"நான் ஒரு கதை சொல்லட்டுமா சார்...'’என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு சோர்ஸ் கேட்டது. "சரி' என்றோம். அவர் சொன்ன தகவலைக் கேட்டு தலையே சுற்றியது. சோர்ஸ் சொன்ன தகவல் இதுதான்...…

""காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு, அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகால் சோழன். சாதாரண விஷயமா அது?

பாய்ந்தோடும் காவிரியின் மேல் அணைகட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் அக்கால பொறியாளர்கள். கடல் தண்ணீரில் நிற்கும்போது அலைகள் நம் கால்களை அணைத்துச் செல்லும்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் ஆழமாய் மண்ணுக்குள்ளே புதையும். இந்த யுக்தியைத்தான் பயன்படுத்திக்கொண்டார்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணை பசையாக புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, காவிரி மீது கட்டிய அணைதான் கல்லணை.

பேயர்டு சுமித் என்ற ஆங்கில பொறியியல் வல்லுனர் 1853-ஆம் ஆண்டில் எழுதிய “"தென்னிந்தியாவின் பாசனம்'’என்ற நூலில் கல்லணையை "ஒரு மிகச்சிறந்த பொறியியல் சாதனை' எனக் குறிப்பிடுகிறார்.

Advertisment

பெருவெள்ளம் வந்தாலும் அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் திருச்சியிலிருந்து கல்லணைக்கு செல்லும் வழியில், கல்லணைக்கு 3 கிலோமீட்டருக்கு முன்னதாக உத்தமர்சீலிக்கும் கிளிக்கூடுக்கும் இடையில் ஒரு தாழ்வான பகுதியை ஏற்படுத்தி, அந்த ஒரு கிலோமீட்டருக்கு அணைக்கு பயன்படுத்தப்பட்ட அதே கற்களையே பதித்து தரைவழிப் பாதையாக மாற்றியிருக்கிறார்கள். அதிக வெள்ளம் வரும்போது தாழ்வான கருங்கல் சாலைவழியே தண்ணீர் வெளியேறும். அதேசமயம் நீர் அரிப்பால் மணல் வெளியேறி விவசாய நிலத்தில் குவிந்துவிடாமலும் தடுக்கும்.

கல்லணைக்கு சாலைபோடும் ஒரு ஒப்பந்தக்காரர், ""இந்தக் கற்களையெல்லாம் அதிகாரிகள் துணையோடு திருடி விற்றிருக்கிறார். ஊர்க்காரர்களுக்கு பல லட்சம் பணம் கொடுத்து வாயை மூடிவிட்டார்''’என சோர்ஸ் கதையை நிறைவுசெய்தார்.

நாம் அந்த இடத்தை தேடிச் சென்றோம். திருச்சியிலிருந்து -கல்லணைக்கு 15 கிலோமீட்டர் சாலை புதிதாகப் போடப்பட்டிருந்தது. உத்தமர்சீலி கிராமம் தாண்டியவுடன் அந்த தாழ்வான பகுதி ஆரம்பமானது. அங்கே பழங்கால கற்கள் மாயமாகி, சிமெண்ட் ரோடு போடப்பட்டிருந்தது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கிராமத்துக்காரர்கள் இரண்டு பேர் வாய்க்காலில் இறங்குவதைப் பார்த்ததும் அவர்களிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தோம்.

Advertisment

""என்னாண்ணே இந்த ரோடு புதுசா இருக்கு இப்ப போட்டாங்களா?''’னு கேட்டவுடன் அவர்கள் முகம் மாறி, “""என்னா சார்... இந்த ரோடு பளபளன்னு இருக்குனு நினைக்கிறீங்களா? அடுத்த வெள்ளம் வந்ததுனா இந்த ரோடு காணாம போயிடும்''’’ என்று அலுத்துக்கொண்டனர். அவர்களிடம் “""என்ன சொல்றீங்க?''’என்று எதிர்க்கேள்வி கேட்டோம்.. அவர்கள் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு மெதுவாக நம்மிடம், ""கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இந்த ரோட்டை பொன்மலையைச் சேர்ந்த பெரிய காண்ட்ராக்டர் கண்ணையன் போட்டாரு. அப்ப இந்த தாழ்வான தரையில் இருந்த பழங்காலத்து கற்களை எடுக்க முயற்சி பண்ணினாங்க, ஆனா இந்த ஊரைச் சேர்ந்த பாம்புக்குட்டிங்கிற கம்யூனிஸ்ட் பயங்கரமா எதிர்ப்பு தெரிவிச்சார். ஆனா ஊரின் பழைய தலைவர் கலை, இந்த ஒப்பந்தக்காரருடன் சேர்ந்துக்கிட்டு இந்த பழங்கால கற்களை தோண்ட முயற்சி பண்ணினார்.

