தமிழை தமிழர்கள் காப்பாற்றுகிறார்களோ… இல்லையோ வெளிநாட்டுக்காரர்கள் காப்பாற்றுகிறார்கள். ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் சார்பில் தமிலெக்ஸ் எனும் செவ்வியல் பேரகராதி ஒன்றை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. லெக்சிகன் என்றால் பேரகராதி என்று பொருள். தமிழ்ப் பேரகராதி எனும் பொருளில் தமிலெக்ஸ் உருவாக உள்ளது. இதன் பொறுப்பு ஜெர்மனி ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆராய்ச்சி மைய ஓலைச்சுவடிப் பிரிவின் பேராசிரியர் ஈவா வில்டன் என்பவரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஈவா ஏப்ரல் 22-ஆல் வெளியிட்டார். “இத்திட்டத்தில் சங்க இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் முழுமையான சொல் அகராதி அடங்கும். இது 24 ஆண்டு கால திட்டம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். அச்சு வடிவத்திலும், இணையப் பயன்பாட்டுக்காக டிஜிட்டல் வடிவிலும் இந்த அகராதி வெளியாகுமாம். தமிழன்னை மனம்குளிரும் செய்தியாச்சே!
தூத்துக்குடியைச் சேர்ந்த வாசுகி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதன் சுருக்கம்: 2013-ல் எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. கணவர் கூலித்தொழிலாளி என்பதால் அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டேன். இந்நிலையில் 2014-ல் மீண்டும் கர்ப்பமானேன். மருத்துவர்கள் எனக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால்தான் கர்ப்பமானேன். போதிய வருமானமில்லாத என் நிலையைக் கருத்தில்கொண்டு நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் நிவாரணம் தரவேண்டும் எனக் கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தியும், குடும்பக் கட்டுப்பாட்டைச் சரியாகச் செய்யாது போனால் அதன் நோக்கம் வீணாகும். மனுதாரரின் பொருளாதார, சமுதாய பின்புலத்தைக் கருத்தில்கொண்டு ரூ.3 லட்சம் உடனடி இழப்பீடும், 3-வது குழந்தை 21 வயதாகும் வரை ரூ.10,000 உதவித் தொகையும் வழங்கவேண்டும் என அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். சபாஷ்... சரியான தீர்ப்பு!
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங், மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகாரெழுந்தது. இந்தியாவுக்கு சர்வதேச போட்டி களில் பதக்கம்வென்ற முன்னணி வீராங்கனைகள் புகார் செய்தபிறகும் விஷயத்தை ஆறப்போடும் நடவடிக்கைகளையே இந்தியஅரசு மேற்கொண்டுவருவதாகக் கூறி, மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர் மல்யுத்த வீரர்கள். உச்சநீதி மன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தின் தலைவர் பி.டி. உஷா, “"மல்யுத்த வீரர்கள் தெருவில் அமர்ந்து போராட்டம் நடத்துவது ஒழுக்கமற்ற செயல். இது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும்''”என்றுள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, “"மல்யுத்த வீரர்களின் போராட்டம் நாட்டின் மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது என நினைக்கிறது இந்திய ஒலிம்பிக் சங்கம். சில வருடங்களுக்கு முன்னால் இதே பி.டி.உஷா தனது அகாடமிக்கு சில ரவுடிகளால் ஏற்பட்ட தொந்தரவு குறித்து கண்ணீர்மல்க பேட்டியளித் தார். அது நாட்டின் மதிப்பைச் சீர்குலைக்க வில்லையா?''” எனக் கேட்டுள் ளார். நீதிக்கான மல்யுத்தம்!
ஒரு திரைப்பட விவகாரம் கேரள மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுதிப்தோ சென் என்பவர் எழுதி இயக்கியுள்ள படம் "தி கேரளா ஸ்டோரி'. இந்தப் படத்துக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவரான சதீசன் திரையிட அனுமதி தரக்கூடாது என சட்டமன்றத்தில் குரல்கொடுத்துள்ளார். “கேரள மாநிலத்தின் இமேஜை சர்வதேச அளவில் கெடுக்கத் திட்டமிட்டுள்ளது ஒரு கும்பல். கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் இஸ்லாமுக்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக மாறியுள்ளதாக இந்தப் படத்தின் கதைப் போக்கு அமைந்துள்ளது. இது கருத்துச் சுதந்திரம் பற்றிய விஷயமல்ல… சிறுபான்மைச் சமூகத்தின் மீது அவதூறைச் சுமத்தி சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் சங் பரிவாரின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முயற்சி” என்றதோடு, இதனை கேரளா ஒன்றிணைந்து எதிர்க்கவேண்டுமெனத் தெரிவித்தார். “சினிமா என்கிற ஊடகத்தின் மூலம், மாநிலத்தின் இமேஜை கெடுத்து, சமூகத்தில் வகுப்புவாத பிளவை ஏற்படுத்தும் முயற்சி” என இந்த விவகாரத்தில் டைஃபி கருத்துத் தெரிவித்துள்ளது. காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் இந்த விஷயத்தில் கைகோர்த்துள்ளன. வருத்தப்படாத வதந்திக் கழகமா இருக்கே!
-நாடோடி