அஜித் ரசிகர்களின் நீண்டகால வெயிட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள "வலிமை' படக்குழு, தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. ‘"நேர்கொண்ட பார்வை'’ படத்திற்கு பிறகு எச்.வினோத் -அஜித் -போனிகபூர் கூட்டணி ‘"வலிமை' படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டங்களாகத் தடைப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக அப்டேட்டிற்கு காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, காத்திருப்புக்கான பலன் தற்போதே கிடைக்கத் தொடங்கியுள்ளது எனலாம்.
"வலிமை' படம் பொங்கல் ரிலீஸ் என போனிகபூர் அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பின் ஆரவாரம் கூட அடங்காத நிலையில், அதிகாரப்பூர்வ முன்னறிவிப்புகள் ஏதுமின்றி படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்றையும் படக்குழு வெளியிட்டது. பரபரக்கும் பைக் சேஸிங் காட்சிகள், அனல் பறக்கும் வசனங்கள், அட்டகாசமான மேக்கிங், ஸ்டைலிஷான அஜித் என ரசிகர்களை இன்ஸ்டண்டாக கவர்ந்த இந்த க்ளிம்ப்ஸ் காட்சி, யு-டியூபிலும் பல புதிய சாதனைகளைப் படைக்கவும் தவறவில்லை. அதிலும் குறிப்பாக, இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்ற க்ளிம்ப்ஸ் என்ற சாதனையையும் "வலிமை' படைத்துள்ளது. யு-டியூபில் இந்த வீடியோ வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்தது. இந்தியப் படம் ஒன்றின் க்ளிம்ப்ஸ் காட்சி 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெறுவது இதுவே முதன்முறையாகும். தெலுங்கில் உருவாகும் "பீம்லா நாயக்' படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி 23 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. தற்போது "வலிமை' இந்தப் படத்தை இச்சாதனைப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. 46 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்ற பிரபாஸின் "ராதே ஷ்யாம்' படம் இப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வெப் தொடரில் விஜய்சேதுபதி!
அண்மைக்காலமாக தியேட்டர், டி.வி., ஓ.டி.டி. என எங்கு திரும்பினாலும், அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விஜய்சேதுபதி. படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என வெரைட்டி காட்டி வரும் இவர், அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார். "ஃபேமிலி மேன்'’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர்களான ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடிக்கும் வெப்சீரிஸில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் விஜய்சேதுபதியும் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப்சீரிஸுக்கான முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஆயத்தமாகிவருகிறது.
இந்நிலையில், இந்த வெப்சீரிஸில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா கெசண்ட்ரா நடித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் மனைவியாக அவர் நடித்துவருவதாக கூறப்படு கிறது. இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ரெஜினா கெசண்ட்ராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்த சீரிஸின் இயக்குநர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
சந்திரமுகி 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான படம் "சந்திரமுகி'. தமிழ்நாட்டில் மட்டும் 800 நாட்களுக்கு அதிகமாக ஓடி இந்தப்படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் டொமெஸ்டிக் கலெக்ஷன் மட்டும் 50 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ்ப் படமும் இதுதான். பல சாதனைகளைப் படைத்த இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது.
"சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மெகாஹிட் படத்தின் இரண்டாம் பாகம், அதுவும் பேய் படங்களின் ஆஸ்தான நாயகன் நடிப்பில் உருவாகிறது என்றதுமே, சினிமா ரசிகர்களிடையே இப்படம் குறித்த அறிவிப்பு கவனம் பெற்றது. ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்படம் குறித்து வெளிவராத சூழலில்... தற்போது இப்படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின் றன. இப்படத்தின் டைட்டில் ரோலான "சந்திரமுகி' பாத்திரத்தில் அவர் நடிக்கவிருப்பதாகக் கூறப் படுகிறது. கடைசியாக 2020-ஆம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான "நிசப்தம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில்... இப்படம் மூலம் கம்பேக் கொடுப்பாரா அனுஷ்கா என அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.