பாம்புக்குட்டி குடும்ப பிரச்சனையில் சிறைக்குப்போன நேரத்தை பயன்படுத்திக்கிட்டு அத்தனை கற்களையும் தோண்டியெடுத்து நூற்றுக்கணக்கான லாரிகளில் கொண்டு போயிட்டாங்க மொராய்ஸ் சிட்டிக்கு''’என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டனர்.

அது எந்த இடம் என்று விசாரணையில் இறங்கினோம். திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள "மொராசியஸ் சிட்டி' என்ற அந்த ஊர் பணக்காரர்களுக்கு என்று உருவாக்கப்பட்ட பிரமாண்டமான சொகுசு ஊர். அதற்குள்ளே நுழைந்தபோது அதன் கடைசி எல்லையில் அரண்மனைக் கோட்டை போன்று தடுப்புச்சுவர் பகுதியை 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பழங்கால கற்களைப் பயன்படுத்தி அமைத்திருப்பதை நேரடியாகவே கண்டதில் அதிர்ச்சியடைந்தோம்.

இதை அப்படியே வீடியோ எடுத்து, இது குறித்து கருத்து கேட்க கே.கே.நகரிலுள்ள "மொராசியஸ் சிட்டி' நிர்வாக அலுவலகத்திற்கு சென்றோம். இதன் உரிமையாளர் வெளிநாட்டிற்கு சென்றிருக்கிறார் என்று பதில் வந்தது.

இதுகுறித்து தரைப்பாலம் எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் காவல்நிலைய எஸ்.ஐ. ராமச்சந்திரனிடம் பேசினோம். “""எனக்கு இந்த பிரச்சனை என்னான்னே தெரியல சார். கேக்கவே தலை சுத்துது. பத்துநாளைக்கு முன்னாடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கிருஷ்ணசாமி என்பவர் வந்து, “"பழங்காலத்துக் கற்களை பெயர்த்து எடுத்து ரோட்டில் போட்டிருந்தோம். யாரோ எடுத்துச் சென்றுவிட்டனர்... கண்டுபிடித்துக் கொடுங்கள் அல்லது நடவடிக்கை எடுங்கனு புகார் கொடுத்தேன், நடவடிக்கை எடுத்தீங்களா?'னு கேட்டார். “"எப்ப புகார் கொடுத்தீங்க'ன்னு கேட்டப்ப, "இதுக்கு முன்னாடி எஸ்.ஐ. ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்தேன்'னு சொன்னார்.

""இங்க நான் ஒரு எஸ்.ஐ.தான் இருக்கேன் இந்த பிரச்சினையை என்னா பண்றதுன்னே தெரியல. இது பெரிய தலைவலியா இருக்கு. சார் நீங்க கண்டுபிடிச்சு சொன்னீங்கன்னா நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறேன்''’என்றார்.

இந்த திருச்சி -கல்லணை ரோடு ஒப்பந்தம் குறித்து நாம் விசாரிக்கையில் இந்த டெண்டரை திருச்சியின் மிகப்பெரிய ஒப்பந்தக்காரர் கண்ணையன்தான் எடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது. இந்த டெண்டரின் மதிப்பு 35 கோடி. ரோடு போடுகிறோம் என்ற போர்வையில் மதிப்புமிக்க பழங்கால கற்களைத் திருடியிருக்கிறார்கள் என்பதுமட்டும் புரிந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமியிடம் பேச முயற்சி செய்தோம். பதிலே இல்லை.

-ஜெ.டி.ஆர்.