இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொலை வேகத்தில் பெருகிக்கொண்டிருக்கும் கொரோனாவிற்கு யார் பொறுப்பேற்பது என்கிற மோதல், மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசுக்கும் மாநிலத்தில் காபந்து அரசாக இருக்கும் எடப்பாடி அரசுக்கும் இடையேயான மோதலாக வெடித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா அரக்கனின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தைத் தாண்டிப் போய்க்கொண்டி ருக்கிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் பக்கத்தில் உள்ளது கடையம்பட்டி தாலுகா. அங்கு மரங்கள் சூழ்ந்த கிராமம், அதன் பெயரே மரக்கோட்டை. அங்கு 388 பேர் வசிக் கிறார்கள். அந்த கிராமத்தில் எல்லோருக்கும் ஜுரம். தமிழக சுகாதாரத்துறை பணியாளர்கள் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு முகாமை அங்கு நடத்துகிறார்கள். 388 பேர் கொண்ட அந்தக் கிராமத்தில், 20 பேரை கொரோனா தாக்கியிருந்தது. அவர்களுக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த சூழலில்... திரும்பிப்பார்க்கும் வேகத்தில் அந்தக் கிராமத்தில் இருந்த அனைவரையும் கொரோனா தாக்கிவிட்டது. இதுதான் தமிழகத்தைத் தாக்கியுள்ள கொரோனாவின் கோர முகம். கிராமங்களிலேயே இப்படி என்றால் நகர்ப்புறத்தைச் சும்மா விடுமா?
சென்னை நகரில் ராயபுரம், தண்டையார்பேட்டை, அண்ணா நகர் பகுதிகளில் மூவாயிரம் பேருக்குமேல் கொரோனா தாக்குதலுக்குள்ளாகி யிருக்கிறார்கள். சென்றமுறை கொரோனா தாக்கியபோது இந்த மண்டலங்களில் வெறும் இரண்டாயிரம் பேரைத்தான் தாக்கியிருந்தது. இந்தத் தாக்குதலுக்கே பல நூறு கோடி ரூபாய்களை தமிழக அரசு செலவழித்தது. கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்கள் அடைக்கப்பட்டன. கொரோனா பாதித்த வீடுகளின் முன்பு தகரத் தடுப்புகள் அடிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது அதையும் தாண்டி கொரோனா பெருகுவதைக் கண்டு என்ன செய்வது என அதிகாரிகள் திகைத்து நிற்கிறார்கள். சென்னை நகரில் சராசரியாக 25 பேர் தினமும் கொரோனாவால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
""இங்கிலாந்தை இந்த இரண்டாவது அலை வைரஸ் தாக்கியபோது, அது நேராகத் தொண்டை வழியாக நுரையீரலைத் தாக்கியது. அதே போல் இந்தியாவையும் தாக்க ஒட்டுமொத்த இந்தியாவும் ஆக்சிஜனுக்குத் திண்டாடும் தேசமாக மாறிப்போனது. வெளிநாடு களில் இருந்து விமானங்கள் மூலம் ஆக்சிஜன் லாரிகள் மகாராஷ்டிராவிற்கு வந்து இறங்கக்கூடிய காட்சிகள் அரங்கேறுகிறது'' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதை எப்படிச் சமாளிப்பது என முதல்வர்கள், தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர், பிரதமர் தலைமையில் கூட்டம் கூடி ஆலோசித்தார்கள். கூட்டத்தின் தொடக்கத்திலேயே மத்திய அரசின் சுகாதாரத் துறை சார்பில் எச்சரிக்கை ஒன்று விடப்பட்டிருந்தது. கொரோனாவின் தாக்குதல் அதிகமாக இருந்தாலும் பொது ஊரடங்கு எதையும் அறிவிக்கக்கூடாது. டெல்லி, மகாராஷ்டிரா பாணியில் பொது ஊரடங்கை அறிவித் தால், அது உள்நாட்டில் மக்களை அகதிகளாக மாற்றும். எனவே, அதற்குப் பதிலாக கர்நாடகா சில கண்டிஷன்களோடு சிறிய ஊரடங்கை அறிவித்துள்ளது. அந்த டெக்னிக்தான் சரி யானது என வலியுறுத்தப்பட் டது. அத்துடன் கர்நாடகத் தில் என்ன கண்டிஷன்கள் போட்டிருக்கிறார்கள் என்று எட்டுப் பக்கம் அடங்கிய உத்தரவையும் மாநிலங் களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. (கர்நாடக ஆவணம்) அதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக தமிழக அரசு அறிவித்தது. அதை புதுச்சேரி அரசும் காப்பியடித்தது.
""ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் 104 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளுங்கள் என முதல்வர் அறிவித்தாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி 15 ஆயிரத்தைத் தாண்டி பயமுறுத்தியே வருகிறது' என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
""கொரோனா நோயாளிகளில் சிறிய அளவு அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அவர்கள் வீட்டில் இருந்தபடி தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்' என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா நோயாளிகளில் பாதி பேரை மருத்துவமனைக்குள் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. 10 சத விகிதம் பேர் கொரோனாவுக்காக ஏற்படுத்தப்பட்ட தற்காலிக மையங்களில் சிகிச்சை பெற, 30 சதவிகித கொரோனா நோயாளி கள்தான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். எங்கு சிகிச்சை பெற்றாலும் நோய் முற்றி, அது நுரையீரலைத் தாக்கும்போது ஆக்சிஜன் தேவை. தமிழகத்தில் உற் பத்தியாகும் ஆக்சிஜனை, ஆந்திரா வுக்கும் தெலுங்கானாவுக்கும் மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதை எதிர்த்து முதல்வர் எடப்பாடி குரல் கொடுத்திருக்கிறார் என ஆச்சரியத்துடன் பகிர்ந்துகொள்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தமிழகத்தின் தேவைக்கான ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்தவேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தமிழகத்தில் இருக்கிறார்கள். தமிழகத்திற்கு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால் தமிழகத்துக்கு 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை. தமிழகத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு 400 மெட்ரிக் டன்தான். மத்திய அரசின் தவறான திட்ட மிடலால், 220 மெட்ரிக் டன்தான் தேவை என மத்திய அரசு கணக்குப் போட்டுள்ளது. எனவே சென்னை ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தயாரிப்பு கம்பெனியிலிருந்து ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் அனுப்பப்பட்ட ஆக்சிஜனை திருப்பித் தரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் எடப்பாடி.
இந்தியா முழுவதும் நிமிடத்திற்கு 250 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என பிரதமரே தனது "மன் கி பாத்' பேச்சில் அறிவித்துள்ளார். ஹரியானா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் "தங்கள் மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளியே கொண்டுசெல்லக் கூடாது' என தடை விதித்துள்ளன. அதனால் டெல்லி மாநில அரசு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்திரப்பிரதேச அரசுக்கு எதிராக வழக்கே போட்டிருக்கிறது. ஆக்சிஜன் என்பது இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் அல்ல. ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கம்பெனிகளை கெமிக்கல் துறை கண்காணிக்கிறது. இப்பொழுது எங்களுக்கு ஆக்சிஜன் தேவை எனக் கேட்பது, சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவமனைகள். இந்தியாவில் முதல் கொரோனாத் தாக்குதலின்போது, நாள் ஒன்றுக்கு 700 டன் என்ற இந்த ஆக்சிஜன் தேவை தற்பொழுது வந்த இரண்டாவது கொரோனா தாக்குதலால், நாள் ஒன்றுக்கு 2800 டன்னாக மாறிவிட்டது. இது, நாள் ஒன்றுக்கு 5,000 டன் ஆக்சிஜன் தேவை என்கிற நிலைக்கு வளரும். அதிகரித்துவரும் நோயாளிகள் எண்ணிக்கை அதைத்தான் காட்டுகிறது. ஒரு நாளுக்கு 7,000 டன் ஆக்சிஜன் வரைதான் இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்காவிட்டால் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொத்துக் கொத்தாக செத்துவிழும் சூழல் உருவாகும். அதனால்தான் வழக்கம்போல எடப்பாடி, பிரதமருக்கு கடிதம் எழுதும் நாடகத்தை நடத்துகிறார் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
மத்திய அரசின் அலட்சியம், தமிழக நிர்வாகத்தின் திணறல் என ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா மரணங்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் பல மரணக் கணக்குகள் மறைக்கப்படுகின்றன. மறைக்கமுடியாத பிணங்களை, பொதுவெளியில் எரிக்கின்ற அளவுக்கு குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் தத்தளிக்கின்றன. இது நாடா? சுடுகாடா? என்ற நிலைக்குத் தள்ளியுள்ளது மோடி அரசு.