ராமன் எத்தனை ராமனடி என்ற பாடல் இருக்கிறது. அதுபோல எடப்பாடி பேசும் பேச்சுகள் மற்றும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் நடத்தும் நாடகங்களை பார்த்து எடப்பாடிக்கு எத்தனை வேடம் என தமிழக மக்கள் கொந்தளித்துப்போய் இருக்கிறார் கள் என்கிறார்கள் சமூக நல செயற்பாட்டாளர்கள்.
நெடுஞ்சாலைத்துறையில் தனது உறவினர்களின் கம்பெனிகளுக்காக ஊழல் செய்கிறார் எடப்பாடி என்கிற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டிற்கு தான் கடந்த அக்டோபர் மாதம் வரை மேடைகளில் விளக்கம் கொடுத்து வந்தார் எடப்பாடி. அண்மைக்காலமாக எல்லா மேடைகளிலும் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவு கேட்டு பேசி வருகிறார்.
நான்கு நாள் சுற்றுப்பயணமாக சேலம் வந்திருந்த முதல்வர் எடப்பாடி ஓமலூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ""எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு 89 சதவிகித மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். 11 சதவிகிதம் மக்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்'' என்றார். இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரி ஒருவரை சந்தித்து கேட்டோம். ""எடப்பாடி பொய் சொல்கிறார். உண்மையில் இந்த சாலை திட்டத்தை ஆதரிப்பவர்கள் 11 சதவிகிதம் தான் மற்றபடி 89 சதவிகிதம் பேர் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள். அந்த 11 சதவிகிதம் பேர்தான் "எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு எங்கள் நிலத்தை அரசு எடுக்க சம்மதம்' என கடிதம் கொடுத்துள்ளார்கள். உண்மையை அப்படியே தலைகீழாக மாற்றி "11 சதவிகிதம் பேர்தான் எதிர்க்கிறார்கள். 89 சதவிகிதம் பேர் ஆதரிக்கிறார்கள்' என பொய் சொல்கிறார் எடப்பாடி. இதே எடப்பாடி 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் சேலம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது "எட்டுவழிச் சாலை திட்டத்தை வெறும் நான்கு பேர்தான் எதிர்க்கிறார்கள்' என்றார். ஜூன் மாதம் நான்கு சதவிகிதமா இருந்த எதிர்ப்பு இப்போது பதினோரு சதவிகிதமானது எப்படி?
சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியா பட்டணம் சேலம் மேற்கு தாசில்தார்கள், மாவட்ட வருவாய் அலுவலர் எட்டுவழிச் சாலை தொடர் பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டங்களுக்கு ஒரு விவசாயி கூட போகவில்லை. இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் 11 சதவிகித மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் "சாலைக்காக எடுக்கப்படும் இடங்களுக்கு அரசு கொடுக்கும் விலை குறைவு. அதிக விலை கொடுக்க வேண்டும். அந்த விலை கொடுத்தால்தான் ஆதரவு' என்கிறார்கள். இந்நிலையில் எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு ஆதரவு பெருகிவிட்டது என எப்படி கூசாமல் எடப்பாடி பொய் சொல்கிறார்?'' என நம்மை கேள்வி கேட்டார் அந்த வருவாய்த்துறை அதிகாரி.
