ரசு -போலீஸ் -தனிநபர்களால் தாக்குதலுக்குள்ளாகும் பத்திரிகை ஊழியர்களுக்கு ஆதரவாக நிர்வாகத்தின் குரல் ஒலிப்பது நக்கீரன் குழுமத்தின் இயல்பு. தற்போது இது பெருகி மீடியா முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு அரசை கண்டித்து ஒரு கூட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

media-unity

"புதிய தலைமுறை' டி.வி., அதன் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் தலைமையில், கோவையில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அந்த கருத்தரங்கத்தில் இயக்குநர் அமீர் பேசும்போது, பா.ஜ.க.வினர் பெரும் ரகளை செய்தனர். அந்த சம்பவத்திற்காக புதிய தலைமுறையின் கோவை செய்தியாளர் மற்றும் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது கோவை மாவட்ட காவல்துறை.

இந்தியா ஊடக சுதந்திரத்தில் 136-வது இடத்திலிருந்து 138-வது இடத்திற்கு சென்றுவிட்டது. தமிழகத்திலும் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதன் ஒருபகுதிதான் "புதிய தலைமுறை' தொலைக்காட்சி மீதான கிரிமினல் வழக்கு. தமிழகத்தில் எதிர்கருத்துகளுக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருவதைத்தான் இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. இதுபற்றி அரசுடன் விவாதிக்க ஊடகத்துறையினர் ஒன்று கூடுகிறோம்'' என மாற்றத்துக்கான ஊடக மையம், மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட், ஊடகவியலாளருக்கான அடித்தள அமைப்பு ஆகியவை இணைந்து ஒரு கருத்தரங்கை நடத்தின.

Advertisment

"இந்து' பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர்களான என்.ராம், என்.ரவி, மூத்த பத்திரிகையாளர் ஜவஹர், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ஆசிரியர் அருள்ராம், மக்கள் டி.வி.யின் நிர்வாகியான சௌமியா அன்புமணி, மாற்றத்துக்கான ஊடக மையத்தைச் சேர்ந்த ஹசீப், "தீக்கதிர்' குமரேசன், பாலு, எம்.யூ.ஜே. நிர்வாகி பீர்முகம்மது, கவிதா முரளிதரன், கலைஞர் டி.வி., சத்தியம் டி.வி. நிர்வாகிகள் உட்பட ஏராளமான ஊடகத்தினர் கலந்துகொண்டனர்.

முதலில் பேசிய கார்த்திகைச்செல்வன் தன் பேச்சில், தமிழகத்திலேயே அதிக தாக்குதலை எதிர்கொண்ட நக்கீரன் மீதான தாக்குதல்களைக் குறிப்பிட்டதுடன், ""நாங்கள் செய்திகளை உறுதிப்படுத்தி, பொறுப்புடன்தான் வழங்குகிறோம். "நீட்' கேள்விக்கெதிராக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் தற்கொலை செய்தியை உறுதிப்படுத்திக்கொண்டு 25 நிமிடங்கள் தாமதமாகத்தான் ஒளிபரப்பினோம். ஆனால் எங்கள் மீது கிரிமினல் வழக்குகள் போடப்படுகின்றன'' என்றார்.

அருள்ராம் பேசும்போது, ""இதுபோன்ற தாக்குதல்கள் வரும்போதுதான் நாம் ஒன்று கூடுகிறோம். இது முதலில் தவிர்க்கப்பட வேண்டும்'' என்றார். "என்.ராம் தலைமையில் முதல்வரை சந்தித்து தமிழக அரசு ஊடகங்கள் மீது தொடுக்கும் தாக்குதலைப் பற்றி பேசவேண்டும்' என்கிற தீர்மானத்தோடு கூட்டம் முடிவடைந்தது. தமிழக ஊடக வரலாற்றில் ஒரு புதிய தொடக்கத்தை இந்தக் கூட்டம் தொடங்கி வைத்துள்ளது.

Advertisment

-தாமோதரன் பிரகாஷ்