மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்புவதாக சபதமேற்று, மோடியும், அமித்ஷாவும் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தார்கள். ஆனால் தேர்தல் முடிவோ, மம்தா பானர்ஜியை சற்றும் அசைக்க முடியாது என்பதுபோல வலுவான மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே மம்தா அரசுக்கு தொல்லைகளை ஆரம்பித்துவிட்டது மோடி அரசு.
இந்த கடுப்பில், கொல்கத்தாவில் புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள தாமதமாக வந்த மம்தா பானர்ஜி, பிரதமரிடம் புயல் சேத அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு உடனே கிளம்பி விட்டார். பிரதமரை மம்தா அவமதித்துவிட்டதாக இப்பிரச் சனை பெரிதாகப் பேசப்பட, மம்தாவுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாயை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
டெல்லியில் உள்ள பணியாளர் பயிற்சித்துறை அலுவலகத்திற்கு அவரை அனுப்புமாறு மேற்குவங்க அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தலைமை செயலாளரை விடுவிக்க முடியாது என்று பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதமெழுத, தற்போது இந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் அணுகு முறை குறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் கேட்டபோது, "ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைப்பதற்கென்று விதிமுறைகள் இருக்கின்றன. இதற்கு "ஆல் இண்டியா சர்வீஸ் ரூல்ஸ்' என்று பெயர். இந்த விதிமுறைகளில் 6.1 (ஆ) என்ற உட்பிரிவில், ஒரு ஐ.ஏ.எஸ். அலுவலர், மாநில அரசுப் பணியிலிருந்து மத்தியஅரசுப் பணிக்குச் செல்வதாக இருந்தால், அந்த அலுவலரை அனுப்பி வைப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் தரவேண்டும். அதேபோல மத்திய அரசு பணியிலிருந்து மாநில அரசு பணிக்கு விடுவிப்பதற்கு, மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும். அதன்பின்னரே பணிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதில் கூடுதலாக ஒரு புரவிஷன், மாநில அரசு ஒப்புதல் தராதபட்சத்திலும்கூட மத்திய அரசு, அந்த ஐ.ஏ.எஸ். அலுவலரை தனது பணிக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால், இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நடை முறையானது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முறைப் படியான வேண்டுகோள்களின்படி நடைபெற வேண்டும். மாநில அரசின் பணியிலிருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை, என்ன காரணத்துக்காக மத்திய அரசு எடுத்துக்கொள்ள விரும்புகிறது என்பதை முன்கூட்டியே மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு குறிப்பிட்டுள்ள காரணத்தை, மாநில அரசானது, சரி என்று ஏற்கலாம் அல்லது நிராகரிக்கவும் செய்யலாம்.
தற்போது மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடைப்பட்ட பிரச்சனையில், மாநில அரசிடம் மத்திய அரசு, முறைப்படி கேட்கவேயில்லை. அதுமட்டுமின்றி, மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளர் பணி ஓய்வு பெறவுள்ள சூழலில், கொரோனா பரவல் தடுப்புப்பணிகளில் தொடர்ந்து கவனம்செலுத்த வேண்டிய கட்டாயத்தால், இவரது பதவிக்காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு அதிகரிக்க வேண்டுமென்று மேற்கு வங்க அரசு, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் தந்து மூன்றுமாத பணி நீட்டிப்பும் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணி நீட்டிப்பானது, மேற்கு வங்க தலைமை செயலாளராகப் பணிபுரிவதற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, கடந்த மே 24-ம் தேதி பணி நீட்டிப்பு அனுமதி வழங்கப்பட்ட சூழலில், திடீரென, மத்தியஅரசு பணிக்கு இவரை அழைத்துக்கொள்கிறோம் என்று மத்திய அரசு அழைப்பது நியாயமற்றதாகும். இதில், "ஆல் இண்டியா சர்வீஸ் ரூல்ஸ்' விதிமுறைகளும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், "நீங்களாகவே தன்னிச்சையாக முடிவெடுத்து, எங்கள் தலைமை செயலாளரை மத்திய அரசுப்பணிக்கு அழைப்பது முறையான செயல் அல்ல. எனவே எங்களால் அவரை விடுவிக்க முடியாது'' என்று கூறியுள்ளார்.
இப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடைப்பட்ட ஈகோ பிரச்சனையால், மேற்கு வங்க தலைமை செயலாளரால் மத்திய அரசின் உத்தரவை ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்மீது எந்த தவறும் இல்லை. மத்திய அரசு அழைத்திருந்தபோதும், மாநில அரசு ஒப்புதல் தராமல் இந்தப் பணியிலிருந்து வெளியேறுவது சாத்தியமில்லை. எனவே இந்த அலுவலர்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வாய்ப்பில்லை'' என்றார்.
மேற்குவங்க தலைமை செயலாளரின் பணிக்காலம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், தற்போது தனது அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக மூன்று ஆண்டுகள் பணியாற்றுவாரென்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
-தெ.சு.கவுதமன்