""மண்ணைக் காக்க தன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தல்'' என ஸ்டெர்லைட்டிற்கு எதிராகப் போராடி தன்னுயிரை ஈந்த 15 நபர்களுக்கான நினைவேந்தலை எழுச்சியுடன் நடத்த அழைப்பு விடுக்கப்பட, கருப்பு உடை அணிந்தால் விசாரணை, துண்டறிக்கை விநியோகித்தால் வழக்கு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்திட தடை, குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவுகளின்படி எச்சரிக்கை என காவல்துறையின் அராஜகமான போக்கு நீடித்தாலும் “""அஞ்சலிக்கு உன் உத்தரவு தேவையில்லை.! சுட அனுமதித்த உன்னிடம் அழ அனுமதி கேட்க நாங்கள் கோழையில்லை''’என நினைவேந்தலுக்கான நாளுக்காகக் காத்திருந்தனர் ஊர்மக்கள்.
"துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகும் ஆட்சியாளர்களின் வெறித்தனம் அடங்கவில்லை. தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரின் அடாவடிகள், அத்துமீறல்கள், அடக்குமுறைகள், பொய்வழக்குகள் என ஸ்டெர்லைட்டிற்கு எதிராக செயல்படுவோர் மீது தினசரி பல்வேறு விதமான சட்டவிரோத விதிமீறல்களை திணித்து வருகிறது' என தூத்துக்குடியின் வாழ்வியல் சூழலை வெளிப்படுத்தி வருகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 22 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வுகளை பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இந்த மே 22 அன்று மட்டும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களை தூத்துக்குடியின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வருவாய்த் துறையினரை வைத்து இரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை துப்பாக்கிச் சூடு ஒத்திகை நிகழ்ச்சியே நடத்தியது போல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் "சர்ச்சுகளில் நினைவேந்தல் நடத்தக்கூடாது' என வாய்மொழி உத்தரவு வேறு! சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி இவ்வாறான அடக்குமுறையை செயல்படுத்தி மக்களை ஒடுக்கிவிட்டால் எப்போது நீதிமன்றம் ஸ்டெர்லைட்டை திறக்க உத்தரவிட்டாலும் அதனால் பொதுமக்கள் பெரியஅளவில் வீதியில் இறங்கி போராடாதவண்ணம் அடக்குமுறையை புகுத்தவேண்டும் என்கிற எண்ணத்தோடு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா செயல்படுகிறார் என மக்கள் குற்றம்சாட்டாமல் இல்லை. இதற்கு அத்தாட்சியாக நினைவேந்தலில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காக வழக்கறிஞர் அரிராகவன் வீட்டுக்காவலிலும், கூடங்குளம் உதயகுமார் கோட்டாறு காவல் நிலையத்திலும் வைக்கப்பட்டனர்.
கடந்த மே 22-ல் துப்பாக்கிக்குண்டிற்கு 13 உயிர்களும், காயத்தால் 2 உயிர்களும் இறக்க மாவட்டம் முழுமைக்கும் நினைவேந்தல் நடத்த முடிவெடுத்த தூத்துக்குடி மக்கள் இந்த மே 22 அன்று தருவைக்குளம் மைதானம், பாத்திமா நகர், குமரெட்டியபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, புதுத்தெரு, முத்தையாபுரம், ஸ்பிக் நகர் மற்றும் வாடித்தெரு என வெவ்வேறு இடங்களில் தங்களுக்காக தன்னுயிரை ஈந்த ஈகியருக்கு காலை 6 மணி தொடங்கி அஞ்சலி செலுத்த ஆரம்பித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், தமிழர் தேசிய கொற்றம் சார்பிலும், வியாபாரிகள் சங்கத்தினர் தலைமையில் ஸ்நோலின் உள்ளரங்கத்திலுமாக கருத்தரங்க நினைவுக்கூட்டமும் மாவட்டத்தினை வியாபித்திருந்தன. தன்னுயிரை விட்ட ஈகியர்களில் பெரும்பாலானோரின் உடலை எரித்துவிட காமராஜர் கல்லூரி வாடித்தெருவிலுள்ள கல்லறையில் ஸ்நோலின் நினைவிடமும், திரேஸ்புரத்தில் கிளாஸ்டன் மற்றும் ஜான்சியின் கல்லறை நினைவிடத்திலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியை செலுத்தினர்.
""நித்தமும் வேதனைதான். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில்தான் சுடப்பட்டோம். எங்களால் அந்த சம்பவத்தை மறக்கமுடியவில்லை. காயம் இன்னும் ஆறவில்லை. அரசு கொடுத்த ரூபாய் ஐந்து லட்சம் ஆரம்ப கட்ட செலவினங்களுக்கே போதவில்லை. இப்பொழுதுவரை ஏறக்குறைய ரூ.9 லட்சம் செலவாகி விட்டது. எனினும் முந்தைய உடல் நிலை இப்பொழுது இல்லை. இயற்கை உபாதைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. பேசாமல் துப்பாக்கிச் சூட்டிலேயே இறந்திருக்கலாம் என தோன்றுகிறது. இன்று அந்த கொடூரமான நாள்'' என்கின்றனர், வலது கால் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்த விஜயகுமாரும், வலதுகால் மூட்டுப்பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்த சேர்மராஜும்.
காவல்துறையினரின் குண்டுக்கு பலியானவர் ஸ்நோலின். அவரது தாயார் வனிதா, ""அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்நோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்'' என தன் மகளை சுட்டுக்கொன்ற போலீஸாரிடமும், அரசு அதிகாரிகளிடமும், ""லயன்ஸ் ஸ்டோன் சகாய மாதா ஆலயத்தில் ஸ்நோலினிற்காக சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் உள்ளது, அவசியம் கலந்துகொள்ளுங்கள்'' என அழைப்பு விடுத்தார். காலையில் துவங்கிய பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனை வரும் ஸ்நோலின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்த, யாரும் எதிர்பாராதவண்ணம் அங்கு ஆஜரானார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு.
காவல்துறையின் எதிர்ப்புகளையும் மீறி தன்னுயிரை நீத்த ஈகியருக்கு நினைவேந்தல் நடத்திய மக்களின் எண்ணத்தில் நச்சுஆலை ஸ்டெர்லைட் நினைவில் இல்லாமல் இல்லை. நீறுபூத்த நெருப்பாய் கனன்றுக் கொண்டிருக்கிறது அந்த எதிர்ப்பு.
-நாகேந்திரன்