13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுப் படுகொலைகளில், யாரெல்லாம் சுட்டது, எந்த வகை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன, என பல விடை தெரியாத கேள்விகளுக்கு, நக்கீரன்’ மட்டுமே உண்மையான பதிலைச் சொன்னது. போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களை ஸ்டெர்லைட் டீம் ஆட்கள் அடையாளம் காட்ட, அவர்களை குறிவைத்துச் சுட்டது போலீஸ் என்பதையும் நக்கீரன் அப்போதே வெளியிட்டிருந்தது. இந்த நிலையில்தான், அப்பாவிகள் எப்படி கொலையானார்கள், அவர்களுக்கு என்னென்ன காயங்கள் ஏற்பட்டன என்பதனை அறுதியிட்டுக்கூறும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் நக்கீரனுக்கு பிரத்யேகமாக கிடைத்தது. அதில் உள்ளவை அனைத்தும் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்.

sterliteprotest

தங்கள் மண்ணையும் வாழ்வையும் நாசமாக்கும் ஸ்டெர் லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 2018 பிப்ரவரி மாதத்திலேயே சாத்வீகப் போராட்டத்தினை அறிவித்தனர் தூத்துக்குடி மாவட்ட மக்கள். போராட்டத்தின் 100-ஆம் நாளான மே.22 அன்று, போலீசாரால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டு, துப் பாக்கிச் சூடு என்னும் கொலைவெறித்தாக்குதலும் மக்கள் மீது நடத்தப் பட்டது. இந்த அரசபயங்கரவாதத்தில் 15 பேர் உயிரிழக்க, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சண்முகம், செல்வசேகர், கார்த்திக், கந்தையா, ஸ்னோலின், தமிழரசன், மணிராஜ், கிளாட்சன், அந்தோணி செல்வராஜ், ரஞ்சித் குமார், ஜான்சி மற்றும் ஜெயராமன், காளியப்பன் ஆகிய 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்க, போலீசாரின் தாக்குதலால் காயமடைந்தவர்களில் சிறைக்கைதி பரத், கீழமுடிமண் ஜஸ்டின் உள்ளிட்டோர் பலியாக ஒட்டுமொத்த உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை 15 ஆனது.

Advertisment

மூச்சு விடவில்லை போலீசார்

"துப்பாக்கிச்சூட்டில் பலியான உடல்கள் விஷயத்தில் எந்த தகவல்களும் வெளியில் போய்விடக்கூடாது என்பதற்காக பல பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி, மிகுந்த எச்சரிக்கை உணர்வோடுதான் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர். பிணக்கூறாய்வு விவகாரத்தினைப் பொறுத்தவரை சென்னை உயர்நீதிமன்ற விடு முறைக்கால அமர்வில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஏற்கெனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட மாசிலாமணிபுரம் சண்முகம், தபால் தந்தி காலனி கார்த்திக், குறுக்குச்சாலை தமிழரசன், சிலோன் காலனி கந்தையா, காளியப்பன், மினிசகாயபுரம் ஸ்னோலின் மற்றும் இருசப்பபுரம் செல்வசேகர் உள்ளிட்ட 7 பேரின் உடல்களையும் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறுபிரேதப் பரிசோதனை செய்யவும், உடற் கூறாய்வு செய்யப்படாத லூர்தம்மாள்புரம் கிளாட்சன், அன்னை வேளாங்கண்ணி நகர் அந்தோணி செல்வராஜ், புஷ்பா நகர் ரஞ்சித், திரேஸ்புரம் ஜான்சி, தாமோதரன் நகர் மணிராஜ் மற்றும் உசிலம்பட்டி ஜெயராமன் உள்ளிட்ட 6 பேரின் உடல்களை பிணக்கூறாய்வு செய்து கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது.

பிணக்கூறாய்வு முடிந்தவுடன் ஒவ்வொரு உடலுக்கும் ஒரு தாசில்தார் என்ற கணக்கில் 13 உடல்களுக்கு 13 தாசில்தார் பொறுப்பாளிகள், ஒவ்வொரு உடலுக்கும் இரண்டு டிரைவர்கள் கொண்ட ஒரு வாகனம், பாதுகாப்பிற்காக குறிப் பிட்ட காவல்நிலைய போலீசார் என தனித்தனி யாக அடையாளப்படுத்தப்பட்டு உடல்களை ஒப்படைத்தனர் போலீசார். ஆனால் பிணக் கூறாய்வு அறிக்கையினைப் பற்றி மூச்சுவிடவில்லை இந்த மாவட்ட நிர்வாகம்'' என்கிறார் போராட் டக்குழு அமைப்பாளர்களில் ஒருவரான பிரபு.

Advertisment

Postmortem!report

போஸ்மார்ட்டம் டீம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தடய அறிவியல் துறையின் இணைப்பேராசிரியரான மருத்துவர் வினோத் அசோக்சவுத்ரி தலைமையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல்துறை உதவிப்பேராசிரியர் முகம்மது நாசிம், உடற்கூறாய்வியல் ட்யூட்டர் மருத்துவர் பிரபுவுடன், மருத்துவர்கள் மனோகரன், சுடலை முத்து, சோமசுந்தரம், மும்மூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினரே 13 உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தனர் என்கிறது அந்த அறிக்கை. இந்த உடற்கூறாய்வு அனைத்தும் தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவர் அண்ணாமலை, கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் சங்கர், 2-வது நீதித்துறை நடுவர் தாவூத்தம்மாள், திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது என்பது சி.பி.ஐ.வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சம்.

