"ஏழாயிரம் சிலைகள் கடத்தப்பட்டுள்ளன'’ என்ற பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பி இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையே அதிரடியாக கைதுசெய்துகொண்டிருக்கிறது ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைத்தடுப்புப்பிரிவு போலீஸ்.

officers

கோயில்களை காக்கவேண்டிய இந்து அறநிலையத்துறை அதிகாரிகளே ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை…"கடவுளை ஏமாற்றும் அறநிலையத்துறை -சர்வம் சண்முகமணி மயம்' என்ற தலைப்பில் 2017, ஆகஸ்டு 30-ந்தேதி அதிகாரிகளின் பட்டியலோடு அம்பலப்படுத்தியது நக்கீரன். அடுத்த சில நாட்களிலேயே அதிரடியாக நீக்கப்பட்டார் அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமோனி ஐ.ஏ.எஸ். ஆனால், பழனி முருகன் கோயில் முறைகேட்டில் முன்னாள் ஆணையர் தனபாலை மிகவும் லேட்ட்ட்ட்டாக கைது செய்திருக்கிறார்கள், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸார்’ என்கிற காவல்துறை… அடுத்தடுத்து சிக்கப்போகும் அறநிலையத்துறை அதிகாரிகளின் பட்டியலையும் நம்மிடம் நீட்டுகிறது.

தனபால் சிக்கியது எப்படி?

Advertisment

ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் சரியான பங்கை ஆட்சியாளர்களுக்கு கொடுக்காததால் தனபால் அதிரடியாக நீக்கப்பட்டு அந்த இடத்தில் வீரசண்முகமோனி பணியமர்த்தப்பட்டார். பக்தர்களிடமிருந்து வாங்கப்பட்ட 100 கிலோ தங்கத்தையும் திருத்தணி கோயிலில் இருந்து பெறப்பட்ட 10 கிலோ தங்கத்தையும் வைத்து பழனி அபிஷேகமூர்த்தி சிலை செய்ததில்தான் மாபெரும் ஊழல் செய்ததாக அண்மையில் கைது செய்யப்பட்டார் தனபால்.

110 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையில் தங்கமும் இல்லை வெள்ளியும் இல்லை, கருத்துப்போய்விட்டது. ஏற்கனவே, அர்னால்டு சைசில் இருந்த மூலவரான நவபாஷாண சிலையை சுரண்டி சுரண்டி அனிருத் சைசிற்கு ஒல்லியாக்கியிருக்கிறார்கள். எதிர்க்கூட்டணி போட்டுக்கொடுத்ததன் அடிப்படையில்தான் தனபால் வசமாக சிக்கியுள்ளார்.

murugan

Advertisment

அடுத்தடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள்!

வீரசண்முகமோனி அதிரடி நீக்கத்திற்குப்பிறகு ஆணையராக பணியமர்த்தப்பட்ட ஜெயா ஐ.ஏ.எஸ் எப்படியாவது டெல்லிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகவேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறாரே தவிர… தனக்கு கீழுள்ள அதிகாரிகளின் எல்லைமீறிய ஊழலை கண்டிக்கவும் இல்லை; கண்டுகொள்ளவும் இல்லை. சிலைக்கடத்தல் தொடர்பாக தலைமை ஸ்தபதி முத்தையா, முன்னாள் ஆணையர் தனபால் மற்றும் இணை ஆணையர் ராஜா ஆகியோரைத் தொடர்ந்து சிலைமோசடியில் சிக்கப்போவது தனபால் கூட்டணியிலுள்ள கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, இணை ஆணையர்கள் ஜெயராமன், காவேரி, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள்தான்.

