""கொரோனா தொற்றால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைச் சமாளிக்க, ஸ்டெர்லைட் ஆலையில் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இலவசமாகவே சப்ளை செய்யக் காத்திருக்கிறோம். நாளொன்றுக்கு 1,050 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறனுடைய உற்பத்திக்கூடத்தில், தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு 500 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அனுப்பத் தயாராக இருக்கிறோம்'' என மனு ஒன்றை வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த நிலையில்... "மின்சார செயற்கை பற்றாக் குறையை உருவாக்கி கூடன்குளம் அணு உலையைக் கொண்டுவந்ததுபோல், செயற்கையாய் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை உருவாக்கி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதியளித்துள்ளது' மோடி தலைமையிலான மத்திய அரசு.

sterlite

ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று கூறி, ஆலையை திறப்பதற்கு நீதிமன்றத்திடம் முறையிட்டது மத்திய அரசு. தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்ட அதேவேளையில், ஆலைக்கு அனுமதி கொடுப்பதா? வேண்டாமா? என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தினை நடத்த முன்வந்தது.

sterlite

Advertisment

அதெப்படி காலைல 8 மணிக்கெல்லாம் கலெக்டர் ஆபீஸ் திறந்திருக்கும்? என்ற பொதுவான கேள்விகள் மக்கள் மத்தியிலிருக்க, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், ஆலைக்கு ஆதரவான வர்கள் என 28 நபர்களை மட்டும் அழைத்தது மாவட்ட நிர்வாகம்.""28 நபர்களின் கருத்துதான் பொதுமக்களின் கருத்தா..? அனைவரையும் உள்ளே அழைக்கவேண்டுமென'' காலை 7 மணி முதலே திரண்டிருந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்த நிலையில்... அவர்களில் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து மொத்தமாக 60 நபர்களைக் கருத்துக் கேட்பு அரங்கிற்குள் அனுப்பினார் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்.

sterlite

""ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு அனுமதி வழங்கலாமா..? அல்லது அரசே ஆலையைக் கையகப்படுத்தி அதில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமா.?'' என்கின்ற இரண்டு கேள்விகளை முன்வைத்து கூட்டத்தினைத் தொடங்கிவைத்தார் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். வழக்கம்போல் ஆதரவாளர்கள் ஆலைக்கு அனுமதிவேண்டுமென கைதூக்க, கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான மக்கள் "ஸ்டெர்லைட் ஆலை மூலம் உற்பத்தி செய்யக்கூடிய எந்த ஒரு பொருளும் மக்களுக்குத் தேவை இல்லை. 13 பேரை பலிகொண்ட ஆலை, இங்கு மீண்டும் செயல்படக்கூடாது' எனக் கூறிய நிலையில்... "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆலையை நடத்தவேண்டாம், ஆனால் அரசு நடத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யலாமா?' sterliteஎன கலெக்டர் கேட்டதற்கு, "அரசுத் தரப்பிலும் ஆலை நடத்தக்கூடாது, திறக்கக்கூடாது' என்ற கருத்துக்களையே முன்வைத்தனர். அத்துடன், "ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் பிரித்து, அழித்துவிட்டு அந்த இடத்தில் வேண்டுமானால் ஆக்ஸிஜன் ஆலையை நிறுவிக்கொள்ளலாம்' என கைப்பட கலெக்டரிடம் கடிதம் கொடுத்துவிட்டு நகர்ந்தனர்.

Advertisment

""ஆலைக்கெதிரான போராட்டத்திலுள்ள அக்ரி பரமசிவனோ, ""மக்களின் உயிரைக் காக்க ஆக்சிஜனைத் தயாரித்து அதனை இலவசமாகத் தருகிறோம் என்கிற வேதாந்தாவின் கரிசனம் சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. ஸ்டெர்லைட்டிற்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களைத் துடிதுடிக்க கொன்றொழித்த வேதாந்தாவும் அதற்கு துணைபோன மத்திய பா.ஜ.க. அரசும் மாநில அ.தி.மு.க. அரசும் தற்போது "மக்களின் தேவைக்காக ஆக்ஸிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கலாம்' என நீதிமன்றத்தில் எடுத்துரைப்பது மறைமுகமாக ஸ்டெர்லைட்டை திறக்க தீட்டும் சதியே அன்றி வேறில்லை. மோடி அரசும் எடப்பாடி அரசும் பல்வேறு கட்ட தேர்தல் களங் களுக்காக ஸ்டெர்லைட் திறப்பை தள்ளிவைத்தன. தற்போது தேர்தல் நிறைவுற்ற நிலையில் ஆலையைத் திறக்க மறைமுகமான சூழ்ச்சிசெய்யத் தொடங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சூழலில் அதனை சாதகமாக நிலைநிறுத்த மத்திய-மாநில அரசுகளோடு வேதாந்தா கைகோர்க்க தொடங்கிவிட்டது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டின் அடையாளமாக பார்க்கப்படுகிற ஸ்டெர்லைட்டை திறக்கும் நிலை தமிழகத்தில் எழுமேயானால், மீண்டும் வீரியமிக்க போராட்டக் களங்கள் உருவாகும்'' என்கிறார் அவர்.

sterlite

போராட்டாக்குழுவிலுள்ள மெரினா பிரபுவோ, ""ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே பணிபுரிந்துவரும் ஊழியர்களின் தற்காப்பு மருத்துவப் பயன்பாட்டுக்கு மட்டுமே திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்த சூழலில், தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்பது முற்றிலும் தவறானது. அதுபோக, இயங்கிக்கொண்டிருக்கும் எந்த ஒரு தொழிற்சாலையிலும் ஆக்ஸிஜனை பெற்றுக் கொள்ளலாம். ஸ்டெர்லைட்டில்தான் பெறமுடியும் என்பது தவறான கருத்து. ஆலையை மராமத்து செய்து தொடர்ந்து நடத்தவே இந்த ஆக்ஸிஜன் உருட்டு நாடகம்'' என்கிறார் அவர்.

படங்கள்: விவேக்