அமெரிக்காவின் உத்தா மாகாணம், டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவர்கள் கணக்குத் தொடங்க அவர்களது பெற்றோரின் சம்மதத்தைப் பெறவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளது. ஏற்கெனவே கலிபோர்னியாவில் சிறுவயதினர் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடையுள்ளது. ஆனாலும் உத்தா விரிவான சட்டம் இயற்றியுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம்தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
சமூக ஊடகங் களுக்கு அடிமையாதல், சமூக ஊடகங்கள் சிறு வயதினரின் தனிப்பட்ட விவரங்களைத் திருடுதல், சுரண்டல் போன்றவற்றை மனதில்கொண்டு இந்த சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் வாலிப வயதினரின் மனநலத்துக் குத் தீங்கு விளைவிப்பதை பார்த்துக்கொண்டி ருக்க முடியாதென அம்மாநில ஆளுநர் தெரிவித் துள்ளார். இந்த மசோதா, சமூக ஊடகங்களில் குழந்தையின் கணக்கைக் கையாள பெற்றோ ருக்கு முழுக் கட்டுப்பாடு, நள்ளிரவுக்கு மேல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளதாம். ஆனால் தொழில்நுட்ப நிறுவனங்கள், சமூக உரிமைக் குழுக்கள் போன்றவை, இத்தகைய சட்டங் கள் ஆன்லைன் ஆதாரங்கள் பதின்ம வய தினருக்குக் கிடைப்பதைத் தடைசெய்வ தோடு, நீண்டகால நோக்கில் பேச்சு சுதந் திரத்துக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர். அப்படியே இந்தியாவுலயும் கொண்டுவாங்க!
விரைவில் சட்டமன்றத் தேர் தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாட காவில், தேர்தல் கணக்கை மனதில் கொண்டு இதுவரை இதர பிற்பட்ட வகுப் பினர் பிரிவில் வழங்கப் பட்டுவந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்துள்ளது. இந்துத்துவ கட்சி என பெயரெடுத்துள்ள பா.ஜ.க.வுக்கு முஸ்லிம் கள் எப்படியும் ஓட்டுப் போடப் போவதில்லையென்பதால், கர்நாட காவின் செல்வாக்கான சமூகத்தினரான லிங்காயத்துகளுக்கும், ஒக்கலிகவினருக் கும் அந்த 4 சதவிகிதத்தை இரண் டிரண்டு சதவிகிதமாகப் பிரித்தளித் துள்ளது. இதன்படி லிங்காயத்துகள் பெற்றுவந்த 4 சதவிகித இடஒதுக்கீடு 6 ஆகவும், ஒக்கலிகர்கள் பெற்றுவந்த 5 சதவிகித இட ஒதுக் கீடு 7 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. முஸ்லிம்களின் கையிலிருந்ததைப் பிடுங்கிக்கொண்டு வெறுங்கையுடன் விட்டிருக்கிறது. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 1995-ல் தேவேகௌடா முதல்வராக இருந்தபோது அளிக்கப்பட்டது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பு என முஸ்லிம்களின் கோபத்தைச் சம்பாதித்த பொம்மை, இடஒதுக்கீட்டிலும் கைவைத் திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பட்டியலினத்தவருக் கான இடஒதுக்கீட்டை 2 சதவிகிதம் அதிகரித்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 4 சதவிகிதம் அதிகரித்து 7% உயர்த்தியிருக்கிறார். இது வியூகமா... விஷமமா?
பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது அதிவீரராமபாண்டியரின் வெற்றிவேற்கை செய்யுள். வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் அஜித். இவர் காரம்பாக்கத்திலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவர். ஏரோஸ்பேஸ் பொறியியல் பாடம் படித்துவந்த இவரின் குடும்ப வறுமை காரணமாக படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டது. தேங்காய் நார் மூலம் கயிறு திரிக்கும் பெற்றோரால் படிப்புக் கட்டணத்தைச் செலுத்தமுடியாத நிலை. அஜித்துக்கோ, படிப்பை விட மனமில்லை. பார்த்தார்,… தினசரி லட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் மெரினா பீச்சில் வந்து, “படிப்புக்கு உதவிசெய்யுங்கள்” எனும் பதாகையை வைத்து, வயலின் வாசிக்க ஆரம்பித்தார். பீச்சுக்கு வந்தவர்கள் இதைக் கவனித்துவிட்டு அவருக்கு உதவ ஆரம்பித்தனர். விஷயம் காவல்துறையின் கவனத்துக்குப் போனதும் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், இதர காவலர்கள் வந்து விசாரித்தனர். பின் அரசின் கவனத்துக்கு அஜித்தின் நிலமையை எடுத்துப்போவதாகவும், பொது இடங்களில் இதுபோன்று உதவிகேட்கக்கூடாது எனக்கூறி அங்கிருந்து அனுப்பி வைத்திருக்கிறார். வயலின் ஓசை அரசின் காதுகளில் விழட்டும்!
காந்திகளுக்கு இது கெட்ட காலம் போலிருக்கிறது. பழைய தேர்தல் பிரச்சார வழக்கொன்றில் தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், ராகுலுக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்க, அதைப் பிடித்துக்கொண்டு பா.ஜ.க. அரசு ராகுலின் எம்.பி. பதவியைப் பறித்திருக்கிறது. உள்நாட்டில்தான் இந்த நிலவரம் என்றால், வெளிநாடான கனடாவில் தேசத்தந்தை காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. கனடா நாட்டின் ஆன்டோரியா மாகாணத்தில் ஹாமில்டன் நகரின் சிட்டி ஹால் அருகே இந்தியாவால் அமைத்துத் தரப்பட்ட காந்தியின் வெண்கலச் சிலை அமைந்துள்ளது. 2012 முதலே இருந்துவரும் இந்தச் சிலையின் கீழ்ப்பகுதியில் மார்ச் 23-ஆம் தேதி அதிகாலை காலிஸ்தான் எனவும், மோடி குறித்த அவமதிப்பு வார்த்தைகள் எழுதப்பட்டதோடு, காந்தியின் கைத்தடியில் காலிஸ்தான் கொடியும் பறக்கவிடப்பட்டிருக்கிறது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து கனடா போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சத்தியசோதனை!
-நாடோடி