ஆலயங்கள் மற்றும் அதற்கான நிலங்களுக்கு உண்மையாக வாடகை கொடுக்கும் உரிமையாளர்களிடம் வாடகையை முறையாக வசூலிக்காததாலும், நிலங்களின் பெயர் மாற்றங்கள் செய்யாததாலும் 300 கோடிகளுக்குமேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியவர் திருமகள். தலைமை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளை ஒருமையில் பேசி மிகவும் மோசமாக நடத்துவார். ஏற்கனவே, இந்து அறநிலையத்துறையிலிருந்து டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக சென்ற ராஜாராம் ஐ.ஏ.எஸ். மூலம் சிலைக்கடத்தல் மன்னன் ஸ்தபதி முத்தையாவின் உதவியுடன் தனது மகனுக்கு தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி.யிலேயே மிக உயர்ந்த குரூப்-1 பதவியில் ஏ.சி. கமர்ஷியல் டாக்ஸ் வேலையை வாங்கிக்கொடுத்துள்ளார். இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீஸும் விசாரணை நடத்த உள்ளது.

இதுகுறித்து, கூடுதல் ஆணையர் திருமகளிடம் நாம் கேட்டபோது, குற்றச்சாட்டுகளை மறுத்தவர், ""எனது மகன் ஸ்கூல் டாப்பர். பயிற்சி மையத்துக்குப்போகாமல் வீட்டிலிருந்தபடியே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்'' என்றார் விளக்கமாக.

கமிஷனில் டுவென்டி டுவென்டி!

ஊழலில் கூடுதல் ஆணையர்(நிர்வாகம்) திருமகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல… கூடுதல் ஆணையர் (திருப்பணி) கவிதா. திருச்செந்தூர் முருகப் பெருமானின் தங்கவேல் திருட்டு சர்ச்சையில் தற்கொலை செய்துகொண்ட நிர்வாக அதிகாரி சுப்பிரமணியின் மகள் பாரதியை தற்போது திருச்செந்தூர் இணை ஆணையராக நியமித்திருக்கிறார்கள். திருச்செந்தூர் ஆலய மண்டபம் உடைக்கப்பட்டு பல லட்சம் மதிப்புள்ள நகைகள் காணாமல் போயிருக்கின்றன. இதற்கு முறையான கணக்கும் காண்பிக்கப்படவில்லை. இதை கண்டுகொள்ளாமல் இருக்க திருமகளுக்கு 20 சதவீத கமிஷனும் கவிதாவுக்கு 20 சதவீத கமிஷனும் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள். மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகைகள் காணாமல் போய் புதிய நகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இது முருகனுக்குத்தான் வெளிச்சம்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் ஆலயத்தில் பக்தர் ஒருவர் தனது தாயார் நினைவாக கட்டப்பட்ட மண்டபத்தை சிலைத்திருட்டில் சிக்கிய ஸ்தபதி முத்தையா சொன்னதற்காக இரவோடு இரவாக உடைத்தெறிந்தார் கவிதா. சிலை திருடன் முத்தையாவிற்கே சிற்பங்கள் செய்ய ஆர்டர்கள் கொடுக்க...… கவிதாவுக்கு வீடே கட்டிக் கொடுத்திருக்கிறார் முத்தையா. இப்போதுகூட, முத்தையாவின் பினாமிகளுக்குத்தான் சிற்பங்கள் செய்யும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கூடுதல் இயக்குநர் கவிதாவிடம் நாம் கேட்டபோது, ""பொறாமையினாலும் வன்மத்தினாலும் சில விஷமிகளால் என் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் இவை. திருச்செந்தூர் கோயில் நகைகள் காணாமல் போனது குறித்து எந்த புகாரும் வரவில்லை. மேலும், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் முடிவெடுப்பது ஆணையர்தான். எனக்கு இரண்டு வீடுகள்தான் உள்ளன. ஒன்று என் அம்மா வாங்கிக்கொடுத்தது, மற்றொன்று நான் 8 லட்ச ரூபாய் போட்டு வாங்கியது. நான் யாரிடமும் லஞ்சம் வாங்கியதில்லை'' என்று மறுத்தார்.

officers

அமைச்சர் மகனுக்கும் தொடர்பு!