இதுபற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, ""பா.ஜ.க. அடுத்து ஆட்சிக்கு வருமா? என்கிற கேள்வியை ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஏற்படுத்தி விட்டன. எப்படியாவது ஆட்சி முடிவுக்கு வரும் முன்பே டெண்டர் விட்டு வேலையைத் தொடங்க வேண்டும் என எடப்பாடிக்கு மிக நெருக்கமான மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரான நிதின் கட்காரி நினைக்கிறார். அதற்காக மத்திய அரசு நிறுவனத்தை வைத்து சர்வே ஒன்றை எடுத்து எடப்பாடியிடம் தர, அதை வைத்துக் கொண்டு பேசுகிறார் எடப்பாடி'' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
"சீக்கிரம் எட்டுவழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற மத்திய- மாநில அரசுகளின் ஆர்வம் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமியை அதிகமாக பொய் சொல்ல வைக்கிறது' என்கிறார்கள் சேலம் மாவட்ட சமூக ஆர்வலர்கள். எடப்பாடி, எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு காரணம் வாகனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. தமி ழகத்தில் 31.3.2018-ம் தேதி நிலவரப்படி 2 கோடியே 56 லட்சத்து 61,847 வாகனங்கள் உள்ளதாக தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் அறிக்கை கூறுகிறது. அதில் 2 கோடி வாகனங்கள் இருசக்கர வாகனங்கள். இரண்டு கோடி இரு சக்கர வாகனங்கள் எட்டுவழிச் சாலையில் அனுமதிக்கப்பட மாட்டாது. வெறும் 56 லட்சம் வாகனங்களான கார் மற்றும் லாரிகள். இது தமிழகம் முழுவதுமுள்ள கணக்கு. இதில் எத்தனை வாகனம் எட்டு வழிச் சாலை வழியாக செல்லும் என்பதும் கேள்விக் குறியே? பெருகி வரும் வாகனங்களுக்காகத் தான் எட்டுவழிச் சாலை என்பது ஜமுக்கா ளத்தில் வடிகட்டிய பொய்'' என்கிறார்கள் போக்குவரத்துத் துறை அதிகாரிகள்.
எட்டு வழிச்சாலையால் தொழில் வளம் பெருகும் என்கிறார் எடப்பாடி. தமிழகத்தில் அதிக தொழில் வளர்ச்சி ஏற்பட சாலை போக்குவரத்து வசதிகள் தேவை. எட்டுவழிச் சாலை தொடாத திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் தொழில் வளர்ச்சி எப்படி ஏற்பட்டது என எதிர்கேள்வி கேட்கிறார்கள் சேலம் மக்கள்.
இதுகுறித்து விவசாயிகள் நாராயணன், பன்னீர்செல்வம், மோகனசுந்தரம் ஆகியோர் கூறுகையில், ""எட்டு வழிச்சாலைக்கு எதிராக ஆறு மாதங்களாக போராடி வருகிறோம். ஆனால், விவசாயிகள் ஓரிடத்தில் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினால்கூட கைது செய்வோம் என்று காவல்துறையினர் மிரட்டுகின்றனர். நாங்கள் இந்த சாலையே வேண்டாம் என்று சொல்கிறோம். ஆனால், புதிதாக நில எடுப்புக்காக சர்வே எண்களை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நீதிமன்றம் சொல்வதையோ, விவசாயிகள் சொல்வதையோ முதல்வர் பொருட்படுத்துவ தில்லை. இந்தத் திட்டத்தைக் கைவிடும்வரை எங்கள் போராட்டம் தொடரும். எட்டு வழிச் சாலையில் 20 கி.மீ. தூரத்திற்கு ஒருமுறைதான் சாலை திறப்பு அமைக்கப்படுகிறது. அவ்வளவு தூரம் கடந்து சென்று மறு சாலைக்குச் செல்லும் போது எப்படி எரிபொருளை சேமிக்க முடியும்?
நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 50 சதவீதமாக உள்ள நிலையில், விளைநிலத்தை அழித்து எட்டு வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அடுத்தகட்டமாக நாங்கள் சேலத்தில் உள்ள முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம். தொடர் உண்ணாவிரதம், சட்டசபையை முற்றுகையிடுவது மட்டுமின்றி தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டோம்'' என்றனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த எட்டுவழிச் சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள், ""எட்டு வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரிபோல பேசி வருகிறார்.
நாங்கள் எட்டுவழிச் சாலை தேவையில்லை என்று மீண்டும் ஆட்சேபணை மனுக்களைக் கொடுக்க இருக்கிறோம். சேலத்தில் புதன்கிழமையும் (டிச. 19), திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமையும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஆட்சேபணை மனுக்களை கொடுக்க உள்ளோம். காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி யிலும் ஆட்சேபணை மனுக்கள் கொடுக்கப்படும். 100 சதவீத விவசாயிகளும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு என்பதை அரசுக்கு மீண்டும் உணர்த்துவோம்'' என்றார்.
