அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனியில், மூலவரான தண்டாயுதபாணி சுவாமி சிலை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
போகர் சித்தர் நவபாசாணங்களால் உருவாக்கிய இந்த சிலையை மறைக்க, ஜெ. ஆட்சியில் வைக்கப்பட்ட ஐம்பொன் சிலை உருவாக்கத்தில் மோசடி நடந்திருப்பதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ஐம்பொன் சிலையில் தங்கம், வெள்ளி சேர்த்ததில் மோசடி நடந்திருப்பதை உறுதிசெய்த தோடு, அறநிலையத்துறை ஸ்தபதி முத்தையா, முன்னாள் கோவில் இணைஆணையர்கள் ராஜா, தனபால் மற்றும் அறநிலையத்துறை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.
ஐம்பொன் சிலை விவகாரத்தோடு நிறுத்தாமல், நவபாசாண சிலையை வெளிநாட்டிற்குக் கடத்த முயற்சி ஏதும் நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணையைத் தொடங்கினார் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல். அதற்குள் அவரது பணிக்காலம் முடிந்தது. தற்போது ஐகோர்ட் உத்தரவால் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றி ருக்கும் பொன்.மாணிக்கவேல் தலைமையில், டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார், ஆய்வாளர்கள் அமுதவள்ளி, தமிழ்ச்செல்வி அடங் கிய டீம் பழனியில் தங்கி ரகசிய விசாரணை மேற்கொண்டது.
""ஐம்பொன் சிலையை மாற்றிவைத்த பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெ. தோற்றுப்போனார். பின்னர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிப்பதற்காக, 2012-ல் நடத்தவேண்டிய கும்பாபிஷேகத்தை, தன் ஆஸ்தான ஜோதிடர் உன்னிகிருஷ்ணனின் ஆலோசனைப்படி, 2006-லேயே நடத்தினார். 24 நாட்கள் கருவறையைப் பூட்டி திருப்பணி நடந்தது. மூலஸ்தானத்தைச் சுற்றி சுரங்கம்போல் தோண்டினார்கள். பெரிய மரப்பெட்டியும் கொண்டு வரப்பட்டது. நவபாசாணத்தைத் திருடும் முயற்சியாக இருக்குமோ என்று எழுந்த எங்களின் சந்தேகம், இன்று உறுதியாகி யுள்ளது. அப்போது இணை ஆணையராக இருந்த சுந்தரம், அறங்காவல் குழுத்தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி ஆகியோரின் மீது சந்தேகம் எழுவதால், அவர்களையும் விசாரிக்க வேண்டும்''’என்று கோரிக்கை விடுக்கிறார் ஞான தண்டா யுதபாணி பக்தர் பேரவையின் அமைப்பாளர் செந்தில்குமார்.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமாரிடம் கேட்ட போது, ""நவபாசாண முருகன் திருமேனியைக் கடத்த ரகசியத்திட்டம் தீட்டியிருப்பது எங்கள் விசாரணையில் அம்பலமானது. அதைத் தீட்டியது ஐம்பொன் சிலை விவகாரத்தில் முதல் குற்றவாளியான ஸ்தபதி முத்தையா தான் என்பதும் தெரிய வந்திருக்கிறது. முத்தையாவின் பின்னணியில் இருந்து யார் இயக்குகிறார்கள் என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரியவரும்''’என்றார்.
""நவபாசாண சிலையைக் கடத்தவே அந்த ஐம்பொன் சிலையைச் செய்தார்கள் என்று ஆரம்பத்திலேயே கூறினேன்; விசாரணையில் அது உறுதியாகி விட்டது'' என்கிறார் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியான பொன்.மாணிக்கவேல் உறுதியுடன்.
-சக்தி