கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டாலும் உண்மைகளை அத்தனை எளிதாகப் புதைத்துவிட முடியாது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உபயோகப்படுத்திய எஸ்.எல்.ஆர். மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள் திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே டெல்லியில் உள்ள மௌரியா ஷெரட்டன் என்கிற ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஸ்டெர்லைட் கம்பெனியின் உரிமையாளர் அனில் அகர்வால் நடத்திய ஒரு ரகசிய சந்திப்பில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது என்கிறது தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். வட்டாரம்.
இதில் முக்கிய பங்கு வகிப்பவர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தென்மண்டல ஐ.ஜி.யான சைலேஷ்குமார் யாதவ். இவர் தென்மண்டலத்தில் எஸ்.பி., டி.ஐ.ஜி. என பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். தமிழகத்தை விட்டு மத்திய அரசின் அயல்துறை பணிக்காக விண்ணப்பித்தபோது, இவரை வெளியுறவுத்துறையில் பாகிஸ்தானில் பணிபுரிய மத்திய அரசு அனுமதித்துள்ளது. அப்பொழுது இவரை சரிக்கட்ட பாகிஸ்தான் உளவுத்துறை ஒரு வேலைக்கார பெண்ணை அனுப்பியது. இதைத் தெரிந்துகொண்ட இந்திய உளவுத்துறை, இவரை பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைத்துக்கொண்டதோடு இவரது அயல்பணி நியமனத்தையே ரத்து செய்தது.
அதேபோல் 2009-ஆம் ஆண்டு சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதன்பின், அந்தப் பரிசை அளிக்காமல் மறுத்துவிட்டது மத்திய அரசு. அதை எதிர்த்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு செய்து மூக்கறுபட்டுள்ளார் சைலேஷ்குமார் யாதவ்.
மதுரையில் கமிஷனர், மதுரை உட்பட நான்கு மாவட்டங்களின் சட்டம்-ஒழுங்கு ஐ.ஜி. என மதுரையையே சுற்றிச் சுற்றி சைலேஷ்குமார் யாதவ் வருவதற்குக் காரணம் ஸ்டெர்லைட்டின் உரிமையாளரான அனில் அகர்வாலுடன் இவருக்குள்ள நெருக்கம்தான் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களே.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தவுடன் காவல்துறை ஐ.ஜி.க்கென அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு உளவுப்படையை போராட்டக் களத்தில் இறக்கிவிட்டார் சைலேஷ்குமார் யாதவ். அந்தப் படை, போராட்டத்தில் தீவிரமாக இயங்கும் மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் அமைப்பு, இளைஞர் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகளின் தலைவர்கள் பற்றிய விவரங்களை திரட்டியது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு போராட்டத்தை எப்படி நசுக்குவது என வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரு கூட்டத்தை நடத்தியது.
ஸ்டெர்லைட் ஆலை அதிகாரிகள், போராட்டத்திற்கு எதிராக ஈடுபடும் தலைவர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் முக்கிய விருந்தினர்களாக சைலேஷ்குமார் யாதவும், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அதிகாரியுமான அலெக்சாண்டரும் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய ஸ்டெர்லைட் அதிகாரிகளோ, போராட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் கட்சித் தலைவர்களைப் பற்றி கீழ்த்தரமாகப் பேசினர். ""போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவரும் கோடிக்கணக்கான ரூபாய் கேட்கிறார்கள்... தரவில்லையென்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம், பணம் தந்தால் ஒதுங்கிக்கொள்வோம் என மிரட்டுகிறார்கள்'' என்றனர். போராட்டத்தை எப்படி அடக்குவது என நாள் முழுவதும் விவாதித்தார்கள். அனைத்தையும் ஓய்வுபெற்ற அதிகாரியான அலெக்சாண்டர் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
தூத்துக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட அலெக்சாண்டர், ரோமன் கத்தோலிக் என்கிற கிறிஸ்துவ மதப்பிரிவைச் சேர்ந்தவர் மட்டுமல்ல... மீனவர் இனத்தில் பிறந்தவர். அவர் தமிழகம் முழுவதும் தனது பதவி காலத்தில் பல்வேறு போராட்டங்களை காவல்துறையை வைத்து நிர்மூலம் ஆக்கியவர். ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் முன்நிற்கும் கிறிஸ்துவ பாதிரியார்களை தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றாகத் தெரியும். போராட்டக்காரர்கள் களத்தில் முன் நிறுத்தும் மார்க்சிய, தமிழ் தேசிய உணர்வாளர்கள் பற்றியும் மிக நன்றாகத் தெரியும். போலீஸ் துறையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அலெக்சாண்டரை ஸ்டெர்லைட் ஆலை தனது ஆலோசகராக வைத்து மாதம் மூன்றரை லட்ச ரூபாய் சம்பளம் வழங்கி வருவதால், ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் என்ன செய்கிறது என்பதும் தெரியும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உலகம் முழுக்க நடக்கும் எதிர்ப்பியக்கத்தின் நாடித்துடிப்பும் அலெக்சாண்டருக்குத் தெரியும்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அலெக்ஸ், ""தூத்துக்குடி மக்களை சாதாரணமாக எடை போடாதீர்கள்... அவர்கள் ஆக்ரோஷமானவர்கள். போராட்டம் தீவிரமடையும் என்றால், அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். காவல்துறை நம் கைகளில் உள்ளது. இப்பொழுது கூட எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் பிரச்சினை பற்றி என்னிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறார்'' என உரிமையான தொனியில் எடப்பாடி பற்றி குறிப்பிட்டிருக்கிறார். "போலீஸை பொறுத்தவரை அவர்கள் கண் முன் நடக்கும் பிரச்சினைதான் முக்கியம். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படட்டும்... நாம் துப்பாக்கியை உபயோகித்து சைலேஷ்குமார் யாதவ் திரட்டிக்கொடுத்துள்ள முன்னணி போராட்டக்காரர்களைச் சுடுவோம், போராட்டம் முடிந்துவிடும். அதன்பிறகு நீதிமன்றம் மூலமாக ஆலையைத் திறப்போம்'' என்றார். அதை சைலேஷ்குமார் யாதவும் ஸ்டெர்லைட் நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டார்கள் என்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.