8 வழிச்சாலை தொடர்பாக நேரத்துக்கு நேரம் மாறுவேடம் போடும் எடப்பாடி, ஸ்டெர்லைட்டிலும் இரட்டை வேடம் போடுகிறார். சேலம் மக்களை விட தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் எடப்பாடி நடத்திய பித்தலாட்டங்கள் அந்த மக்களை கடுமையான கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்துள்ளது. ""தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு என்பது சட்டத்தை சிறிதும் மதிக்காமல் பிறப்பித்த உத்தரவு. ஸ்டெர்லைட் ஆலை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை மதித்து நடந்திருக்கிறது. மேலும் எச்சரிக்கை உணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஏற்க ஸ்டெர் லைட் நிறுவனம் தயாராகவே இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை தமிழக அரசு ஒரே உத்தரவின் மூலம் அந்த நிறுவனத்தின் கருத்தை ஒருமுறை கூட கேட்காமல் மூட உத்தரவிட்டது, தவறு. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொறுப்பான முறையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை கண்காணிக்க தவறிவிட்டது'' என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள தீர்ப்பு... அடுத்து என்ன செய்வது என தமிழக அரசை உலுக்கிவிட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த பரிந்துரைகளை வைத்துக்கொண்டு ஸ்டெர்லைட் நிர்வாகத்தை அழைத்து விளக்கம் கேட்காமல் அவசர அவசரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என அந்த உத்தரவு வந்த போதே நக்கீரன் செய்தி வெளியிட்டது. அதை மையமாக வைத்துதான் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான கமிட்டி ரிப்போர்ட் கொடுக்க அதையே பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பாக அளித்துள்ளது.
""கடந்த இருபது ஆண்டுகளாக ஸ்டெர் லைட்டை எதிர்த்து மக்கள் போராடுகிறார் கள். அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில். 13 உயிர்கள் பலியாகும் அளவிற்கு ஸ்டெர் லைட் ஆலைக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தது. அதனால் ஸ்டெர்லைட்டினால் மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை தெளிவாக ஆவணப்படுத்த அரசால் முடியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை எப்படி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது என்பது பற்றிய ஆவணங்கள் அரசிடம் இல்லை. ஒரு தொழிற்சாலையை மூட வேண்டும் என்றால் அந்த தொழிற்சாலை என்ன தவறு செய்தது என்பதை அரசு நிரூபிக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு மக்களிடம் விளை யாடி விட்டது. துப்பாக்கிச் சூடு நடக்கும் வரை ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாளராக இருந்த அரசு திடீரென ஸ்டெர்லைட் எதிர்ப்பாளராக நாடகமாடி, கம்பெனியை ஏனோதானோவென மூடிவிட்டது.
இப்பொழுது அரசு கொள்கை முடிவு எடுத்து கூட ஸ்டெர்லைட்டை மூட முடியாது. ஸ்டெர்லைட் செய்த சுற்றுச்சூழல் கேடுகளை முறையாக ஆவணப்படுத்தினால் தான் அதனடிப்படையில் கொள்கை முடிவை அரசு எடுத்து ஸ்டெர்லைட்டை மூட முடியும். இல்லையென்றால் மேற்கு வங்கம்- சிங்கூர் பகுதிகளில் அமையவிருந்த டாடா கார் தொழிற்சாலை மக்களின் கடுமையான எதிர்ப்பினால் மூடப்பட்டது. அதுபோன்ற ஒரு காரணத்தை பயன்படுத்தி ஸ்டெர்லைட்டை மூடலாம்'' என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
இதற்கிடையே தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன்பே அது லீக் ஆகிவிட்டது பற்றிய சர்ச்சையும் பெரிதாக வெடித்துள்ளது. ""தீர்ப்பு சொல்லப்பட்ட அதே நாள் காலை 7.30 மணிக்கு தேசிய பசுமை தீர்ப்பாய கம்ப்யூட்டரான "என்.ஜி.டி.பி.ஏ.' என்கிற USER NAME கொண்ட கம்ப்யூட்டரிலிருந்து "ஆபாஸ் பாண்டியா' என்கிற USER NAME கொண்ட கம்ப்யூட்டருக்கு தீர்ப்பு நகல்கள் சென்று விட்டன. அங்கிருந்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு மற்றும் கணக்கு வழக்கு வேலைகளை பார்த்துக் கொள்ளும் நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கு வந்து சேர்ந்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே அதன் முழு விவரமும் ஸ்டெர்லைட் நிறுவனத் திற்கு போய்ச் சேர்ந்தது எப்படி? இது நீதிமன்ற அவமதிப்பு'' என்கிறார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியான பாத்திமாபாபு.
