தமிழகம் முதலிடத்தில் வந்திருக்கிறது. ஆனால் சிலசமயம்… சில முதலிடங்கள் குறித்து பெருமைப் பட முடியாதல்லவா? பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஷம்ஷர்சிங், மாநிலங்களவையில் மார்ச் 14 அன்று நாடு முழுவதிலுமுள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய நீராற்றல் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் துடு, “நாட்டிலுள்ள நீர்நிலைகள் குறித்த 6-வது கணக்கெடுப்பு கடந்த 2017-18 தொடங்கி நடந்துவருகிறது. இந்த கணக்கெடுப்பில் இந்தியா முழுவதும் 18,691 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதில் 8,366 நீர்நிலைகளை ஆக்கிரமித்து தமிழகம் முதலிடத்தைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு அடுத்த இடத்தில் ஆந்திரமும் தெலுங்கானா வும்! குளம்விழுங்கி குமரேசன்களை அரசு கவனிக்குமா?
மனமிருந்தால் மார்க்கமுண்டு. கொச்சியைச் சேர்ந்தவர் வேன் டிரைவர் ஜாசன். உடல்நலக்குறைவால் எந்த வேலைக்கும் போகமுடிய வில்லை. பார்த்தார் மனைவியோடு சேர்ந்து டீக்கடை போட்டார். கடைக்கு வேலை ஆட்களெல்லாம் கிடையாது. ஜாசன், மனைவி, மூன்று குழந்தை கள்தான் கடைப் பணி யாட்கள். குழந்தைகள் படித்துக்கொண்டே கடையிலும் வேலைசெய்தனர். இவர்களின் மூத்த மகள் எட்னாவுக்கு மருத்துவராவது தான் லட்சியம். கடையில் வேலை பார்த்தபடியே படித்து, மெரிட்டில் எம்.பி.பி.எஸ். நுழைவுத்தேர்விலும் தேர்ச்சிபெற்றார். ஆலப்புழா மருத்துவக் கல்லூரியில் மெரிட்டில் இடம் கிடைக்க, விஷயமறிந்த அந்தப் பகுதி மக்கள் கல்விச் செலவுக்கு ஆளாளுக்கு நிதிதிரட்டிக் கொடுத் திருக்கின்றனர். எதிர்பார்த்ததைவிட கூடுதல் நிதி திரண்டதால், அந்தப் பணத்தில் 2 ஏழைப் பெண்களின் கல்விச் செலவுக்கு உதவியுள்ளார் எட்னா. இதைத்தான் வறுமையில் செம்மைம்பாங்க!
சீனாவில் 2019-ல் தாண்டவ மாடிய கொரோனாவை, அந்நாட்டு அரசு மிகத் துரிதமாகச் சமாளித்து கட்டுப்படுத்தியது. ஆனால் அந்த முதல் அலையில் ஆயிரக்கணக்கானோர் பலியானாதாகவும், கம்யூனிச சர்வாதிகாரத்தின் இரும்புத்தன மான கட்டுப்பாடுகள் செய்தியை வெளியே கசியவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும் விமர்சனம் நிலவுகிறது. இந்நிலையில் சீனாவின் பல்வேறு நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித் துள்ளது. ஷாங்காய், ஜில்லின் நகரங்களில் முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப் பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, தொழில்நிறுவனங்கள் முடக்கப் பட்டுள்ளது. 6 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தங்கி சிகிச்சைபெறும் மருத்துவமனையொன்றை ஆறே நாளில் கட்டிமுடிக்கத் திட்ட மிட்டுள்ளது அரசு. இதுவரை 3000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறினாலும், அசல் தொற்றாளர் களின் கணக்கு அதிகமிருக்கும் என பிற நாடுகள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கின்றன. கொரோனாவுக்கு என்ட் கார்டே இல்லையா?
மயிலாடுதுறை மாவட்டம் மன்னன்கோவில் கிராமத்தில் மன்னார்சாமி- நல்லகாத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 4 உலோகத்தாலான சாமி சிலைகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனது. இதுதொடர்பாக சிலைதிருட்டு தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். விசா ரணையில் நெம்மேலியைச் சேர்ந்த சூரியமூர்த்தி எனும் 75 வயது அர்ச்சகர், விசுவநாதசுவாமி கோவிலின் 2 சிலைகளை அதே கோவிலின் கருவறை மண்டபத்தில் மறைத்துவைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். இதுதொடர்பான விசாரணையில் காத்தாயி அம்மனின் வெள்ளிக் கவசம், வெள்ளி குத்துவிளக்கு, வெள்ளிக்கவசம் ஆகியவை அவரது வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிலை களின் மதிப்பு 2 கோடி ரூபாயாம்! பகவானையே சோதிச்சுருக்கார் இந்த அர்ச்சகர்!
அருணாச்சலப்பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நினாங் எரிங் தனிநபர் மசோதா ஒன்றைப் பரிந்துரைத்தார். பெண்களுக்கு மாதவிலக்கின் முதல்நாள் மிகவும் சிக்கலான நாள் என்பதால், அன்றைய தினம் மாணவிகள், பணி செய்பவர்களுக்கு விடுமுறையளிக்கலாம் என்பது மசோதாவின் சாரம். பதிலுக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. லோகம் தஸார், “"சட்டசபை மிகப் புனிதமான இடம். இந்த மாதிரியான விஷயங்களை யெல்லாம் இங்கே விவா திக்கக்கூடாது''’என்றிருக்கிறார். மற்றொரு எம்.எல்.ஏ., “"மாத விலக்கின்போது பெண்களை சமையலறையிலும் ஆண்களுக் கருகிலும் அனுமதிக்கமாட் டோம்''’என்றிருக்கிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சரோ, "சரியான விஷயம்தான். ஆனாலும் இதனை மாதர் சங்கங்களோ, பெண்கள் சார்ந்த அமைப்புகளோ கோரிக்கை வைக்கட்டும்''’என புறந் தள்ளியிருக்கிறார். பா.ஜ.க.ன்னா பிற்போக்கு ஜனதா பார்ட்டியோ!
உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆனால் உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் நிலையிலுள்ள ரஷ்யா, அதைக் காதில் வாங்கும் நிலையிலில்லை. இதுவரை உக்ரைன் நகரங்கள் மீது 950 ஏவுகணைகளை வீசியுள்ளது. இதுதவிர குண்டுவீச்சுத் தாக்குதல் தனி. பலியானவர்களின் எண் ணிக்கை பத்தாயிரத்தையும் கடந்துள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் இதுவரை 2400 பேர் இறந்துள்ளனர். இந்நகரில் தியே ட்டர் ஒன்றில் 1000 பேர் வரை தஞ்சமடைந்திருந்த நிலையில், அந்த தியேட்டரைக் குறிவைத்து குண்டுவீசியுள்ளது ரஷ்யா. இந்தத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை. தவிரவும், கீவ் நகரில் ரொட்டிவாங்க வரிசையில் நின்ற பொதுமக்கள் 10 பேரை ரஷ்ய ராணுவம் சுட்டுக்கொன்றதும் சர்ச்சை யாகியுள்ளது. இதயத்தைக் கழற்றிவிட்டுத்தான் போருக்கு வருவாங்களோ!?…
-நாடோடி