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் மகன் விஜயகுமார் என்கிற விஜய்யும் பல்வேறு முறைகேடுகளை செய்துவருகிறார். நிர்வாக அதிகாரி டிரான்ஸ்ஃபருக்கு 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாய். டெண்டர் மற்றும் காண்ட்ராக்டர்களிடம் 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதம்வரை வசூலிக்கிறார். இதுபோக, அவரது அப்பா(அமைச்சர்) ராமச்சந்திரனுக்கு 3 சதவீதம் என தனியாக வசூல் வேட்டை நடத்துகிறார். இவருக்கு துணையாக இருப்பது கூடுதல் ஆணையர்கள் திருமகள், கவிதா, சுதர்சனம்(விசாரணை) மற்றும் ஜோதிலட்சுமி, காவேரி ஆகியோர்தான். சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற கோயில்களில் வசூல் செய்து கொடுக்கவே பெண் நிர்வாக அதிகாரிகளை நியமித்து வைத்திருக்கிறார் அமைச்சரின் மகன் விஜய். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஏ.சி. ஜோதிலட்சுமிக்கும் கபாலீஸ்வரர் கோயில் ஜே.சி. காவேரிக்கும் ஏற்பட்ட சண்டையால் உண்டியல் திறக்கப்படாமல் (மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நேரத்தில்) போனதால் பக்தர்களால் உண்டியலில் போடப்பட்ட 50 லட்ச ரூபாய் காணிக்கைப்பணம் வீணாய் போனது.

பின்னணியில் ஹெச்.ராஜா!

hraja

தனபால், திருமகள், கவிதா, சுதர்சனம், ஜெயராமன் ஆகியோருக்கு எதிர் டீம் இணை ஆணையர் (தலைமையிடம்) ஹரிப்பிரியா கூட்டணியிலுள்ள இணை ஆணையர்கள் அசோக், லட்சுமணன், பாரதி, தனபால் (நகை சரிபார்ப்பு) உள்ளிட்டவர்கள். இவர்களுக்கு பின்னணியில் இருப்பவர் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. காரணம், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு அந்தந்த நிர்வாகத்திடமே கோயில்கள் ஒப்படைக்கப்படவேண்டும் என்பதுதான் ஹெச்.ராஜாவின் நீண்ட நாள் கோரிக்கை. கோயில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக்கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க.வின் திட்டமும் அதுதான். அதனை, நிறைவேற்றத்தான் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் ஊழலை காரணம் காட்டி துறையையே முழுவதுமாக கலைப்பதற்கான முயற்சியையும் எடுத்து வருகிறார் ஹெச்.ராஜா.

இந்து அறநிலையத்துறையில் இரண்டாக பிரிந்துகிடக்கும் அதிகாரிகளில் ஒரு டீமை கைப்பற்றி அவர்கள் மூலம் ஆவணங்களை பெற்று சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு கொடுப்பதே ஹெச்.ராஜாதான். இவருக்கு வலதுகரமாக இருந்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல்களை பெறுவது இவரது நண்பர் ரமேஷ். இவர், ஆர்.டி.ஐ. போட்டதுமே உள்ளே இருக்கும் இணை ஆணையர் ஹரிப்பிரியாவும் ஆதரவு அதிகாரிகளும் உடனடியாக ஆவணங்களை கொடுத்துவிடுகிறார்கள். இதன்மூலம்தான் தனபால், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு வரிசையாக கைது படலம் தொடர்கிறது. ஆனால், அதற்குள் தனபால் டீமிலுள்ள திருமகளுக்கு சக்தி வாய்ந்த விஜிலென்ஸ் அதிகாரி பதவியையும் கொடுத்ததால் ஹெச்.ராஜா டீம் திணறிவருகிறது.

இந்து அறநிலையத்துறை பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆண்டுக்கு சுமார் 280 கோடி ரூபாய். ஆனால், இத்துறையின் வருமானமோ வெறும் 110 கோடிதான். இதற்கெல்லாம் காரணம் ஊழல் அதிகாரிகள்தான். இன்னும் தோண்டத் தோண்ட ஊழல்களும் அதன் பின்னணிகளும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

-மனோசௌந்தர்