கடந்த வருடத்தைவிட இந்தாண்டு குறைவுதான் என தமிழகமெங்கும் ஆதங்கங்கள் கிளம்பியது இயற்கையின் காதில் விழுந்து விட்டதோ என்னவோ, போதும் போதும் என கதறுமளவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையைக் குறிவைத்து பொழிந்து தள்ளிவிட்டது மழை.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மிதமான மழை பெய்தபோதிலும் இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது. குந்தா, மஞ்சூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு கருதி ஆயிரக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். இதனிடையே உதகை எமரால்டு பகுதியில் அவலாஞ்சி பகுதியில் சிக்கியிருந்த 45 பேரில் 4 பேருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஹெலி காப்டர் உதவியுடன் அவர்கள் கோவை அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 4 நாட்களில் நீலகிரியில் 450 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக வரலாற்றில் இதுவரை இதுவே அதிகபட்ச மழையாகும்.
பந்தலூரில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை சரிசெய்ய இரவு பகலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆ.ராசா உடன்வர நேரில்சென்று பார்வையிட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், எம்.எல்.ஏ., எம்.பி. நிவாரண நிதியிலிருந்து 10 கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்தார்.
இயற்கைப் பேரிடரின்போதாவது முதல்வர் துணைமுதல்வருக்கு மக்களின் ஞாபகம் தாமத மாகத்தான் வருமோ என நீலகிரி மக்கள் வருத்தப் பட்ட நிலையில், "நாங்கள் உதவி செய்கிறோம். ஸ்டாலின் சீன் போடுகிறார்' என இயற்கைப் பேரிடரிலும் அரசியல் வெளிப்பட்டது.
-அருள்குமார்