உலகின் மிக உயர்ந்த சிகரம் என்ற பெருமை எவரெஸ்ட்டுக்கு உண்டு. இந்த எவரெஸ்ட் சிகரத்தில் மிகச் சிலரே ஏறி சாதனை படைத்திருக்கிறார்கள். மலையேற்றத்தில் சாதனைகளை மேற்கொள்ளும் எவருக்கும் எவரெஸ்ட் ஏறவேண்டுமென்ற கனவு இருக்கும். ஆனால் எவரெஸ்ட் ஏறுவது சாதாரணமான விஷயமல்ல. குறைந்தது 5,500 மீட்டர் உயரமுள்ள மலை ஏறிய அனுபவம் இருக்கவேண்டும். இத்தனை இக்கட்டுள்ள ஒரு சாதனைப் பயணத்தை தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொடங்கியிருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்விதான் அவர். இதற்காக லடாக்கின் 6,496 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏறி சாதனை செய்திருக்கிறார். மேலும் மலையேற்றம் சாதாரணமான ஒன்றல்ல,…அதிகம் செலவுபிடிக்கும் விஷயம். முத்தமிழ்ச்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற கிட்டத்தட்ட 45 லட்சம் செலவாகும் எனத் தெரிந்ததால் அதைத் திரட்டிவருகையில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ரூ.10 லட்சம் கொடுத்து உதவியிருக்கிறார். எவரெஸ்ட்டை ஏறிமுடிக்க குறைந்தது 2 மாதம் ஆகுமாம். சாதனையோடு திரும்புவேன் என்று உறுதிசொல்லிக் கிளம்பியிருக்கிறார். வானமே வசப்படும்போது எவரெஸ்ட் வசப்படாதா!
பெண்கள் உயர்கல்வி படிக்கத் தடை, வகுப்பில் ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கத் தடை, பெரும்பாலான வேலைவாய்ப்புகளில் பெண்களுக்குத் தடை, உடற் பயிற்சிக் கூடங்களுக்கு, அழகு நிலையங்களுக்குச் செல்லத் தடை பெண்கள் மீதான ஆப்கானிய அரசின் தடை பட்டியல் நீளமானது. அதே ஆப்கானில் பெண்கள் நடத்தும் வானொலி நிலையம் இயங்கிவருகிறது. ஆப்கானிஸ் தானின் வடகிழக்கு மாகாண மான பதாக்சன் மாகாணத்தில் இயங்கிவருகிறது சதாய் பனோவான் வானொலி நிலையம். இதன் பொருள், பெண்களில் குரல் என்பதாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயங்கத் தொடங்கிய இந்த வானொலி நிலையத்தின் எட்டு உறுப்பினர்களில் ஆறு பேர் பெண்கள். இந்த வானொலி நிலையத்தை ரமலான் மாதத்தில் இசையை ஒலிபரப்பியதாகக் குற்றம்சொல்லி ஒரு வாரத்துக்குப் பூட்டியது அரசு. இதையடுத்து வானொலியில் எந்தவிதமான இசையையும் ஒலிபரப்பமாட்டோம் என உறுதியளித்ததையடுத்து அதன் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆப்கானில் இசைக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக எந்தச் சட்டமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்!
அட்டப்பாடி மதுவை மறந்திருக்கமாட்டோம். பழங்குடியின இளைஞரான மது அட்டப்பாடியிலுள்ள சிந்தேகியில் மல்லன்- மல்லி தம்பதியரின் மகன். 2018 பிப்ரவரி 22 அன்று பலசரக்குக்கடை ஒன்றில் அரிசி திருடியதாக எழுந்த சந்தேகத்தில் கைகளைக் கட்டிவைத்து பலரும் அவரைத் தாக்கினர். இதில் அவர் இறந்துபோனார். அவர் தாக்கப்பட்ட நிகழ்வு காணொலியாகப் பரவியதையடுத்து உலக அளவில் கவனம்பெற்றது. இந்த வழக்கில் 24 பேர் பிறழ்சாட்சியமாக மாறினர். இதனை விசாரித்த மன்னார்க்காடு பட்டியலின, பழங்குடியின சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.எம்.ரதீஷ்குமார் ஏப்ரல் 4, 5-ஆம் தேதிகளில் தீர்ப்பளித்தார். முதல் குற்றவாளி ஹூசைன் உட்பட 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். ஹூசைன் உட்பட மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சத்து பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வழக்கு நடைபெற்ற காலத்தில் சிறையில் இருந்ததைக் காரணம்காட்டி அப்துல்கரீம், அனீஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். மதுவின் வழக்கே, கேரளாவில் நடந்த கடைசி கும்பல் தாக்குதலாக இருக்கட்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அரிசிக்கு விலை உயிரா?
மத்தியப்பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில், 2014-ல் மர்மமான முறையில் 14 வயது காஞ்சன் உய்க் எனும் பெண் காணாமல் போனாள். ஏழு வருடமாக வழக்கை நடத்திய போலீஸ், 2021-ல் காஞ்சனின் தந்தையும் சகோதரனும் சேர்ந்து அவளைக் கொலைசெய்து புதைத்ததாக அறிவித்தது. அதோடு, இரண்டு பேரையும் கைதுசெய்து சிறையிலடைத்தது. தந்தையும் மகனும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறி சிறையில் அடைத்தது. இருவரும் அடையாளம் காட்டிய இடத்தில் ஒரு எலும்புக்கூடு தோண்டி யெடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரி சோதனைக்கு அனுப்பப்பட் டது. இதுவரை அதன் ரிசல்ட் வரவில்லை. இந்தநிலையில் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட காஞ்சன் உய்க் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு வந்து, “"நான்தான் காஞ்சன். என் தந்தையையும் சகோதரனையும் விடுவியுங்கள்'' என்றிருக்கிறார். இத்தனை நாள் எங்கே போனார் என்ற கேள்விக்கு, “"வீட்டில் கருத்து வேறுபாட்டால் கோபித்துக்கொண்டு போய்விட்டேன். போன இடத்தில் திருமணமாகிவிட்டது. இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். தந்தையும் சகோதரனும் சிறையிலிருப்பது தெரிந்து விடுவிக்க வந்தேன்''” என்றிருக்கிறார். இருந் தாலும், போலீஸ் தோண்டியெடுக் கப்பட்ட எலும்புக்கூட்டின் டி.என்.ஏ. ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறது.
அடேங்கப்பா… சினிமாவா எடுக்கலாமோ!
-நாடோடி