மே-22 அன்று கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பேரணி சென்ற நிலையில், மே 19-ஆம் தேதியே ஸ்டெர்லைட் நிர்வாகம் அலெக்சாண்டரை தூத்துக்குடிக்கு வரவழைத்து சி.பி.எம். மாநாடு ஊர்வலத்தினரை தாக்கிய செல்வ நாகரத்தினம் என்கிற ஏ.எஸ்.பி.யை., போராட்டங்கள் அதிகம் நடக்கும் சென்னை திருவல்லிக்கேணிக்கு மாற்றியிருந்தது காவல்துறை தலைமை. டி.ஜி.பி.யிடமும் கமிஷனரிடமும் முதல்வர் எடப்பாடியிடமும் பேசிய அலெக்ஸ், ஏ.டி.எஸ்.பி.யின் டிரான்ஸ்பரை நிறுத்திவைக்கச் சொன்னார். அத்துடன் 22-ஆம்தேதி போராட்டத்துக்கு முன்பே இரவோடு இரவாக 80 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்ய உத்தரவிட்டார். போராட்டத்தை அடக்க ஏகப்பட்ட வெகுமதிகளை ஸ்டெர்லைட் நிர்வாகத்திடமிருந்து வாங்கிக் கொடுத்தார் என்கிறது தூத்துக்குடி காவல்துறை வட்டாரம்.
22-ஆம் தேதி நடந்த போராட்டத்தையும் அலெக்சாண்டர் ஆலோசனைப்படியே சைலேஷ்குமார் யாதவ் வழி நடத்தியிருக்கிறார். அதற்கும் ஏ.எஸ்.பி. செல்வ நாகரத்தினத்தை உபயோகப்படுத்தினர். திட்டமிட்டபடி மாதா கோவிலிலிருந்து அமைதியாக முற்றுகைக்கு கிளம்பிய மக்களை பயர் சர்வீஸ் என்கிற இடத்தில் தடுத்த செல்வ நாகரத்தினம், ""தடியடி நடத்துவேன்'' என்றார். பெண்கள் முன்னால் அணிவகுத்துச் சென்ற பேரணி, வி.வி.டி. சிக்னல்வரை அமைதியாகத்தான் வந்தது. அவர்களை தொடர்ந்து சீண்டினார். அவரது மூர்க்கத்தனமான அணுகுமுறையே அமைதியாக வந்த மக்களை ஆவேசமடைய வைத்தது. உடனே அலெக்ஸ், டெல்லி மீட்டிங்கில் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, சட்டம்-ஒழுங்கு காப்பது என்ற பெயரில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர் அதிசயகுமார், ""செல்வ நாகரத்தினத்தை திட்டமிட்டு போலீஸ் உயரதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர். எஸ்.பி. மகேந்திரன் பொதுமக்களிடம் பேசும்போது, ""நான் காவல்துறை அதிகாரி. எங்க நடவடிக்கை பாணியே வேறு'' என மிரட்டினார். பேரணியாகப் போன மக்கள் மத்தியில் காவல்துறை ஆட்கள் சாதாரண உடையில் ஊடுருவியிருந்தார்கள். வி.வி.டி. சிக்னல் பகுதி வந்ததும், ஏ.எஸ்.பி. செல்வ நாகரத்தினம் தலைமையில் வந்த போலீசார், ஊர்வலத்தில் வந்த பெண்களின் நெஞ்சில் கை வைத்து அழுத்தித் தள்ளினர். அதைத் தட்டிக் கேட்டவர்களை அடித்தார்கள். கலவரச் சூழல் உருவானது'' என்கிறார்.
துப்பாக்கிச் சூடு ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சாவுகள் என்றிருந்த நிலையில்... போராட்டத்தை வழிநடத்திய தோழர்களை குறிவைத்து எஸ்.பி. மகேந்திரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில் சரோத்கர் ஆகியோரின் பயிற்சி பெற்ற துப்பாக்கிப் படை சுட்டது. அதனால்தான் சாவு எண்ணிக்கை அதிகமானது. இதெல்லாமே அழகாக திட்டமிட்டு நடத்தப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கை. இந்த நடவடிக்கை, ""அமைதியாகப் போராடிய மக்கள், அடுத்து வெடிகுண்டு ஏந்துவார்கள். அவர்கள் கடல்மார்க்கமாக இலங்கைக்குத் தப்பிச் செல்வார்கள்'' என உளவுத்துறை எச்சரிக்கும் அளவிற்கு தென் மாவட்ட சூழலை மாற்றிவிட்டது என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.
துப்பாக்கிச் சூடு பின்னணியில் டெல்லிவரை நடந்த சதிகள் எல்லாம் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணைக் கமிஷனில் வெளிவருமா?
-தாமோதரன் பிரகாஷ், பரமசிவன்
படங்கள்: ராம்குமார்