கரிசல்காட்டு நாயகரான’ கிரா.வின் வாழ்க்கைப் புதினம் நிறைவு பெற்றுவிட்டது. 98 வயதைக் கடந்து, தனது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த கி.ராஜநாராயணன் என்னும் கி.ரா, மே 17-ந் தேதி இரவு, தான் வசித்து வந்த புதுவை லாஸ்பேட்டை இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். புதுவை கவர்னர் தமிழிசை, அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்ச-லிசெய்ய, இரங்கல் செய்தி வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டா-ன், கி.ரா.வுக்கு அரசு மரியாதை யுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறி வித்து நடைமுறைப்படுத்தியதோடு, அவருக்கு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப்படும் என்றும் அறிவித்து, துயரில் இருந்த இலக்கிய உலகிற்கு ஆறுதல் தந்திருக்கிறார்.
கடந்த 30 ஆண்டுகளாக கி.ரா.வின் செல்லப் பிள்ளையாக இருந்த கவிஞர் புதுவை இளவேனிலுடன் பேசியபோது, “"ஐயாவைப் போன்ற அன்பான ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. தன் இரு மகன்களோடு என்னையும் இன்னொரு மகனாகத்தான் பாவித்தார். பாபு என்று வாய் நிறைய என்னைக் கூப்பிடுவார். அவரது கதைக்கு ஓவியம் வரைந்த ஆதிமூலத் தின் ரசிகனாகத்தான் அவரை நெருங்கினேன். கடைசியில் அவரது ஒவ்வொரு மணித் துளிக்கும் நான் ரசிகனாகிவிட்டேன். திடீ ரென்று ஒருநாள் 60 ஆயிரம் ரூபாயை என்னிடம் கொடுத்து என் வாழ்க்கையைத் தொடங்கிவைத்தவர் அவர்தான். கடந்த ஆண்டு தனது நூல்களுக்கான உரிமையை, மூன்றாகப் பிரித்து, நான் தடுத்தும் கேட்காமல், அதில் ஒரு பகுதியை என் பெயருக்கும் எழுதி வைத்தார் ஐயா''’என்று உருகியதோடு, கி.ரா.வின் கடைசி நிமிடங்களை விவரிக்கத் தொடங்கினார்...
"வழக்கம்போல் 17-ந் தேதி மாலை அவரைச் சந்திக்கப்போனேன். தினமும் சொல்வது போல், அன்றாடச் செய்திகளை அவருக்குச் சொன்னேன். மகிழ்ச்சியாகத் தான் கேட்டுக் கொண்டு இருந்தார். பிறகு, என்னைப் பார்த்து, நான் தூங்கியதும் நீ போ... என்றார். சரி என்றேன். பிறகு பால் கேட்டார். ஆற்றிக்கொடுத்து விட்டு, அவருக்கு வழக்கமான மருந்துகளையும் கொடுத்தேன். என்ன நினைத்தாரோ, திடீ ரென்று என் கையைப் பிடித்துக்கொண்டு.. நீ மனுஷன்யா... என்றார். அதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தை. அடுத்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு லேசாக மூச்சிரைத்தது. நான் ஓடிப்போய், இன்னொரு அறையில் இருந்த அவரது இளையமகன் பிரபாகரையும், பக்கத்துத் தெருவில் இருந்த மூத்தமகன் திவாகரையும் அழைத்து வந்தேன். இரவு 11 மணியளவில் எங்கள் கண் எதிரிலேயே அவரது சுவாசம் மெதுவாக நின்றுவிட்டது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துப்போனோம். பிறகு கனிமொழி எம்.பி.க்கும், நடிகர் சிவகுமா ருக்கும் முதலில் தகவலைத் தெரிவித்தேன். ஒரே நொடியில், வட்டார இலக்கிய உலகம் இருண்டுவிட்டது''’என்றார் கலக்கமாய்.
வட்டார நடை எழுத்துக்கு இலக்கியத் தகுதியை ஏற்படுத்தியவர் கி.ரா. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது அன்பு மனைவி கணவதி அம்மாவை இழந்த கி.ரா, அந்தத் துயரத்தைத் தாங்க முடியாதவராக அப்போதே உயிர் ஒடுங்கிவிட்டார் என் கிறார்கள். 1923 செப்டம்பர் 16-ல் கோவில் பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் கி.ரா. அவரது முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் என்பதாகும். தனது பெயரைப் போலவே நீண்ட புகழைப் பெற்ற கி.ரா., வைணவ குடும்பத்தில் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் ஆகியோரின் புதல்வராகப் பிறந்தவர். இளம்வயதில் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட கி.ரா., அதில் தீவிர செயற்பாட்டாளராகவும் இருந்தவர். அவரால் அவரது இடைச் செவல் கிராமமே சிவப்பு வண்ணத்துக்கு மாறியதாம். 40 வயதில் எழுதத் தொடங்கிய கி.ரா, பின்னர், தீவிரப் படைப்பாளியாக மாறிவிட்டார்.
கி.ரா. மீது பேரன்புகொண்டவர் கவிஞர் மீரா. அவர்தான் கி.ரா. வின் ’வேட்டி’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டு ‘இது தமிழுக்குப் புது எழுத்து என்று அவரை உற்சாகப்படுத்தினாராம். கி.ரா.வின் கடைசி நூலான ’மிச்சக் கதைகளை, மீராவின் மகன் கதிர் நடத்தும் அன்னம் பதிப்பகமே கடந்த ஜனவரியில், மிக நேர்த்தியாக வெளியிட்டது.
கோபல்ல கிராமம், கிடை, பிஞ்சுகள், கதவு, வேட்டி, கரிசல் கதைகள், கிராமியக் கதைகள். கரிசல் காட்டுக் கடுதாசி என அவர் எழுதிக்குவித்த நூல்கள், இலக்கிய உலகில் தனித்தடம் பதித்தன. ஏழாம் வகுப்பைக் கூடத் தாண்டாத கி.ரா, புதுவைப் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக அமர்ந்தார் என்றால், அது அவர் உருவாக்கிய கரிசல் வட்டார அகராதியும், நாட்டுப்புற இலக்கியங்களும் செய்த வித்தை. அவரது ’கோபல்லபுரத்து மக்கள்,’ 91-ல் அவருக்கு சாகித்திய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தது. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் கி.ரா.பெற்றிருக்கிறார். மகன் பிரபாகரனும் அப்பாவைப் போலவே வட்டார இலக்கியக் கதைகளை எழுதிவருகிறார்.
புதுவை அரசு, கி.ரா.வின் உடலை அரசு மரியாதையோடு 18-ந் தேதி மதியம், தமிழகத்துக்கு அனுப்பிவைக்க, இடைச்செவல் கிராமத்தில் அவர், பொதுமக்களின் அஞ்ச-யை எதிர்கொண்டார். 19-ந் தேதி பிற்பகல் தமிழக அரசின் மரியாதையோடு அவரது இறுதிச் சடங்கு நடந்தது.
இதுவரை இல்லாத வகையில் மாநில அரசு மரியாதையைப் பெற்று, தனது மரணத்தையும் வரலாற்றுச் செய்தியாக்கிவிட்டு விடைபெற்றிருக்கிறார் கி.ரா.