தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அடையார், கூவம் நீரின் தரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அப்போது கிடைத்த ரிசல்ட் அதிர்ச்சி ரகம். கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை 12 வெவ்வெறு இடங்களில் நீர் மாதிரி எடுத்து ஆய்வகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நீரில் அம்மோனியம் நைட்ரஜன் மற்றும் கன உலோகங்கள் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. மொத்தத்தில் அந்த நீர் மனிதனுக்கும் நீர்வாழ் உயிரிகளுக்கும் தீங்குவிளைவிப்பது என ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நீரின் தரம் மேம்பட, இந்த ஆற்றில் விடப்படும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுவதும், வேறுசில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென சிபாரிசு செய்துள்ளது.
ஆறுகளோட நிலையை நினைச்சா மனசு ஆறமாட்டேங்குதே!
2020-ஆம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் பிரிவினருக்கான நீட் தேர்வு, கொரோனா காரணமாக 2021 செப்டம்பரில்தான் நடத்தப்பட்டது. ஏற்கெனவே ஓராண்டு தாமதமாகியதால் விரைவில் கவுன்சிலிங் நடக்குமென மருத்துவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் இருப்பதைக் காரணம் காட்டி அரசு தாதமப்படுத்தியபடி வந்தது. இதற்கெதி ராக மருத்துவர்கள் டெல்லியில் போராட்டத்தில் இறங்க, அவர்கள் மீது தடியடி நடத்தியது போலீஸ். விவசாயிகள் போராட்டம் நடந்தபோது, "காசு வாங்கிக்கொண்டு நடந்த போராட்டம்' என்ற தொனியில் சில மருத்துவர்கள் ட்வீட்டுகள் பதிவிட்டிருந்தனர். அவர்களே தற்போது, உரிமைக்காக போராடினால் தேசத்துக்கு எதி ரானவர்கள் என விமர்சிப்பதா எனப் பதிவிட இந்த இரண்டு கமெண்டு களையும் ஒன்றாகத் தேடியெடுத்து பதிவிட்டு வரு கிறார்கள் வலைவாசி கள்.
அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி! நமக்கு வந்தா ரத்தம்!
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழ்நாடு 17% குறைவாக கடன் வாங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது. அதாவது 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தமிழகம் 52,000 கோடி கடன் வாங்கியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் தமிழ்நாடு 63,000 கோடி கடன் வாங்கியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்த நிலையில் தமிழ்நாட்டின் வருவாயில் முன்னேற்றம் தென்படத் தொடங்கியது. தமிழகத்தின் மொத்த வருவாய் கிட்டத்தட்ட 22% வரை ஏறியது. ஆனால் இந்த நிதியாண்டு முடிய இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அது இந்த வருவாய் வரவைத் தடுத்து கடன் அதிகரிக்கக் காரணமாகலாம் என பொருளாதார நிபுணர்கள் யூகிக்கின்றனர்.
சாண் ஏறினா முழம் வழுக்கும்கிறது இதுதானோ?
இது மத்தியப்பிரதேச விவகாரம். ‘"தற்கால சவால்களைச் சந்திப்பதில் ஊடகத்தின் பங்கு' என்ற தலைப்பில் கருத்தரங்கத்தில் பேச பா.ஜ.க. எம்.பி. ஜனார்த்தனன் மிஸ்ராவை அழைத்திருந்தார்கள். மைக்கைப் பிடித்தார் எம்.பி. "என்னிடம் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான ஊழல் புகார்கள் அடிக்கடி வருகிறது. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 15 லட்சம் வேண்டும். செலவிடும் 15 லட்சத்துக்கு மேல் வாங்கினால் மட்டும்தான் அது ஊழல்''’என பேசியிருக்கிறார். இந்த காணொலி பரபரப்பாக பரவ... "இதுதான் பா.ஜ.க.வின் ஊழல் ஒழிப்பு லட்சணமா?' என எதிர்க்கட்சிகள் பிலுபிலுவென பிடித்து உலுக்கியிருக்கிறார்கள்.
ஊழலுக்கு ஒரு வரையறை செய்யலாம்னு நினைச்சது குத்தமாய்யா!
ஒவ்வொரு நாட்டிலும் புத்தாண்டு பிறந்தால் கேக் வெட்டுவார்கள், பட்டாசு வெடிப்பார்கள், குடிப்பார்கள், கூத்தாடுவார்கள். பிரான்சு நாட்டு இளைஞர்கள் மட்டும் விநோதமாய் புத்தாண்டை வரவேற்கிறார்கள். தேடித் தேடிச்சென்று கார்களுக்குத் தீ வைக்கிறார்கள். அதிலும் ஸ்ட்ராஸ்பேர்க் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்தான் இந்தக் காரியத்தில் இறங்குகிறார்களாம். 2019-ல் 1300-க்கும் அதிகமான கார்களை எரித்திருந்ததால் காவல்துறை உஷாராக இருந்ததாம், இருந்தும் இம்முறை 874 கார்களை தீவைத்துக் கொளுத்தியிருக்கிறார்கள் இளைஞர்கள். "லூஸாப்பா நீங்க' என்று தலையிலடித்துக் கொள்கிறது பிரான்சு அரசு.
காசைக் கரியாக்கிறதைக் கேள்விப்பட்டிருக் கோம்...இவங்க காரையே கரியாக்கு றாங்களே!
அருணாசலபிரதேசம், நேபாள், கால்வான் பள்ளத்தாக்கு என பல பகுதிகளில் எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் நீடித்துவருகின்றன. சர்ச்சைக்குரிய இடங்களில் குடியிருப்புகளைக் கட்டிவரும் சீனா, தற்போது அருணாசலப் பிரதேசத்தை "தெற்கு திபெத்' என தங்களுக்குரிய பிரதேசமாக சொல்லிக் கொள்வதோடு வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளை சீன மொழியில் குறிக்க ஆரம்பித்திருக்கிறது. முன்பே ஒருமுறை இதே யுக்தியை சீனா கையாண்டிருந்தாலும், இந்தமுறை அதிக பகுதி களுக்கு சீன பெயரை மாற்றியிருக்கிறது. அருணாச் சலப் பிரதேசத்தின் 90 ஆயிரம் கிலோமீட்டர் களுக்கு இந்தமுறை சீனா உரிமை கொண்டாட, மோடி அரசோ திக்குமுக்காடி வருகிறது.
நேரு மட்டும் அன்னைக்கே சீனாவைக் குண்டுபோட்டு அழிச்சிருந்தா இன்னைக்கு இந்தப் பிரச்சனை வந்திருக்குமா?
-நாடோடி