அதேபோல் ஸ்டெர்லைட் நிறுவனம் தாமிரம் தயாரிப்பதற்கான தாதுப்பொருட்கள் அடங்கிய கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளது என்கிற செய்திகளும் பறந்தன. இதுபற்றி நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், ""வேதாந்தா நிறு வனத்திற்கு ஆதரவாக எடப்பாடி அரசு செயல்படு வதற்கு காரணமே பா.ஜ.க.வின் மேலிடம்தான். அ.தி.மு.க.வின் தூத்துக்குடி அமைச்சரான கடம்பூர் ராஜுவும், மா.செ.வான சி.த.செல்லபாண்டியனும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செல்லப்பிள்ளை யாகவே வலம் வந்தார்கள். பொதுமக்கள் வீரமாக ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடியதால் "நீ ஒரு பலவீனமான உத்தரவை போட்டு ஆலையை மூடு. அதை நீதிமன்றத்தில் உடைத்து ஆலையை திறக்கலாம். அதற்குள் மக்கள் எதிர்ப்பு அடங்கி விடும்' என கணக்கு போட்டு எடப்பாடிக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டது. அதை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொழில்துறை செயலாளர் ஞானதேசிகன் மூலம் எடப்பாடி நிறைவேற்றினார் என எடப்பாடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் செய்த வஞ்சகத்தை அம்பலப்படுத் தும் அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டுக்கு போனாலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்'' என உறுதியாக சொல்கிறார்கள்.
""ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போரா டும் ஒவ்வொருவரின் வீடு இருக்கும் தெருக்களில் குறைந்தது 15 போலீஸாரை களமிறக்கி யார் யார் வீட்டிற்கு வருகிறார்கள்.? யாரை சந்திக்கிறோம்.? என்பது உட்பட அனைத்து விபரங்களையும் தங்கள் விரல் நுனியில் வைத்துக்கொண்டு எங்களை தீவிரவாதியைப் போல் சித்தரிக்கின்ற போலீஸார், இங்கே 4 நபர்கள் கூடியிருந்தாலோ, 4 நபர்கள் ஒன்றாக காரில் பயணம் செய்தாலோ பிரிவு 151 கீழ் வழக்குப் பதிவு செய்து உளவியல் ரீதியாக சிதைக் கின்றனர்.. உண்மையாக கூற வேண்டுமானால் மாவட்டத்திலோ, மாநகரிலோ 144 தடையுத்தரவு பிறப்பிக்கவில்லை. போலீஸாரின் நோக்கமே நாங் கள் யாரும் ஒன்று சேருதல் கூடாது. ஆலைக்கெதி ராக எதுவும் பேசக்கூடாது என் பதே.! கருப்புத்துணி வாங்கினாலே ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று விசாரித்து கொடுமைப்படுத்து கிறார்கள். தமிழக அரசு உடனடி யாக சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் இயங்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும், ஒன்றாய் நின்று இந்த மரண ஆலையை எதிர்க்க வேண்டும்'' என்கிறார் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி.
-தாமோதரன் பிரகாஷ், நாகேந்திரன், இளையராஜா