அம்பலப்படுத்திய பிணக்கூறாய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனை தடயஅறிவியல் துறையால், மருத்து வர்கள் வினோத் அசோக்சவுத்ரி, முகம்மது நாசிம் மற்றும் பிரபு ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பி.எம். (போஸ்ட்மார்ட்டம்) எண்:324/2018 முதல் பி.எம்.எண் 336/2018-வரை உள்ள வழங்கப் பட்ட பிணக்கூறாய்வு முடிவோ, இது திட்டமிட்ட கொலை என்கின்றது. இதில் கிளாஸ்டன் மதியம் 12:15 மணிக்கும் 18 வயது மாணவி ஸ்னோலின் 12:20-க்கும், மணிராஜ் 12:25-க்கும், தமிழரசன் மதியம் 1 மணிக்கும் அந்தோணி செல்வராஜ் 1:35-க்கும், ரஞ்சித்குமார் 1:45-க் கும், கந்தையா 2:10-க்கும், ஜான்சி 3:00-க்கும், கார்த்திக், ஜெயராமன், செல்வசேகர் ஆகியோர் மதியம் 12:00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் இறந்திருக்கலாம் எனவும் கூறுகின்றது அந்த பிணக்கூறாய்வு அறிக்கை.

sterlite

அந்த அறிக்கையில் இருக்கும் பேரதிர்ச்சியான, பகீரூட்டும் உண்மை இதுதான். கிளாஸ்டன், அந்தோணி செல்வராஜ், கந்தையா ஆகியோர் மார்பில் சுடப்பட்டுள்ள னர். ஏனையோர் தலையின் பின்னங்கழுத்தினை குறி வைத்தே சுடப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக திரேஸ் புரம் ஜான்சியின் வலது காதிற்கும், நெற்றிப் புருவத் திற்கும் இடையில் பாய்ந்த குண்டு அவரது மண்டை யோட்டை துளைத்துள்ளது. முகத்தில் உள்ள எலும்பு பல துண்டுகளாக சிதைந்துள்ளன. மூளைத் திசுக்களைக் காணவில்லை. அந்தளவுக்கு மிகச்சரியாக குறிவைத்து சுட்டுக்கொன்றிருக்கிறார்கள் என்பதுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தரும் பேரதிர்ச்சி. மாணவி ஸ்னோலினின் பின்னங்கழுத்தில் பாய்ந்த தோட்டா வாய் வழியாக வெளியேறியிருக்கின்றது. இதனால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு அங்கேயே இறந்துள்ளார் என வும், அவரின் நாக்கினை பிளந்து குண்டு சென்றுள்ளது. உசிலம்பட்டி ஜெயராமன் பின்னங்கழுத்தில் சுடப்பட்ட குண்டு ஐந்து துண்டுகளாக சிதறி பல்வேறு பாகங்களை சிதைத்தும், மணிராஜின் பின்னங்கழுத்தில் சுடப்பட்ட குண்டு, நெற்றி வழியாக வெளியேறியிருக்கிறது. போலீசின் காட்டுமிராண்டித்தனத்தை இப்படி பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டுக் காட்டி யிருக்கிறது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.

திட்டமிட்ட கொலையே

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் பின்னணி சதிகளைக் கண்டறிய ஆரம்பத்திலிருந்து பயணித்துவரும் மக்கள் கண்காணிப்பகத்தின் இணை இயக்குநரான மோகன் ""கொல்லப்பட வேண்டியவர்கள் முன்கூட்டியே பட்டியலிட்டு, தேடித்தேடி கொல்லப்பட்டனர். அதிலும் தொலைதூரத்திலிருந்து சுடும் ரைபிள்களால் அல்ல, பத்தடி தூரத்திற்குள்ளாக கைத்துப்பாக்கிகளால் சுடப் பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்டெர் லைட்டுக்கு எதிராகப் போராடிய, முன்னின்று வழிகாட்டிய போராளி களின் உயிருக்கு குறிவைத்த போலீஸார், போராளிகளின் புகைப்படத்தை மனதில் பதிய வைத்து, சுட்டு வீழ்த்தியுள்ளனர். எனவே இது திட்டமிட்ட படுகொலையே'' என்கிறார்.

கள்ளக் கணக்கு

"303, 410, எஸ்.எல்.ஆர். உள்ளிட்ட 15 வகை ஆயுதங்களையே பயன்படுத்தினோம். மொத்தமே 69 ரவுண்ட் புல்லட்தான் சுடப் பட்டுள்ளது' என்கின்றது காவல்துறையின் கணக்கு. ஆனால், 12 உயிர்களை பலிவாங்கிய நாளிற்கு அடுத்தநாளான 23-05-2018-ல் அண்ணாநகரில் மட்டும் பிரயோகிக்கப்பட்ட துப்பாக்கிக்குண்டு களின் எண்ணிக்கையே 115-ஐ தாண்டும் என்கின்றது மத்திய உளவுத்துறையின் கணக்கு. அப்படியானால் மற்றதெல்லாம் கள்ளத்துப் பாக்கிக் குண்டுகளா? அந்த கள்ளத் துப்பாக்கி களை உபயோகித்த மிருகவெறி போலீசார் யார்? யார்? என்கிற பட்டியலும் விரைவில் வெளியாகலாம் என்ற அச்சம் கலந்த எதிர் பார்ப்பில் இருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

-நாகேந்திரன்