நாய்க்கடியினால் இந்தியா முழுவதும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. தெருநாய்களின் எண்ணிக்கை அதிக அளவு பெருகிவிட்டதும் இதற்கு ஒரு காரணம். கடந்த 2022-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் மூன்றரை லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக தமிழ்நாட்டில் மூன்று லட்சம் பேரும், ஆந்திராவில் ஒரு லட்சம் பேரும் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்திய அளவில் ரேபீஸ் இறப்புக்களில் 30 முதல் 60 சதவீதம் பேர் 15 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ல் மட்டும் 4,04,488 பேர் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சியைச் சுற்றிலும் பாண்டூர், அரளி, காட்டுநெமிலி, நகர், செங்குறிச்சி, வெள்ளையூர், செம்மணங்கூர் கிராமங்கள் உள்ளன. மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில் மட்டும் இந்த கிராமங்களைச் சேர்ந்த 552 பேரை தெருநாய்கள் கடித்து உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவ மனையில் சிக்ச்சை பெற்றுள்ளனர். எலவாசனூர்கோட்டை, இறையூர், திருநாவலூர், களமருதூர் பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடிக்காக சிகிச்சைபெற்றுள்ளனர், 

சங்கராபுரம் அருகிலுள்ள பாவளம் கிராமத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்து சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

Advertisment

"தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க, கருத்தடை ஊசி போடவேண்டும்'' என உடையநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில், திருநாவலூர்        சக்தி ஆகியோர் கூறினர். 

இதுகுறித்து அரசு மருத்துவ அதிகாரி ஒருவரிடம் நாம் கேட்டபோது, “"கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 4,000 பேர் நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். நாய் கடித்தால் உடனே அந்தக் காயத்தை சுத்தமாக கழுவிவிட்டு மருத்துவமனைக்குச் சென்று டாக்டரிடம் காட்டி தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் மனித உயிருக்கு ஆபத்து''’என்கிறார். கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்தியா செந்தில்குமார் நாய்க்கடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அளவிற்கு நாய்களின் வெறித்தனம் கடலூர் மாவட்டம் முழுவதும் தாண்டவமாடுகிறது .

கடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கணேசன் கூறும்போது, "கடலூர் மாநகரத்திலுள்ள புதுக்குப்பம், ஆனைகுப்பம், நேரு நகர், வண்டிபாளையம், மஞ்சக்குப்பம், வேணுகோபாலபுரம், பாண்டுரங்கன் நகர், முத்தையா நகர், ஸ்டேட் பேங்க் காலனி பகுதிகளில் மிக அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவற்றில் பாதிப்புடைய நாய்கள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களைக் கடிக்கின்றன. சாலையோரங்களில் உள்ள இறைச்சிக் கடைகளிலிருந்து இறைச்சிகளின் மிச்சத்தை பாதுகாப்பாக அகற்றாமல் நாய்களுக்கு வீசிவிடுகிறார்கள். அதை சாப்பிட்டு ருசிகண்ட நாய்கள் மனிதர்களைக் கடிக்கத் துரத்துகின்றன''’என்கிறார். 

Advertisment

streetdon1

கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தினசரி சராசரி ஏழு முதல் 10 பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகிறார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் கடலூர் நகரப் பகுதியில் மட்டும் 193 பேரை நாய்கள் கடித்துக்குதறியுள்ளன. இதுகுறித்து தனியார் கால்நடை மருத்துவர் சரவணனிடம் கேட்டோம். "பொதுவாக விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடிய நோய்களின் பட்டியலில் ரேபிஸ் கொடிய நோய். இந்த வைரஸ் மனித உடலுக்குள் சென்ற நிலையில் உடனே தடுப்பூசி போடாமல் அலட்சியமாக இருந்துவிட்டால் இறப்பு ஏற்படுவதைத் தடுக்கமுடியாது. நாய், பூனை, நரி போன்ற விலங்குகள் மூலம் ரேபிஸ் நோய் பரவ வாய்ப்புள்ளது. பொதுவாக 90% பேருக்கு வெறிநாய்கள் கடிப்பதன் காரணமாகவே ரேபிஸ் நோய் ஏற்படுகிறது.

ரேபிஸ் வைரஸ் மனித உடலில் நான்கு வடிவ நிலைகளில் பெருக்கமடைந்து இறப்புவரை கொண்டுசெல்லும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமாக இருப்பார்கள், கத்துவார்கள். மயக்கத்தில் இருப்பார்கள். இதனால் முடக்குவாதம் போன்றவையும் ஏற்படும். ரேபிஸ் வைரஸ் மனிதர்களுக்கு பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட விலங்குகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும்.

 மத்திய அரசு 2030-ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் வைரஸை முற்றிலுமாக ஒழிக்கத் திட்டமிட்டுள்ளது. எனவே மத்திய அரசோடு இணைந்து தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர் கள் தெரு நாய், பூனை ஆகியவற்றிற்கு தடுப்பூசி செலுத்தி நோய் பரவாமல் தற்காத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு தொடர் முயற்சியாக நடத்தவேண்டும்''’ என்கிறார் 

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி என்கிற 12ஆம் வகுப்பு மாணவியை வெறிநாய் கடித்துக் குதறியதில் அவரது முகம் சிதைந்துபோனது. ஏழை மாணவியின் நிலையறிந்து அமைச்சர் சிவசங்கர், மாணவியின் முக சீரமைப்பு சிகிச்சைக்கு உதவிபுரிந்தார்.

பத்திரிகை மற்றும் ஊடகங்களின் மூலம் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் முதியவர்கள், சிறுவர்கள் நாய்க்கடிகளால் பாதிக்கப்பட்டு ரேபிஸ் என்ற கொடிய நோயக்கு ஆளாகின்ற விவரங்களை அறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்தி வாலா, மகாதேவன் அமர்வு, நாய்க்கடி குறித்த விவரங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசும் கால்நடை மருத்துவர் களைக் கொண்டு நோய் முற்றிய நிலையிலுள்ள நாய்களை கருணைக் கொலை செய்யுமாறு அறிவித்துள்ளது.