பா.ஜ.க.வினர் எதற்கெடுத்தாலும் குஜராத் மாடல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வார்கள். அந்த குஜராத் மாடலின் குட்டு ஏற்கெனவே பலமுறை உடைந்தாலும், மீண்டும் ஒரு முறை உடைந்திருக்கிறது தேசிய அளவில். மாநில கல்வி நிலவரம் குறித்து குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேள்வியெழுப்பினர். அப்போது குஜராத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 29,122 ஆசிரியர் பணியிடங்களும், 3,522 பிரின்சிபல் பணியிடங்களும் காலியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன், ஆரம்பக் கல்வி நிலையங்களைச் சேர்ந்த 17,500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குஜராத்தின் 33 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் 9, 10-ஆம் வகுப்புகளும், ஆங்கிலக் கல்வி வழி வகுப்புகளும் இல்லை. அரசு நடத்தும் ஆங்கில வழி வகுப்புகள், 31 மாவட்டங்களில் 11, 12-ஆம் வகுப்புகளுக்கு மொத்தத்திலேயே இல்லையாம். அதேபோல துவாரகா, ஜாம் நகர் மாவட்டங்களின் பெரும்பாலான பள்ளிகளில் கணினி லேப்புகளோ, அறிவியல் ஆய்வகங்களோ இல்லையாம். மாணவர்களின் எதிர் காலத்தோடு விளையாடுவதாக காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. மீது குற்றம் சாட்டியுள்ளது. ரொம்ப பலவீனமான மாடலா இருக்குதே!
கூழுக்கும் ஆசை,… மீசைக்கும் ஆசை என்றொரு பழமொழி உண்டு. சீனாவும் இப்போது அந்த நிலையில்தான் இருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருக்கும் சீனா, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை ஒரு காலத்தில் மேற்கொண்டது. இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் பெற்றால் அரசு சலுகைகள் கிடையாது. சிறப்பு வரிவிதிப்பு மூலம் மெல்ல மெல்ல அது மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்நிலையில், சமீபமாக சீனாவில் பிறப்பு விகிதத்தைவிட இறப்பு விகிதம் அதிகரித்துவருகிறது. இது அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. என்னதான் அரசு மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள 2021-ல் அனுமதியளித்தாலும், மக்கள் கூடுதலாக குழந்தைகள் பெற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். இதனால் தொழிற்கல்வி பயிலும் மாணவ- மாணவிகள், இந்த இலையுதிர்காலத்தில் காதல் உணர்வை வளர்த்துக்கொள்ள ஒரு வார விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஜியாமென் பல்கலைக்கழகம் உட்பட 9 தொழிற்கல்வி கல்லூரிகள் இந்த விடுமுறையை அறிவித் திருக்கின்றன. என்னது… காதலிக்க ஒரு வாரம் லீவா!
கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமுள்ள 66.9 கோடி பயனாளர்களின் தரவுகள் திருடு போயுள்ளன. இந்த திருட்டு தொடர்பாக வினய் பரத்வாஜ் என்பவரை ஹைதராபாத் போலீஸ் கைதுசெய்துள்ளது. கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களின் விவரங்கள், ஜி.எஸ்.டி. செலுத்தும் நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கியொன்று, ஒரு டிஜிட்டல் பேமெண்ட செயலி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சாலைப் போக்குவரத்து கார்ப்பரேஷன், பிரபல இ-வணிக தளங்கள், சமூக ஊடக தளங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் இவற்றின் பயனாளர் தரவுகள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நபர், தரவுகளைச் சேகரித்து விற்பதற்கு முயற்சி செய்கையில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி, உங்களது விவரம் இந்த நபரிடம் எப்படிச் சென்றது என கேள்வியெழுப்பியுள்ளது. நமது தரவுகளுக்கு இந்தியச் சூழலில் எந்தப் பாதுகாப்பும் கிடையாதா என்பது போன்ற கேள்விகளை இந்நிகழ்வு எழுப்பியுள்ளது. கூடவே, இந்தத் திருட்டில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் தொடர்பா என்ற கேள்வியையும். டேட்டா வெச்சிருக்கிறவன்தான் இனி டாட்டா…. பிர்லா!
முகநூலில் ப்ரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை விமர்சித்ததற்காக, அந்நாட்டுக் காவல்துறை 50 வயது பெண்ணைக் கைது செய்துள்ளது. இம்மானுவேல் மாக்ரோன் இரண்டாவது முறையாக ப்ரெஞ்சு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் சமீபத்தில் அறிமுகம் செய்த ஓய்வூதிய மசோதா பெரிய அளவில் எதிர்ப்புகளைக் கிளப்பியது. இந்த மசோதாவுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் நாட்டுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். முக்கியமாக சுகாதாரப் பணியாளர்கள், தங்களது பணிகளைக் கைவிட்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் நாடே தத்தளித்தது. இதையடுத்து தன் முகநூல் பக்கத்தில் அலங்காரக் கையெழுத்தில் மாக்ரோனை, குப்பை என விமர்சித்து எழுதினார் 50 வயது பெண்மணி. சமூக ஊடகத்தில் அதிபரை இழிவுபடுத்தியதாகக் கூறி அவர்மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸ் அவரைக் கைதுசெய்ய வர, “"அது ஒரு ஜோக். இதற்காக கைதுசெய்வார்களா… கைதுசெய்தாக வேண்டிய முதல் பொதுக் குற்றவாளி நான்தானா? இது முற்றிலும் நியாயமற்றது. சமூக ஆர்வலர்கள் அச்சுறுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துவருகிறோம்''’என அவர் விமர்சித்துள்ளார். அதிபர்ன்னாலே அதிகாரம்தானே!
-நாடோடி