்ப்பளித்த சென்னைக் குற்றவியல் நடுவர்மன்ற நடுவரின் தீர்ப்பை உறுதிசெய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

கடந்த ஏழு மாதங்களாக அமைப்பின்றி செயல்பட்டு வந்த ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியை அமைப்பாக்குவதற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஊடக சுதந்திரத்தைப் பேணுவதையும் கடைசி பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் முதன்மையான நோக்கங்களாக கொண்டு செயல்படும் ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி, இந்திய அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பேணுவதற்குச் சாதகமான சூழலை உருவாக்குவதையே அடிநாதமாகக் கொண்ட தனது சாசனத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றியது.

-கீரன்